பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட்

ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரத்தில் தாம் பேராயராக இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டத்தில் தவறுகள் நடந்ததாக, முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

தாம் ஏதேனும் 'மிகவும் மோசமான தவறு' செய்திருந்தால் மன்னிக்குமாறு, வாட்டிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையாகத்தால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் முன்னாள் போப்பாண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தனிப்பட்ட தவறுகளை தாம் செய்யவில்லை என்றும் மறுத்துள்ளார்.

நான்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், அவர் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கத்தோலிக்க திருச்சபை குறித்த ஜெர்மன் அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

ஜோசப் ராட்ஸிங்கர் என்ற இயற்பெயரால் அழைக்கப்பட்ட இவர், 1977ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை மியூனிக்கின் பேராயராக இருந்தார்.

இவரது பதவிக் காலத்தில், அங்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தது என்றும், அதனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் தேவாலயப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் என்றும் ஒரு ஜெர்மன் சட்ட நிறுவனத்தின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

தற்போது 94 வயதாகும் முன்னாள் போப், இந்த அறிக்கையில் உள்ள விமர்சனங்களுக்கான தமது முதல் தனிப்பட்ட பதிலில், இவ்வாறு எழுதியுள்ளார்: "கத்தோலிக்க திருச்சபையில் நான் பெரும் பொறுப்புகளை வகித்துள்ளேன். அக்காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த துன்புறுத்தல்கள் மற்றும் தவறுகளுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். "

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது மிகவும் மோசமான தவறு என்று அவர் விவரித்துள்ளார்.

"அந்தக் கூட்டங்களில் நான் கூறியதைப் போலவே, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களையும், மன்னிப்புக்கான எனது இதயப்பூர்வமான வேண்டுகோளை மட்டுமே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த முடியும்," எனக் கூறியுள்ளார்

''மிக விரைவில், என் வாழ்வின் இறுதித் தீர்ப்பர் முன்பு நான் இருப்பேன்,'' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம், இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு, மியூனிக் பேராயராக இருந்தபோது, 1980ஆம் ஆண்டு நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பற்றிய கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவில்லை என்று போப் பெனடிக்ட் மறுத்திருந்தார்.

ஆனால், அறிக்கை வெளியான பிறகு,உண்மையில் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக போப் பெனடிக்ட் கூறியுள்ளார். அச்சமயத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையைத் திருத்தியதில் பிழை நடந்ததாகவும், அது தவறான நோக்கத்தில் செய்யப்படவில்லை என்றும் பெனடிக்டின் தனிச் செயலராக இருந்த பேராயர் ஜார்ஜ் கான்ஸ்வீன் கூறினார்.

போப் பெனடிக்ட் தனது கடிதத்தில் இதைக் குறிப்பிட்டு, "என்னுடைய உண்மைத்தன்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தவும், நான் பொய் கூறியதாக முத்திரை குத்தவும்" இந்த கவனக்குறைவான செயல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நினைத்து தாம் மிகவும் வேதனைப்படுவதாகக் கூறியுள்ளார்.

600 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகிய முதல் நபர் போப் 16ஆம் பெனடிக்ட் ஆவார். சோர்வு உண்டாவதாகக் காரணம் கூறி 2013ஆம் ஆண்டு இவர் போப் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து, அவர் வாட்டிகன் நகரில் பெரும்பாலும் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் போப் எமரிட்டஸ் என்று அழைக்கப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: