You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த கேரள இளைஞர் இந்திய ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து, ராணுவத்தினர் அவரை மீட்கும் பணியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர், பாபுவை மீட்டுள்ளனர் என்று ஏ. என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாபு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, 'பாரத மாதா கி ஜே' என்று உற்சாகமாக கோஷமிட்டனர்.
வன விலங்குகளிடம் இருந்து காத்த நண்பர்கள்
கடந்த திங்கள்கிழமை எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் தனது மூன்று நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு தவறி விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கொடிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி பாபுவை மீட்க முயன்றனர். மலையின் மேல் பகுதிக்குச் சென்று கயிறு மூலம் அவரை மீட்கவும் முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போதுதான், பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது.இதையடுத்து, மலையிலிருந்து கீழிறங்கிய பாபுவின் நண்பர்கள், அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.நள்ளிரவில் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் மலம்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், அவர்களால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
இருப்பினும், பாபுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கேயே தங்கியிருந்த அக்குழுவினர், இரவு நேரத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க, தீப்பந்தங்களையும் ஏற்றினர் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
40 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த பாபுவை தொடர்புகொண்டு பேசிய ராணுவம், அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தது.
சமூக ஊடகங்களிலும் அந்தப் புகைப்படங்கள் பரவி, அதிக கவனம் பெற்ற நிலையில், அந்த இளைஞரை பத்திரமாக மீட்க, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் மீட்புக்குழுக்கள் விரைந்தன.
முன்னதாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மலம்புழா மலையில் சிக்கியுள்ள இளைஞரை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு ராணுவ குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன", என்று தெரிவித்திருந்தார்.
இந்த மீட்பு பணிக்காக, அப்பகுதியை கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தபட்டதாகவும், சூலூரிலுள்ள விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் ஏ. என். ஐ முகமை தெரிவித்திருந்தது.
இளைஞரை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட ராணுவத்தினரை பாராட்டி, முதல்வர் பினராயி விஜயன், " மலம்புழாவில் மலையில் சிக்கியிருந்த இளைஞர் மீட்கப்பட்டதால் கவலைகள் ஓய்ந்துள்ளன. அவரது உடல்நிலையை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு தற்போது வழங்கப்படும். மீட்புப் பணியை முன்னெடுத்த ராணுவ வீரர்களுக்கும், உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி," என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- சசிகலா, இளவரசி மீதான லஞ்ச வழக்கு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா வெளியிட்ட முக்கிய தகவல்
- நரேந்திர மோதி: "எது கூட்டாட்சி தெரியுமா?" - பொங்கிய பிரதமர் - ராகுல் என்ன சொன்னார்?
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொங்கு மண்டலத்தில் கள நிலவரம் என்ன?
- ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்