விவசாயம்: பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெறுவது எப்படி ?

பி.எம்.கிசான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதி அளிக்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இதில் பயன் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் 10வது தவணை நிதியாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன் பெற நிலம் உடைய விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

பி.எம்.கிசான்

பட மூலாதாரம், Getty Images

விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது வருவாய் துறை அதிகாரிகள் நியமித்துள்ள தொடர்பு அலுவலரை (Nodal Officer) அணுக வேண்டும்.

பொது சேவை மையத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்திற்குள் சென்று, விவசாயிகள் முனையை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் புதிய விவசாயி என்பதை க்ளிக் செய்தால், ஆதார் எண் கேட்கும். அதை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து விண்ணப்ப படிவம் வரும், அதில் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, கிராமம், மாவட்டம், மாநிலம், நிலத்தின் விபரம், புல எண், முகவரி, வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சிஉள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு, அவற்றை சரிபார்த்து, சேமிக்க வேண்டும்.

புதிதாக விண்ணப்பிப்பது, ஏற்கெனவே இருக்கும் தகவலை மாற்றுவது, பயனாளர் தகவல் அறிவது, விண்ணப்பத்தின் நிலையை அறிவது என்பன உள்ளிட்டவற்றை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்.

நிதியுதவி பெற விண்ணப்பித்த பின்னர் குறிப்பிட்ட விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து மதிப்பீடு செய்யப்படும்.

மாவட்ட வாரியான விண்ணப்பங்கள் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்புவார்கள்.

இதையடுத்து தேர்வு செய்யப்படும் தகுதியான விவசாயிகளுக்கு நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்,

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, இந்திய அரசு வழங்கிய குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளருக்கான சான்றிதழ், ஜன் தன் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இது மட்டுமின்றி, PMKISAN எனும் செல்போன் செயலியும் (மொபைல் ஆப்) உள்ளது. இதன்வழியாகவும் விண்ணப்பம் மற்றும் தகவல்களை பெறலாம். அதேநேரத்தில், நிறுவன விவசாயிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மாதம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டதின் கீழ் பயன்பெற முடியாது.

குத்தகை விவசாயிகளையும் சேர்க்க கோரிக்கை

விவசாயிகளிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன் பெற முடியவில்லை.

குறிப்பாக குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பி.எம்.கிசான்

பட மூலாதாரம், Swamimalai VimalNathan

இது குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ``இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தில், ஒரே ஒரு குறையும் உள்ளது. அறநிலையத்துறை, திருக்கோயில்கள், மடங்கள், வக்பு வாரியம், சத்திரம் நிர்வாகம், அறக்கட்டளைகளின் நிலங்கள் என நாடு ழுவதும் சுமார் 26 லட்சம் ஏக்கர் அளவிலான நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 3.52 லட்சம் பேர் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 2.5 கோடி விவசாயிகள் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். அவர்கள் இந்த திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் வெள்ள, வறட்சி நிவாரணங்களை குத்தகை விவசாயிகள் பெறுகின்றனர். ஆனால், பிரதமரின் உதவித் தொகை மட்டும் குத்தகை விவசாயிகளுக்கு கிடைக்காமல் இருப்பது முரணாக உள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் பாரபட்சமாகவும் உள்ளது. ஆகையால் மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளோம்.

எனவே, குத்தகை விவசாயிகளையும் இத்திட்டத்தில் சேர்த்து, நிதியுதவியை ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.''என்கிறார்.

தொடர்பு கொள்ள உதவி எண்கள்

கடந்த 2019ம் ஆண்டு திட்டம் தொடங்கி முதல் தவணையில் 3.16 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர். பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தற்போது 10வது தவணையில் 10 கோடியைக் கடந்துள்ளது. இதை 14 கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்தும் நிதியுதவி கிடைக்காதவர்கள், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலவச அழைப்பு எண் 1800 1155 266, உதவி எண் 155261, 011-24300606, 011-23381092, 23382401, 0120-6025109 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: