Top 5 Tamil: குற்றங்கள் குறித்து பேசும் யூட்யூப் சேனல் - யார் இந்த T5T சரவணன்?

VIGNESH SARAVANAN

பட மூலாதாரம், VIGNESH SARAVANAN

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

"அப்படி ஒரு இரவில் அந்தப் பெண் தப்பியதற்கு என் காணொளிகள் தான் காரணம் என்பதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி. ஒரு பொறியாளராக இருந்தபோது கிடைத்த மகிழ்ச்சியை விட இந்த யூட்யூபர் வாழ்க்கையில்தான் நான் முழுமையாக உணர்கிறேன்"

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த யூட்யூபர் விக்னேஷ் சரவணனின் கதை இது. 2014இல் கணிப்பொறியியல் துறையில் பொறியியல் முடித்த இவர், தற்போது பிரபல யூட்யூபராக இருக்கிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களின் பின்னணியையும் அது கண்டுபிடிக்கப்பட்ட விதங்களையும் உயிரோட்டத்துடன் ஆவணப்படுத்துவது இவரது யூட்யூப் சேனலின் சிறப்பம்சம் .

சரவணனின் இந்தப் பயணம் தொடர்பாக மேலும் அறிய அவரிடம் பேசினோம்.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்?

"சிறுவயது முதலே எனக்கு டிஸ்கவரி சேனல் பார்ப்பது, மர்மங்கள், விசித்திரமான குற்றச்சம்பவங்கள் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதேபோன்ற தொனியில் பேசவும் முயற்சி செய்து, நண்பர்களிடம் பேசியும் காட்டுவேன். இப்படியாக மெல்ல மெல்ல வளர்ந்ததுதான் இதுபோன்ற சம்பவங்களை விவரிக்கும் தொனியிலான குரல். அதைப் பயன்படுத்திதான் முதல் வீடியோவை முயற்சி செய்தேன்.

நான் பதிவிட்ட முதல் வீடியோவே பிரபலமான கொலை வழக்கான எலிசா லேம் கொலை வழக்குதான். அந்த கொலையையும் அதைச் சுற்றியுள்ள சதிக்கோட்பாடுகளையும் விவரித்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் தொடர்ந்து இப்படி காணொளிகளைச் செய்யத் தூண்டியது." என்கிறார்.

VIGNESH SARAVANAN

ஆனால், ஏன் இப்படி ஒரு பிரிவை தேர்வு செய்ய வேண்டும்?

அதற்குக் காரணம், எனக்குக் கிடைத்த நல்ல பின்னூட்டங்கள்தான். அது அளித்த மகிழ்ச்சியின் உத்வேகத்தில்தான் தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச் சம்பவங்களை விவரித்து காணொளிகள் தயாரிக்கத் தொடங்கினேன். குறிப்பாக பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் பாராட்டி பின்னூட்டமிடுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களுக்கும் கூட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து குழந்தைகளை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்க முடிகிறது என்றும் பெற்றோர்கள் என்னிடம் சொல்வதுண்டு. அந்த வரிசையில் ஒரு 21 வயதுப் பெண் ஒருவர், தன் இயல்பு வாழ்கையில், ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருந்து தப்பியபின், அதற்கு நான் வெளியிட்ட வீடியோக்கள்தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

என்ன சம்பவம் அது?

21 வயது மதிக்கத்தக்க கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு பயணவழி உணவகத்தில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டபோது, அங்கிருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, வாசலில் இரு ஆண்கள் நின்றுள்ளனர்.

கவிதா உள்ளே செல்லத் தயங்குவது போலத் தெரிந்ததும், 'உள்ளே போங்க' என்று அவர்கள் சொல்ல, உள்ளே நுழைய எத்தனித்தவர், ஏதோ மனக்குழப்பத்தால் உள்ளே செல்லாமல் மீண்டும் பேருந்துக்கே வந்துவிட்டார். ஆனால், சிறிது நேரம் கழித்து பெண்கள் கழிவறையின் பின்னிருந்து ஒரு ஆண் வெளியே வந்துள்ளார்.

இதுகுறித்து எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவித்த அந்தப் பெண், தான் தப்பியதற்குக் காரணம் டாப் 5 தமிழ் சேனலில் தான் பார்த்த வீடியோக்கள்தான் என்றும், அதற்கு முன்பு இப்படித் தனக்கு தோன்றியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அளித்த பின்னூட்டம்

பட மூலாதாரம், VIGNESH SARAVANAN

'தடயவியல் மாணவர்களுக்கும் உதவுகிறது'

"மேலும், தடயவியல் பேராசிரியர்களும் என் யூட்யூப் சேனலைப் பார்க்க பரிந்துரைப்பதாக மாணவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். இது இன்னும் கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது." என்கிறார் விக்னேஷ் சரவணன்.

ஒரு வழக்கை என்னென்ன வழிகளில் எல்லாம் தீர்க்க முடியும் என்ற விளக்கமும், வெளிநாட்டில் பின்பற்றப்படும் தடயவியல் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் காணொளிகள் இருப்பதாக மாணவர்கள் பலரும் தெரிவிப்பதாக கூறுகிறார் அவர்.

அதே சமயம், தொடர்ச்சியாக விதவிதமான குற்றங்கள் குறித்தும் அது அரங்கேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் பேசுவதன் மூலம், புதிய புதிய ஆபத்துகளை உருவாக்குவதற்கான முன்னுதாரணங்களையும் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்றுதானே பொருள்படுகிறது என்று கேட்டபோது,

"ஆம். கொலையாளியின் அல்லது குற்றவாளியின் தரப்பை எடுத்துக் கொண்டு குற்றம் இழைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், நீங்கள் எவ்வளவு திறமையாக தவறிழைப்பதாக நினைத்தாலும் நிச்சயமாக நீங்கள் மாட்டிகொள்வீர்கள். காவல்துறை, தடயவியல் துறை என அனைத்தும் நாளுக்கு நாள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் தவறிழைத்தால் நிச்சயம் தண்டனை உண்டு என்றுதான் வீடியோக்களில் அழுத்தமாகப் பதிவு செய்வேன்." என்று பதிலளித்தார்.

மொத்தத்தில், நான் ஒரு ஐ.டி. ஊழியராகத்தான் என் வாழ்க்கையைக் கழிப்பேன் என்று எண்ணியிருந்தேன். ஆனால், எப்படி யூட்யூப் என் வாழ்க்கை ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. பள்ளிக்காலம் முதலே, சூரியன், நட்சத்திரங்களுக்குப் பின்னே இருக்கும் மர்மங்கள் என்ன என்பது குறித்து ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்று அதே ஆர்வம் என் வாழ்க்கையாக மாறிவிட்டது.

ஆனால், இப்போதைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். தனிமனிதனாக நானே இயங்கி வரும் என் யூட்யூப் சேனலில் இன்னும் தரமான காணொளிகள் உருவாக்க வேண்டும். அதில்தான் எனக்கு முழு மகிழ்ச்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: