யூட்யூபர் ஆன தமிழக மீனவர் - 'உங்கள் மீனவனின்' சாதனை கதை

உங்கள் மீனவன் கிங்ஸ்டன்
படக்குறிப்பு, கிங்ஸ்டன்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது இலங்கை கடற்படை பிரச்னை, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லை, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என்பது தான்.

ஆனால் அதிலிருந்து சற்று வித்தியாசமாக மூக்கையூரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஒன்பது அரை லட்சம் பார்வையாளர்களுடன் 'உங்கள் மீனவன்' என்கின்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். ஒரு மீனவர் யூட்யூபரானது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

உங்கள் மீனவன்:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ளது மூக்கையூர் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் தான் மீனவர் கிங்ஸ்டன். ஆறாம் வகுப்பு வரை படித்த கிங்ஸ்டன், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் சிறு வயதில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்.

சிறு வயதில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் கிங்ஸ்டன் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள், சவால்கள் உள்ளிட்டவைகளை கண் கூடாக பார்த்து இருக்கிறார். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். கடலில் ஏற்படும் இவை அனைத்தும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதனை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் முதன் முதலில் டிக்டாக் மூலம் மீனவர்கள் படும் துயரங்கள், சவால்கள் மற்றும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் குறித்து கிங்ஸ்டன் பதிவு செய்ய ஆரம்பித்தார்.

கிங்ஸ்டன் செய்த டிக்டாக்கிற்கு உள்ளூர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இதனை உலக மக்கள் அறிய செய்ய வேண்டும் என முடிவு செய்து 'உங்கள் மீனவன்' என்கின்ற யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் மீனவர்களின் வாழ்க்கை, கடல் பயணம், மீன்பிடித் தொழில், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய அனுபவ தகவல்களை காணொளிகளாகப் பதிவு செய்து வெளியிட்டார்.

இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கிங்ஸ்டன் மேலதிக காணொளிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்.

டிக்டாக்கில் தொடங்கிய பயணம்

உங்கள் மீனவன் கிங்ஸ்டன்
படக்குறிப்பு, உங்கள் மீனவன் கிங்ஸ்டன்

சரி, மீன் பிடிக்க செல்லும் மீனவர் எப்படி வீடியோ எடுக்கிறார்? அதில் ஏற்படும் சவால்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள கிங்ஸ்டன் வெளியிடும் வீடியோவை பார்க்கும் அதிகமானோருக்கு ஆர்வம் உண்டு. எப்படி கிங்ஸ்டன் நடுக்கடலில் வீடியோ எடுத்து பதிவு செய்கிறார் என்பதை பார்க்கலாம்.

மீனவர் கிங்ஸ்டன் அதிகாலையிலேயே தனது வீட்டில் இருந்து டீசல், உணவு (கஞ்சி பானை) உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு தனது சகோதரர்களுடன் மூக்கையூர் துறைமுகம் சென்று அங்கிருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்கிறார்.

துறைமுகத்தில் இருந்து புறப்படும் மீனவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் பயணித்து கடலில் 10 முதல் 15 நாட்டிக்கல் தூரம் வரை செல்வார்கள். அந்த பயண நேரத்தில் மீனவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். பயண நேரத்திலும் மீனவர் கிங்ஸ்டன் இன்று யூட்யூப்பில் என்ன கன்டென்ட் போடலாம், எப்படி வீடியோ எடுக்கலாம் என திட்டமிடுகிறார்.

பின்னர் மீன் பிடிக்கும் இடம் வந்தவுடன் மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகிறார்கள் அவர்களுடன் மீனவர் கிங்ஸ்டனும் ஒரு கையில் செல்போனில் மீனவர்கள் மீன் பிடிக்கும் வீடியோவை பதிவு செய்து கொண்டே மறு கையில் மீன்பிடி வலைகளை கடலில் இருந்து வாங்குகிறார். மீனவர்கள் வலையில் சிக்கும் மீன்கள் குறித்த சிறப்பு தகவல்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்கிறார்.

இயற்கை பேரிடர் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு:

உங்கள் மீனவன் கிங்ஸ்டன்
படக்குறிப்பு, உங்கள் மீனவன் கிங்ஸ்டன்

சில நேரங்களில் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கன மழை, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மீனவர்கள் எப்படி படகுகளில் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதனை வீடியோவாக பதிவு செய்கிறார்.

அப்படி கிங்ஸ்டன் எடுக்கும் வீடியோக்களை கோர்வையாக எடிட் செய்து படகு மீன்பிடி துறைமுகம் வந்து சேரும் முன் வீடியோவாக தயார் செய்கிறார். கடலில் எடுக்கும் வீடியோ என்பதால் கடல் காற்று சத்தம் அதிகமாக இருக்கும் எனவே அதனை நீக்கி விட்டு கரைக்கு வந்து அந்த வீடியோக்கான விளக்க ஆடியோவை சேர்த்து அதனை முழு வீடியோவாக தயார் செய்கிறார்.

அப்படி எடிட் செய்யும் வீடியோக்களை யூடிப்பில் பதிவு செய்ய, மூக்கையூரில் இணையதளம் போதுமான வேகம் இல்லாததால் கிங்ஸ்டன் மூக்கையூர் அருகே உள்ள சாயல்குடிக்கு சென்று அந்த வீடியோவை 'உங்கள் மீனவன்' என்கின்ற அவரது யூட்யூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். இவரின் வீடியோக்களுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

யூட்யூபில் மீனவர்களின் சவாலான வாழ்கை பயண வீடியோக்கள்

உங்கள் மீனவன் கிங்ஸ்டன்
படக்குறிப்பு, உங்கள் மீனவன் கிங்ஸ்டன்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிங்ஸ்டன், 'ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் எனது சொந்த ஊர். நான் சிறு வயதிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறேன். ஆரம்பத்தில் டிக்டாக்கில் சினிமா வசனத்திற்கு வாயசைத்து டிக்டாக் செய்தேன் அதற்கு போதுமான அளவு வரவேற்பு இல்லை.

பின்னர் ஒரு நாள் கடலில் இருந்து பெரிய சுறா மீன் பிடித்து அதை என் தோளில் தூக்கி போட்டு சினிமா வசனம் செய்தேன் அதற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது.

அன்றில் இருந்து சினிமா வசனங்களை விட்டு விட்டு கடலுக்கு செல்லும் போது வலையில் சிக்கும் ஒரு மீனைப் பற்றியும், என்னுடைய அனுபவத்தையும் எனது சொந்த குரலில் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தேன். என்னை லட்சக்கணக்கானோர் டிக் டாக்கில் பின் தொடர ஆரம்பித்தனர்.

அதில் சிலர் நீங்கள் மீனவர்களின் வாழ்க்கை, கடல் பயணம், மீன்பிடித் தொழில், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய அனுபவ தகவல்கள் உள்ளிட்டவைகளை யூட்யூப் சேனல் தொடங்கி காணொளியாக பதிவு செய்யலாமே என கூறியதையடுத்து 'உங்கள் மீனவன்' என்ற யூட்யூப் சேனலை தொடங்கினேன் என்றார் கிங்ஸ்டன்.

மூன்றே மாதத்தில் 6 லட்சம் சந்தாதாரர்கள்:

தொடர்ந்து பேசிய கிங்ஸ்டன், யூட்யூப் சேனல் தொடங்கி 3 மாதத்தில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் ஆனார்கள். சப்ஸ்கிரைபர்களுக்கு நல்ல வீடியோ எப்படி கொடுக்க முடியும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது.

ஆறாவது மட்டுமே படித்த என்னால் செல்போன்களில் எடுக்கும் வீடியோக்களை எப்படி எடிட் செய்வது என்று தெரியாமல் இருந்தது. பின் நண்பர்கள் சிலர் உதவியுடன் செல்போன்களில் எடிட் செய்யும் ஆப்கள் குறித்து தெரிந்து கொண்டேன். அதனை பயன்படுத்தி என்னால் முடிந்த வரை வீடியோக்களை எடிட் செய்து பதிவு செய்து வருகிறேன்.

அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் நான் கரைக்கு வந்ததும் வீடியோவை எடிட் செய்து அதனை அப்லோட் செய்வேன். ஆனால் நான் இருக்கும் மூக்கையூர் கிராமத்தில் இணையதள வசதி வேகமாக இருக்காது என்பதால் யூட்யூபில் விடியோவை பதிவு செய்ய ஏழு கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று சாயல்குடியில் உள்ள ஒரு டீ கடையில் உட்கார்ந்து வீடியோவை அப்லோட் செய்வேன்.

ஆரம்ப காலத்தில் நமது யூட்யூப் சேனல்களில் வரும் டால்பின், சுறா, நீல திமிங்கலம், கலர் மீன்கள் உள்ளிட்ட வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்கள் இந்த வகையான மீன்கள் வெளிநாட்டு கடலில் மட்டுமே இருப்பதாக நினைத்து நம்பிக்கையில்லாமல் கமெண்ட் மூலம் கேட்க தொடங்கினர்.

அதிலிருந்து இவ்வாறான அரிய வகை மீன்களை கடலில் பார்த்தால் உடனடியாக கடலில் இருந்து நேரடி தகவல்களை கொடுக்க தொடங்கினேன். இவை அனைத்தும் வெளி நாடுகளில் மட்டும் அல்ல இந்திய கடலிலும் உள்ளது. அது நம் தமிழக மீனவர்களின் வலையில் சிக்கும் என நம்ப தொடங்கிய பார்வையாளர்கள் அவ்வாறான வீடியோக்களை அதிகம் பகிர தொடங்கினர்.

மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இயற்கை பேரிடர்களில் சிக்கி எப்படி மீன்பிடி படகுகளில் தங்களை காத்துக் கொள்கிறார்கள் என்கின்ற சுவாரஸ்யமான காணொளிகளை செல்போன்களில் எடுத்து யூட்யூபில் பதிவு செய்வேன் அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது என்றார் மீனவர் கிங்ஸ்டன்.

மூன்று யூட்யூப் சேனல்கள்

உங்கள் மீனவன் கிங்ஸ்டன்
படக்குறிப்பு, கிங்ஸ்டன்

தொடர்ந்து பேசிய மீனவர் கிங்ஸ்டன், மீனவர்கள் மீன் பிடிக்கும் போது ஏற்படும் காயங்கள், மீனவர்கள் எந்த மீன்களை பிடிக்கலாம் எது தமிழக அரசால் தடை செய்யப்பட்டது என்கின்ற தகவல்களை பகிர்வதுடன் எந்த மீன்களை எப்படி சமைத்து சாப்பிடலாம் போன்ற காணொளிகளையும் பதிவேற்றி வருகிறேன்.

மீனவர்களின் வாழ்கையையும், கடலில் நடக்கும் சுவாரஸ்யத்தையும் விளக்க 'உங்கள் மீனவன்' என்கின்ற யூட்யூப் சேனல், கடல் வாழ் உயிரின உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை விளக்க 'உங்கள் மீனவன் உணவகம்' என்ற யூட்யூப் சேனல், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேச 'சரக்கு கப்பல்' என்கின்ற யூட்யூப் சேனல் என தற்போது 3 சேனல்களை கிங்ஸ்டன் இயக்கி வருகிறார்.

இவை மூன்றுக்கும் பார்வையாளர்கள், பொதுமக்கள் இடையை நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், யூட்யூப் நிறுவனத்தில் இருந்து போதிய வருமானம் கிடைத்து வருவதாக மீனவர் கிங்ஸ்டன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, கொரோனா வேலையின்மை: காரையே அலுவலகமாக மாற்றியவரின் வெற்றிக் கதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :