தமிழ்நாடு: நெருக்கடியில் ஜவுளித்துறை, அதிகரிக்கும் பருத்தி விலை - அரசு என்ன செய்யப்போகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது ஜவுளித்துறை. இந்தியாவில் நான்கரை கோடி மக்கள் இந்த துறை மூலம் நேரடியாகவும், பல கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய ஜவுளித்துறை தற்போது மூலப் பொருட்கள் விலை உயர்வு, விசைத்தறி வேலைநிறுத்தம் என நெருக்கடியான ஒரு சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 7% ஜவுளித்துறையின் பங்களிப்பாக உள்ளது.
ஜவுளித்துறைக்கு அடிப்படையான மூலப் பொருளாக விளங்கக்கூடியது பருத்தி. அதிலிருந்து நூல் தயாரிக்கப்பட்டு விசைத்தறி மூலம் துணியாக மாற்றப்பட்டு பல தரப்பட்ட ஜவுளிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பருத்தியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 2020-ல் ஒரு கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்ட பருத்தி இன்று ரூ.225-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் நூல்களின் விலையும், அதனைத் தொடர்ந்து ஜவுளிப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு தலையிட்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது தொடர்பாக திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய இரு தினங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
மறுபுறம் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கவில்லை எனக் கடந்த ஜனவரி 9-ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பூபதி, `தற்போது வரை ரூ.1000 கோடி மதிப்பிலான உற்பத்தி தடைபட்டுள்ளது ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வு மற்றும் கொரோனாவை காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்க மறுக்கின்றனர். வருகிற 24-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தமிழக முதல்வருக்கு அஞ்சல் மூலமாக ஐந்து லட்சம் குறுஞ்செய்தி அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்` என்றார்.
பருத்தி உற்பத்தி சரிவு
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா, `இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பருத்தி உற்பத்தி செய்யப்படும் என்பதை மத்திய அரசு முன்கூட்டியே மதிப்பீடு செய்யும். அதன் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு தேவைப்படும் என்பது போக ஏற்றுமதிக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.

அவ்வாறு கடந்த ஆண்டிற்கான இந்திய பருத்தி சங்கத்தின் புள்ளி விவரத்தில் மிகப்பெரிய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மதிப்பீடு செய்யப்பட்ட அளவு உற்பத்தி நடைபெறவில்லை. இதை கணிக்கத் தவறிய மத்திய அரசு ஏற்றுமதியை தடையின்றி அனுமதித்தது. இதனால் உள்நாட்டு தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
நூல் விலை உயர்வால் நூற்பாலைகளில் நூல்கள் தேக்கம் அடையத் தொடங்கிவிட்டன. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊக வணிகத்தில் பருத்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, இதுவும் நிறுத்தப்பட வேண்டும்` என்றார்.
தமிழக அரசு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த முத்துரத்தினம், `பருத்தி உற்பத்தி போதுமான அளவில் நடைபெறவே செய்கிறது. ஆனால் வியாபாரிகள் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர். நூற்பாலைகளும் பருத்தி விலை உயர்வை வைத்து நூல் விலையையும் உயர்த்தி லாபம் பார்க்கின்றனர்.

இதனால் உற்பத்தியாளர்கள் தான் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். மத்திய அரசு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இறக்குமதி செய்யும் பருத்திக்கு விதிக்கப்படும் 11% வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயப் பொருட்களைப் போல பருத்தியையும் கொள்முதல் செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவின் 50% நூல் உற்பத்தி தமிழகத்தில் தான் நடக்கிறது.
மத்திய அரசு தேசிய அளவில் செய்வதைப் போல தமிழக அரசு மாநில அளவில் பருத்தியை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். இந்தியாவின் 50% நூல் உற்பத்தி நடைபெறுகிற தமிழ்நாட்டில் 4% தான் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் வெளி மாநிலங்களிலிருந்து தான் பருத்தியை பெறுகிறோம். தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்
பணமதிப்பிழப்பிலிருந்து தொடர் சரிவு
2016-ல் பணமதிப்பிழப்பு, 2017-ல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே ஜவுளித்துறை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. பழைய நிலைக்கு இந்திய ஜவுளித்துறை இன்னும் திரும்பவே இல்லை என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா 2020-ல் ஆறாவது இடத்திற்குச் சென்றுவிட்டது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளின் மதிப்பும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 2017-ல் ரூ.1,16,508 கோடியாக இருந்த ஏற்றுமதி 2021-ல் ரூ.90,624 கோடியாக சரிந்துள்ளது. 2017-ல் ரூ.55,150 கோடியாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி 2022-ம் ஆண்டில் ரூ.44,250 கோடியாக சரிந்துள்ளது.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய முத்துரத்தினம், `சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் சீனாவின் சந்தை மதிப்பு 38%, ஆனால் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 4% தான். இந்தியாவை விட சிறிய நாடுகளான வங்கதேசம், வியாட்நாம் கூட சர்வதேச அளவில் நம்மைவிட பெரிய சந்தை மதிப்பை வைத்துள்ளன. ஆனால் இந்த நாடுகளும் மூலப் பொருட்களை இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன. இந்திய வியாபாரிகள் சீனா மற்றும் வங்கதேசத்திலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டனர். இதில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணவில்லை என்றால் ஜவுளித்துறை பெரும் சரிவை சந்திக்கும்' என்றார்.
இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம், சீனா மற்றும் வியட்நாம் தான் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

கொரோனாவால் பெரும் பின்னடவைச் சந்தித்த இந்திய ஜவுளித்துறையின் உள்நாட்டு சந்தையும் (2019 - 106 பில்லியன், 2020 - 80 பில்லியன், 2021 - 99 பில்லியன் (அமெரிக்க டாலர் மதிப்பில்) ஏற்றுமதியும் (2019 - 34 பில்லியன் , 2020 - 31 பில்லியன் , 2021 - 40 பில்லியன் (அமெரிக்க டாலர் மதிப்பில் ) தற்போது தான் கொரோனாவுக்கு முந்தைய அளவை அடையும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத நெருக்கடி மீண்டும் பெரும் சரிவை உருவாக்கிவிடும் எனவும் அரசாங்கம் விரைவாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஜவுளித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், R.GANDHI FB
தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அப்போது, `ஜவுளித்துறையை வளர்க்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. திமுக அரசு பதவியேற்ற உடன் பருத்தி மீது இருந்த 1% செஸ் வரியை நீக்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசு தான் விரைந்து தீர்வு காண வேண்டும்.
இந்திய பருத்தி கழகத்தைப் போல தமிழ்நாடு பருத்தி கழகம் அமைத்து மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்யும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது. இதற்கு அதிக நிதி மூலதனம் தேவை என்பதாலும் தற்போதைய நிதி நிலைமையாலும் இந்த நடவடிக்கை தாமதமாகிறது. ஆனால் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலே பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களும் அரசிடம் உள்ளன. தமிழக அரசால் முடிந்த அனைத்தையும் செய்து தர தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்துவோம்` என்றார்.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













