மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 624 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி எழுத்தாளர் சு வெங்கடேசன் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று என்று 25 பேர் என மொத்தம் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகளில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த 25 வீரர்கள் 7வது சுற்றில் பங்கேற்றனர்.
இதில், கார்த்திக் என்பவர் 24 மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்றார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
வலையங்குளம் முருகன் என்கிற மாடுபிடி வீரர் 19 காளைகளைப் பிடித்து இரண்டாமிடம் பிடித்தார். அவருக்கு போட்டியின் தொடக்கத்திலேயே காயம்பட்டது. ஆனாலும் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் களத்துக்குத் திரும்பி காளைகளை பிடித்தார். அவருக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
12 காளைகளை அடக்கிய பரத் மூன்றாமிடம் பிடித்தார்.
மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயம் என்பவரின் காளை, சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் நிறைவாக வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் முதலிடம் பெற்ற கார்த்திக் பேசும்போது, ''கடந்த முறை 16 மாடுகளை பிடித்தேன். இப்போது 24 மாடுகள் பிடித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஜல்லிக்கட்டு களத்தில் பல புதிய உறவுகளைப் பெற்றேன். அவர்கள் நிறைய ஊக்கப்படுத்தினார்கள். அனைவருக்கும் நன்றி.'' என்று கூறினார்.
கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் படங்கள் இதோ..

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரானபழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து புகழ்பெற்ற மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்க முயலும் இளைஞர்.

வாடிவாசலில் இருந்து காளை பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே மாட்டைப் பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி இதோ.

ஒருபக்கம் அடங்க மறுக்கும் காளைகள், மறுபக்கம் அடக்க முனையும் இளைஞர் படை. ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி இரு தரப்பு.

ஜல்லிக்கட்டை காண, குறைவான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், காளைகளின் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சமில்லை.
இருப்பினும் குறைவில்லாத மக்களின் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையில் சிக்காமல் திமிறி வரும் காளை.

திமில் திமிற, உடலில் வலு புடைக்க தொட்டுப் பார் என தெறிக்க விடும் கம்பீரத்தோடு, எவரும் தொடவில்லை என்கிற திமிரோடு வீரநடைபோடும் காளை.

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்.

மாட்டைப் பிடிக்க சூழ்ந்திருக்கும் இளைஞர்களுக்கு சவால்விடும் பாணியில், வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், கால்களைக் கொண்டு மண்ணைக் கோரி இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் முனைப்பில் விவரங்களைச் சரிபார்க்கும் காவல் துறை அதிகாரிகள்.

மாதக் கணக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்த தங்கள் காளைகளை, வாடிவாசல் வழி போட்டிக்கு அனுப்ப வரிசையில் நிற்கும் காளைகள் மற்றும் காளை வளர்ப்பவர்கள்.
ஜல்லிக்கட்டை விறுவிறுப்பாக்கும் வர்ணனையாளர் மைக் சரவணன் - காணொளி
ஜல்லிக்கட்டில் 'கெட்டவன்' - அதிரடிக்கு பெயர் பெற்ற மதுரை காளை - காணொளி
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண் - காணொளி
பிற செய்திகள்:
- மனித உடலில் பன்றியின் இதயம்: 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறை சென்ற இந்திய மருத்துவர்
- நரேந்திர மோதி: "கொரோனா தடுப்பூசி வதந்திகளை தடுக்க ஒத்துழையுங்கள்"
- மனிதருக்கு பன்றி இதய மாற்று சிகிச்சை: முஸ்லிம், யூத மதத்தினர் ஏற்பார்களா?
- கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொங்கல் விடுமுறைக்கு பேருந்துகளில் அலைமோதிய பயணிகள்
- டெஸ்லா இந்தியாவில் தொழில் தொடங்குமா? ஈலோன் மஸ்க் ட்வீட்டால் குழப்பம்
- எத்தியோப்பியா டீக்ரே நெருக்கடி: உதவிப் பொருட்கள் பயனர்களை அடைவதில் என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்ப்











