தமிழக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.கவினர் செலவு செய்வார்கள், நானும் தயார் - மேஜையில் 25 லட்சம் ரூபாயை கொட்டிய பா.ஜ.க பிரமுகர்

கட்டுகட்டாகப் பணம் - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுகட்டாகப் பணம் - மாதிரிப் படம்
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நடத்தப்பட்ட வேட்பாளர் நேர்காணலில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் பணத்தைக் கொட்டிய சம்பவத்தால் கமலாலய நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ` தி.மு.கவினர் நிறைய செலவழிப்பார்கள் என்பதால் நானும் தயாராக இருக்கிறேன் என அந்த நபர் கூறினார். அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்' என்கின்றனர் பா.ஜ.க தரப்பினர்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக கமலாலயத்தில் நேர்காணல் ஒன்றை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். கடந்த 5 ஆம் தேதி முதல் நடந்து வரும் இந்த நேர்காணலில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நேர்காணலை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல மாநகராட்சி பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமையன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 156 ஆவது வட்டத்துக்கான நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், `தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்வீர்கள்?', `உங்கள் வார்டில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?' என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு அவரவர் தங்கள் தகுதிக்கேற்ப எவ்வளவு செலவு செய்ய முடியும் என விவரித்துள்ளனர்.

அப்போது நேர்காணலில் பங்கேற்ற பா.ஜ.க பிரமுகர் ஒருவர், `என்னால் ஒரு கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய முடியும். அதற்குத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறிவிட்டு கையில் வைத்திருந்த பையிலிருந்த 25 லட்ச ரூபாய் பணக்கட்டுகளை மேஜையில் வைத்துள்ளார். இதனால் நேர்காணல் நடத்திய குழுவினர் அதிர்ச்சியடைந்து அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

``என்ன நடந்தது?'' என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` தற்போது வரையில் 7 மாவட்டங்களில் நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. தென்சென்னை, சென்னை கிழக்கு-மேற்கு, மத்திய சென்னை கிழக்கு-மேற்கு, வடசென்னை கிழக்கு-மேற்கு என 200 வார்டுகளுக்கு மட்டும் முதல்கட்டமாக நேர்காணலை நடத்தியுள்ளோம். இதில் 1600 பேர் பங்கெடுத்தனர்.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக

அவர்களிடம், `எவ்வளவு நாள் கட்சியில் இருக்கிறீர்கள், எப்படி வெற்றி வாய்ப்பு உள்ளது?' என வழக்கம்போல கேள்விகளை எழுப்பினோம். இது மண்டல அளவில் நடக்கிறது. அடுத்ததாக, கோவை மண்டலம், மதுரை மண்டலம் ஆகியவற்றில் நேர்காணல் நடக்கவுள்ளது. இதன்பிறகு மாநில தேர்தல் பணிக்குழு இதனைப் பரிசீலிக்கும். பின்னர் மாநிலத் தலைவர் அறிவிப்பினை வெளியிடுவார்'' என்றார்.

ஆலந்தூர் பா.ஜ.க பிரமுகர் மேஜையில் 25 லட்சத்தைக் கொட்டியதாகத் தகவல் வெளியானதே?' என்றோம். ``அவர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அவர் அவ்வாறு செய்ததும் உடனே கண்டித்தோம். `தேர்தலில் அனுமதிக்கப்பட்ட செலவு என்னவோ, அதைச் செய்தால் போதும். இப்படியெல்லாம் செய்யக் கூடாது' எனக் கூறிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு பத்திரமாகப் போகுமாறு கூறிவிட்டோம்.

ஆனால், அவரோ, `தி.மு.கவினர் நிறைய செலவழிப்பார்கள், அதனை மீறி செலவு செய்வதற்கு இப்போதே தயாராக வேண்டியுள்ளது. நான் தயாராக இருக்கிறேன்' என்றார். இதற்கு நாங்கள் பதில் அளிக்கும்போது, `அதனை இங்கே இப்படியெல்லாம் காட்டக் கூடாது. உங்களின் இதர திறமைகளைத்தான் பார்ப்போம். கட்சியில் எந்தளவுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறீர்கள் என்பதைத்தான் பார்ப்போம்' எனக் கூறிவிட்டோம். இதேபோல் வேறு யாரும் செய்யவில்லை. தவிர, அந்த நபர் யார் என்ற அடையாளத்தைக் கூறவும் விரும்பவில்லை'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: