சென்னை மழை: கணிக்க இயலாமல் போனது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கடலூர் உள்பட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மதியம் கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், அமைந்தகரை உள்பட நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதுதொடர்பாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.
தொடர்ந்து 5 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மழையின் அளவு அதிகரிக்கும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக, சென்னையில் பெய்த கனமழையால் சுரங்கப் பாதைகளில் வெள்ளம் வடியாமல் உள்ளதால் மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சுரங்கப்பாதைகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, துரைசாமி சுரங்கப் பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், M.K. Stalin/Twitter
சென்னையில் அதிக கனமழையை அடுத்து அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,` மழையின் காரணமாக 4,200 நுகர்வோர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மொத்தம் 2,223 புகார்கள் வந்துள்ளன. மின்விநியோக பணிகளை சீர்செய்யும் விதமாக 1000 களப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரையில் பெய்ய மழையின் அளவு என்பது 45 செ.மீ ஆகும். ஆனால், 71 செ.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிக அளவாக விழுப்புரத்தில் 119 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 74 சதவிகிதம் அதிகளவில் மழை பெய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒரேநாளில் பெய்த அதிக கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பெரியமேடு, ரிப்பன் மாளிகை, ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவற்றில் நடக்கும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், ` வானிலை ஆய்வு மையத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வரும். இந்தமுறை அவர்களே எதிர்பாராமல் மழை பெய்துள்ளது. மழை நிலவரத்தைத் துல்லியமாகக் கணிக்கும் இயந்திரங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும்' என்றார்.

பட மூலாதாரம், M.K. Stalin/Twitter
அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னை மழை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ` சென்னையில் இந்தளவுக்கு மழை பெய்யும் என்பதற்கான அறிகுறிகள் நேற்று காலை தென்படவில்லை. வானிலை ஆய்வு மையமும் எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. மிகப் பெரும் மழையைக் கணிக்கத் தவறியதில் இருந்தே தோல்வி தொடங்கிவிட்டது. '
'கடந்த காலங்களில் சென்னையில் தொடர்மழை பெய்யும்போது ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். நடப்பாண்ட்டில் நான்குமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது விரும்பத்தக்கது அல்ல.' என குறிப்பிட்டார்.
'சென்னை பெருமழைக்கு காரணம் என்ன ?' -வானிலை ஆய்வு மையம்
சென்னையில் நேற்று பெய்த கன மழைக்கான காரணம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "செயற்கை கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். நேற்றைய தினம், காற்றின் மேலடுக்கு சுழற்சி, திடீரென இடம் மாறியது. இதனால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால், நேற்றைய கன மழையைக் கணிக்க முடியவில்லை.
காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இது மேக வெடிப்பு அல்ல. இந்தகன மழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன." என்றார்.
இந்த மழைக்கு பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமா? என்கிற கேள்விக்கு, "தற்போதுள்ள நிலையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. சென்னையை விட மாவட்டங்களில் பல முறை கன மழை பெய்துள்ளது. அப்போது இது போன்ற கேள்விகள் எழவில்லை. சென்னையில் பாதிப்பு என்றதும் கேள்வி கேட்கிறார்கள்." என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












