நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார்

சாப்டர் மேல்நிலைப்பள்ளி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த பின்பு இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்க, அங்கிருந்த ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை என்றும் மீட்க முயற்சி செய்த மாணவர்களையும் மீட்க விடாமல் தடுத்தனர் என்றும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தக் கூற்று உண்மையானால் நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். ஐந்து மாணவர்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சாப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தது குறித்து பள்ளி நிர்வாகத்தின் கருத்து என்ன என்பதை கேட்பதற்காக பிபிசி தமிழ் பள்ளிக்கு சென்றது. ஆனால் பள்ளிக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பின்னர் சனிக்கிழமை (டிசம்பர் 18) பிற்பகல் பள்ளி நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கும் திருநெல்வேலி திருமண்டல பேராயரைச் சந்திக்கச் சென்றபோது பேராயர் வெளியூர் சென்றுள்ளதாகவும், வந்தவுடன் உங்களை பேராயர் தொடர்பு கொள்வார் எனவும் பேராயர் அலுவலகத்தில் உள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிபிசி தமிழின் தொலைபேசி எண்ணையும் பெற்றுக்கொண்டனர். பேராயர் தரப்பில் இருந்து இதுவரை எந்த நேரடி பதிலும் பிபிசி தமிழுக்கு கிடைக்கவில்லை.

திருமண்டலம் சார்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்த மாணவர்ளின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்திவருவதாகவும் பேராயர் செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணை அறிக்கை

கழிவறை சுவர் இடிந்து விழுந்தது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கோட்டாட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் முதல்கட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணுவிடம் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணைக்கு தேவையான ஆவணங்களை கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு சிறப்பு குழு உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என, கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை பள்ளி விபத்து

விபத்தின்போது படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மாணவர்களை அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காப்பற்ற முன்வரவில்லை என, அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

”உயிரிழப்புக்கு ஆசிரியர்களின் மெத்தனமே காரணம்”

இது குறித்து, பிபிசி தமிழிடம் அங்கு பயிலும் மாணவர்களின் தந்தை பரமசிவன் பேசினார். ”எனது இரண்டு மகன்களும் அந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். எனவே, எனக்கு அந்த பள்ளியை 10 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். நல்ல முறையில் அந்த பள்ளி செயல்பட்டு வந்தது. தற்போது இடிந்து விழுந்த கழிவறை 2007ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கழிவறை அடித்தளமிட்டுதான் கட்டப்பட்டிருந்தது.”

”பள்ளிக்கு எதிரே வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக, பள்ளி வளாகத்தில் கழிவறை அருகே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டது. தளத்தை சுற்றி உள்ள குழிகளை மூடுவதற்காக மணல் போடப்பட்டது அதில் அடித்தளம் மறைந்திருக்கக் கூடும்.”

”நன்றாக செயல்பட்டு வந்த பள்ளியில் தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது. மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியது. விபத்தின்போது இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை ஆசிரியர்கள் மீட்க முயற்சிக்கவில்லை என்பதை பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.”

பெற்றோர் பரமசிவன்
படக்குறிப்பு, பரமசிவன்

”சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவர்களை காப்பாற்றுவதில் ஆசிரியருக்கு என்ன சிக்கல் இருந்தது? ஏன் அவர்களை மீட்பதில் ஆசிரியர்கள் முன்வரவில்லை என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்க சக மாணவர்கள் முயற்சித்த போதும் அவர்களை மீட்க விடாமல் தடுத்துள்ளனர் என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.”

”விபத்து ஏற்பட்ட இடத்தில் என்.சி.சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வேடிக்கை பார்த்ததாக பிள்ளைகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.”

”ஆசிரியர்களை நம்பித்தான் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். எங்கள் பிள்ளைகளின் உயிருக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பு. ஆனால், விபத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றுவதை விட்டு விட்டு ஆம்புலன்ஸ் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக காத்திருந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.”

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பழைய கட்டடத்தின் உறுதித்தன்மையை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பள்ளியில் முறையான ஆய்வு நடத்தப்படவில்லை என்பதே இந்த விபத்து மூலம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முறையான ஆய்வு செய்திருந்தால், இந்த விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்” என்றார் பரமசிவம்.

ஆசிரியர்கள் மீட்க விடாமல் தடுத்ததாக கூறும் மாணவர்கள்

விபத்தை நேரடியாக பார்த்த மாணவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”பள்ளியில் காலை இடைவேளையின் போது இந்த விபத்து நடந்தது. கழிவறையில் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டதில், மாணவர்கள் சிலர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்குமாறு ஆசிரியரிடம் கூறினோம். ஆனால், அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியர் உட்பட யாருமே மாணவர்களை மீட்க வரவில்லை.”

”நாங்கள் மீட்க செல்லும்போதும் எங்களை மீட்க விடாமல் தடுத்தனர். பள்ளியில் 5-க்கும் மேற்பட்ட கார்கள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்தனர்.”

”அந்த சுவரில் விரிசல் ஏற்பட்டு அபாயமான நிலையில்தான் இருந்தது. அந்த கட்டடம், பழைய கட்டடம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஆசிரியர்களின் முயற்சியின்மையால் மாணவர்கள் உயிரிழந்தனர்,” என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த மாணவர் குற்றம்சாட்டினார்.

”பலி கொடுத்ததற்கு பின்னரே தடுப்பு நடவடிக்கை”

இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஜாய்சன்
படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஜாய்சன்

இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஜாய்சன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”கும்பகோணம் தீ விபத்து, பள்ளி வாகனத்திலிருந்து குழந்தை விழுந்து உயிரிழந்த விபத்து, தற்போது இந்த விபத்து என, இவ்வாறான விபத்துகள் நடந்து உயிர் பலி கொடுத்ததற்கு பின்னரே அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்கிறது.”

”இந்த பள்ளி விபத்து நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ஆய்வு செய்த பின்னர்தான் இந்த கட்டடத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த அடிப்படையில் இந்த கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்தார்கள் என தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

”படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையில் அவரது பெற்றோருக்கு போதிய உடன்பாடு இல்லை. எனவே, தனியார் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கான முழு மருத்துவப் பரிசோதனை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளேன்” என ஜாய்சன் தெரிவித்தார்.

”முறையான அடித்தளம் இல்லாததே விபத்துக்கு காரணம்” -மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
படக்குறிப்பு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

பள்ளியில் நடந்த விபத்து குறித்தும் தற்போது நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கை குறித்தும் பிபிசி தமிழிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விபத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த கழிவறையின் முன் பக்க சுவர் முறையான அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது, என்றார்

”இந்த விபத்து குறித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரிப்பதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நெல்லை கோட்டாட்சியர் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர். இந்த விபத்துக்கான முக்கிய காரணமே முறையான அடித்தளம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.”

”பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் அந்த கட்டடத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பள்ளி மாணவர்கள் கூறுவது போல் சம்பவம் நடந்தபோது ஆசிரியர்கள் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என தெரிய வந்தால் நிச்சயம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

”விபத்தில் படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நான், அமைச்சர்கள் உட்பட அனைவரும் சென்று பார்த்தபோது அந்த மாணவர்களின் பெற்றோர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு சொல்லவில்லை. இருப்பினும் அவர்கள் அதனை விரும்பினால் நிச்சயம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நிச்சயம் எடுக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி விபத்து குறித்து அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி குறிப்பு ஒன்று திருநெல்வேலி திருமண்டல பேராயர் வெளியிட்டுள்ளார்.

அதில், "மூன்று மாணவச் செல்வங்களுடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று மேற்படி விபத்து குறித்து திருமண்டல நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு திருநெல்வேலி திருமண்டலம் சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிவாரணம் விரைவில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்கப்படும்," அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: