பெண்கள் தற்கொலை: இந்திய இல்லத்தரசிகளின் தற்கொலைக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
ஒவ்வொரு ஆண்டும் ஏன் இந்தியாவில் ஆயிரக்கணக்கான, இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?
சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 22,372 இல்லத்தரசிகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 61 பேரும், 25 நிமிடங்களுக்கு ஒருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையான 1,53,052-ல் 14.6 சதவீதம் இல்லத்தரசிகளின் தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொண்ட ஒட்டு மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் இல்லத்தரசிகள்.
கடந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கல்ல. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1997ஆம் ஆண்டு முதல் தற்கொலை தொடர்பான தரவுகளை, தற்கொலை செய்துகொண்டவர்களின் தொழில்வாரியாக பிரிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் 20,000 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்தது. 2009ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 25,092-ஐக் கடந்தது.
குடும்ப பிரச்சனைகள் அல்லது திருமணம் தொடர்பான பிரச்சனைகள்தான் இதுபோன்ற தற்கொலைகளுக்கு காரணம் என்கிறது அறிக்கை. ஆனால் உண்மையில் எது? பெண்களை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளத் தூண்டுகிறது.
குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதுதான் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட அரசாங்க கணக்கெடுப்பில் பங்கெடுத்த ஒட்டு மொத்த பெண்களில் 30 சதவீதம் பேர் வன்முறையை எதிர்கொண்டதாகவும், தினசரி கடின வேலைகள் திருமண வாழ்வை கொடூரமானதாக மாற்றுவதாகவும், புகுந்தவீட்டு வாழ்க்கை தங்களை திணறடிப்பதாகவும் கூறுகின்றனர்.
பெண்கள் எந்தவித சூழலையும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள்தான், ஆனால் அந்த சகிப்புத் தன்மைக்கும் ஓர் எல்லை உண்டு என்கிறார் டாக்டர் உஷா வெர்மா ஸ்ரீவஸ்தவா. இவர் வாரணாசியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாக இருக்கிறார்.
"சட்டப்படி பெண்களின் திருமண வயது 18 ஆக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் 18 வயதை கடந்த உடனேயே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். அந்த சிறுவயதிலேயே அவர் ஒரு மனைவியாக, ஒரு மருமகளாக தன் முழு நாளையும் வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளில் கழிக்கிறார். எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் அவர் மீது திணிக்கப்படுகிறது, அவருக்கான தனிப்பட்ட சுதந்திரம் குறைவாகவே இருக்கிறது. மிக அரிதாகத்தான் அவருக்கென அவர் விருப்பப்படி செலவழிப்பதற்கு கிடைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"அவரது கல்வி மற்றும் கனவுகள் முக்கியத்துவம் இழக்கத் தொடங்குகின்றன. அவரது இலக்குகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. நம்பிக்கையற்ற தன்மை மற்றும் ஏமாற்றம் நிலை பெறத் தொடங்குகிறது. வெறுமனே ஒரு நபராக வாழும் அந்த இருப்பு அவருக்கு சித்திரவதை ஆகிறது."
வயதான பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் வேறுபட்டது என்கிறார் உஷா.
"குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பின் எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் நிலையை பலரும் எதிர்கொள்கின்றனர். பலரும் மெனோபாஸ் மாதவிடாய் சுழற்சிக்கு பெண்களின் உடல் மாற்றமடைந்து வரும் காலத்தில் பிரி-மெனோபாசால் அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். இது மன அழுத்தத்தையும் காரணமின்றி அழும் ஒருவித மனநிலைக்கும் காரணமாக உள்ளது"
தற்கொலைகளை மிக எளிதாக தவிர்க்கலாம் என்கிறார் உஷா.
இந்தியாவில் நடக்கும் பல தற்கொலைகள் எதிர்காலம் குறித்து எதையும் சிந்திக்காமல் திடீரென நடக்கக் கூடியவை என்கிறார் மனநல மருத்துவர் சௌமித்ரா பதரே. "ஆண் வீட்டுக்கு வருகிறார், மனைவியை அடிக்கிறார், அந்த பெண் தன்னை மாய்த்துக் கொள்கிறார்"
தற்கொலை செய்துகொண்ட பெண்களில் மூன்றில் ஒருவர் குடும்ப வன்முறையை எதிர் கொண்டதாக சுயாதீன ஆராய்ச்சி சுட்டிக்கட்டுவதாக கூறுகிறார் பதரே. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளில் குடும்ப வன்முறை தற்கொலைக்கான ஒரு காரணமாக குறிப்பிடப்படவில்லை.
"குடும்ப வன்முறையை எதிர் கொள்ளும் பல பெண்கள் தங்களின் முறைசாரா அல்லது அமைப்பு சாரா உதவிகள் வழியே மன நலத்தை பாதுகாத்து வருகின்றனர்" என்கிறார் பெங்களூரூவை அடிப்படையாக கொண்டு செயல்படும் மனநல செயலி வைசாவில் பணியாற்றும் உளவியல் நிபுணர் சைதாலி சின்ஹா.

பட மூலாதாரம், Getty Images
இவர் முன்பு மும்பையில் ஒரு அரசு மனநல மருத்துவமனையில் மூன்றாண்டுகள் பணியாற்றிய போது, தற்கொலைக்கு முயன்ற பலருக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அப்போது பெண்கள் தங்களுக்கு உதவிகரமாக இருக்க சில சிறிய குழுக்களை அமைத்துக் கொள்வதைத் தான் கண்டுபிடித்ததாக கூறினார். உதாரணமாக உள்ளூரில் பயணிக்கும் ரயில்கள் அல்லது காய்கறிகளை வாங்கும்போது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோடு உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார்.
"அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. சில நேரங்களில் அவர்களது மன நலன் இதுபோன்ற ஒரு நபருடன் மட்டுமே நடத்தும் பேச்சுவார்த்தைகளை சார்ந்து இருக்கிறது" என்கிறார். கொரோனா பெருந்தோற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இந்த சூழலை மோசமாகிவிட்டது என்றும் கூறுகிறார்.
"ஆண்கள் வேலைக்கு சென்ற பின், வீட்டை பராமரித்துக் கொள்ளும் மனைவிமார்களுக்கு என்று ஒரு பாதுகாப்பான இடம் இருந்தது, அது பெருந்தொற்று காலத்தில் காணாமல் போய்விட்டது. குடும்ப வன்முறை போன்ற சூழல்களில் அவர்களை துன்பத்துக்கு உட்படுத்தும் நபர்களோடு அடிக்கடி சிக்கிக் கொள்கின்றனர். இது மேற்கொண்டு அவர்களுக்கு விருப்பமான விஷயங்களை அல்லது அவர்களுக்கு நிம்மதி கொடுக்கும் விஷயங்களைச் செய்வதையும் அவர்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே காலப்போக்கில் கோபம் துக்கம் வலி அதிகரித்து கடைசியில் தற்கொலை மட்டுமே ஒரே வழி என தஞ்சம் அடைகின்றனர்.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகின்றன. உலக அளவில் 15 முதல் 39 வயதுக்குள்ளான ஒட்டுமொத்த ஆண்கள் தற்கொலை எண்ணிக்கையில் 25% பேர் இந்தியர்கள், அதேபோல மேற்கூறிய வயது வரம்பில், உலகின் ஒட்டுமொத்த பெண்கள் தற்கொலை எண்ணிக்கையில் 36 சதவீதத்தினர் இந்தியர்கள்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ தற்கொலை எண்ணிக்கை தொடர்பான தரவுகள் மிகப் பெரிய அளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தற்கொலை பிரச்சனை குறித்த முழு விவரத்தை அது பிரதிபலிப்பதில்லை என்றும் டாக்டர் சௌமித்ரா விளக்குகிறார். இவர் மனநல கோளாறுகள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"மில்லியன் டெட் ஸ்டடி (1998 முதல் 2014 வரையான காலகட்டத்தில் 2.4 மில்லியன் குடும்பத்தைச் சேர்ந்த 14 மில்லியன் பேரை கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது) என்கிற ஆய்வையோ அல்லது லான்செட் ஆய்வையோ கண்டால் இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குறைவாக பதிவு செய்யப்படுகிறது"
"இந்தியாவில் இப்போதும் தற்கொலை குறித்து வெளிப்படையாக பேசப்படவில்லை. இது குறித்துப் பேசுவது இப்போதும் அசிங்கமான ஒன்றாகவும், ஒருவித களங்கமாகவுமே பார்க்கப்படுகிறது. பல குடும்பங்கள் தற்கொலை குறித்த விஷயங்களை மறைக்க விரும்புகின்றனர். கிராமபுற இந்தியாவில், பிரேத பரிசோதனைகள் கூட தேவைப்படுவதில்லை. பணக்காரர்கள் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளை சரிகட்டி தற்கொலை மரணங்கள் விபத்தால் ஏற்பட்ட மரணமாக காட்டப்படுகின்றன. காவல்துறை தற்கொலை என்று குறிப்பிடுவது சரிபார்க்கப்படுவதில்லை."
தேசிய அளவில் தற்கொலை தடுப்புத் திட்டத்தை இந்தியா மேம்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தரவுகளின் தரத்தை சரி செய்ய முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
"இந்தியாவில் தற்கொலைக்கு முயன்றவர்கள் குறித்த தரவைப் பார்த்தால் அது மிக குறைவாக உள்ளது. உலக அளவில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை விட தற்கொலைக்கு முயன்றவர்கள் எண்ணிக்கை நான்கு முதல் இருபது மடங்கு அதிகமாக இருக்கும். ஆக, இந்தியாவில் கடந்த ஆண்டு 1.5 லட்சம் தற்கொலைகள் பதிவாகியுள்ளன என்றால் தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சம் முதல் 60 லட்சமாக இருக்கலாம்"
"2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் தற்கொலை எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டை விட இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்கொலை எண்ணிக்கையைக் குறைப்பது கனவாகவே இருக்கிறது" என்கிறார் டாக்டர் பதரே.
பிற செய்திகள்:
- பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி?
- தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்
- வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- கோவை: காணாமல்போன சிறுமியின் உடல் முட்புதரில் கை,கால் கட்டிய நிலையில் கண்டுபிடிப்பு
- செல்பேசிக்கு அடிமையாகி வழிமாறும் மாணவர்கள்: பெற்றோர், ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












