விவசாயத்துக்காக இந்திய அரசு ஒரே ஆண்டில் ரூ. 123 லட்சம் கோடி செலவிட்டது உண்மையா?

agriculture tamil nadu
    • எழுதியவர், பாம்பன் மு.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

விவசாயத்துக்காக இந்த நிதியாண்டில் 123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக இந்திய அரசு சொல்கிறது. இது உண்மைக்கு மாறான தகவல் என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். உண்மை என்ன?நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை விட சுமார் 100 மடங்கு கூடுதலாக சொல்லப்பட்டதா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விவரக்குறிப்பில், விவசாயத்துக்கான செலவினம் இந்த ஆண்டு 123 லட்சம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், இது உண்மைக்கு மாறானது என்றும் மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டிருந்தார்.

100 மடங்கு அதிகம் எப்படி?

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "123 லட்சம் கோடியாம். விவசாயத்திற்கான செலவுகள்! இன்றைய சட்ட வரைவில் கணக்கு. 2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்தான். காகிதத்தில் சர்க்கரை என்றால்… சர்க்கரையை விடுங்க, காகிதமாவது இருக்க வேண்டாமா?" என்று தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய பிபிசி தமிழ் ஆய்வு செய்தது.

உண்மை என்ன?

முதலாவதாக, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விவரக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்ன என்பதை கவனிக்க வேண்டும்.

"Budget allocation for the department of agriculture has been increased by five times since 2014 and this year one hundred and twenty three lakh crores rupees is being spent on various schemes or programmes"

அதாவது, "விவசாய மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு பல்வேறு விவசாயத் திட்டங்களுக்காக 123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உண்மை அறிய முதலில் மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த தொகையை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான பிரத்யேக தளத்தில் விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டு கணக்கைப் பார்த்தோம்.

Government of india

பட மூலாதாரம், unionbudget.gov.in

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான unionbudget.gov.in தளத்தின் விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டுத் தொகை குறித்துப் பார்த்தபோது 123017.57 கோடிகள் என்று இருந்தது.

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வாசிக்கப்பட்டபோது, விவசாயத்துறைக்கான ஒதுக்கீடாக குறிப்பிடப்பட்ட மொத்த தொகையே 1 லட்சத்து 31 ஆயிரத்து 531 கோடிகள்தான்.

1,31,531 கோடிக்கான கணக்கீட்டு விபரமும் கீழ்க்கண்ட இரண்டு ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளன.

எனவே 123 லட்சம் கோடிகள் என்பது தவறான தகவல் என்பது உறுதியாகிறது. அதேசமயம், 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி என்பதற்கு பதிலாக, 123 லட்சம் கோடி என்று அச்சிடப்பட்டு உள்ளது.

இது நோக்குமயக்கப் பிழையாலும், மனிதத் தவறுகளாலும் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமான விவரக்குறிப்பிலேயே இந்தத் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :