ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ ப்ரீபெய்ட் கட்டண உயர்வு: வாடிக்கையாளர் மீது திணிக்கப்படுகிறதா நிதிச்சுமை?

cellphone

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

இவற்றில் முதலில் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டது ஏர்டெல் நிறுவனம். நவம்பர் 22ம் தேதி, புதிய கட்டண அட்டவணையை வெளியிட்டு, அது நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, வோடாஃபோன் நிறுவனம், நவம்பர் 23ஆம் தேதி புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு, அது நவம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறியது.

இந்த வரிசையில் மூன்றாவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் நவம்பர் 28ஆம் தேதி தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டு, அது டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும், தங்களுடைய ப்ரீபெய்ட் திட்ட கட்டணங்களை, குறைந்தபட்சம் 16 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 500 ரூபாய் வரை உயர்த்தியிருக்கின்றன. இது சராசரியாக 20% முதல் 22% வரையிலான உயர்வாகும்.

ஏர்டெல் நிறுவனம் தனது அறிக்கையில், "மூலதனத்தின் மீது நியாயமான வருவாய் ஈட்டவும், அதன்மூலம் ஆரோக்கியமான தொழில் மாதிரியை உருவாக்கவும் ஒரு பயன்பாட்டாளர் மூலம் வரும் சராசரி வருவாய் (Average Revenue Per User - ARPU) 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை இருக்க வேண்டும்," என்றும் கூறியிருக்கிறது. இதற்கான முதல் படியாக கட்டணங்களை உயர்த்தியிருப்பதாகக் கூறியிருக்கிறது ஏர்டெல்.

வோடாஃபோன் நிறுவனம் தனது அறிக்கையில், ARPU-ஐ மேம்படுத்தவும், நிதி அழுத்தத்தைக் குறைக்கவும் கட்டண உயர்வு அவசியமாகிறது என்று கூறியிருக்கிறது.

mobile network

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் மிகப்பெரிய செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ, வாடிக்கையாளர் ப்ரீபெய்டு சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த பிறகு அதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி காணப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில், நிலையான தொலைத்தொடர்பு தொழிலை பலப்படுத்த, இந்த புதிய கட்டணத்தை அறிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த கட்டண உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் மீம்கள், இடுகைகள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளால் உண்டான நிதிச் சுமைகளோடு போராடி வரும் தங்களுக்கு, இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்கின்றனர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாத சம்பளக்காரர்கள்.

ஏர்டெல்

பட மூலாதாரம், Airtel

"பணிக்காகவும் சொந்த பயன்பாட்டுக்கும் என நான் இரண்டு சிம் கார்டுகள் வைத்திருக்கிறேன். எனது கணவரும் இரண்டு சிம் கார்டுகள் வைத்திருக்கிறார். எனது மகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒரு சிம் கார்ட் உள்ளது. எங்கள் வீட்டிலேயே ஐந்து சிம் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கும் வைஃபைக்கும் சேர்த்து மாதம் சராசரியாக 2,000 ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். புதிய கட்டண உயர்வால் இனி 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்," என்கிறார் ஐ.டி துறையில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த எம். மித்ரா.

cellphone

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், ஐந்தில் இரண்டு சிம் கார்டுகளை சரண்டர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார் மித்ரா.

தொலைத்தொடர்பு தொழிலில் ஆரோக்கியமான போட்டிக்காக இந்த கட்டண உயர்வு அவசியமென்ற போதும், கட்டணத்தை ஒரேயடியாக 20% உயர்த்தியிருப்பது சாதாரண நுகர்வோருக்குச் சுமையையே ஏற்படுத்தும் என்கின்றனர் நுகர்வோர் நலச் செயல்பாட்டாளர்கள்.

வோடாஃபோன்

பட மூலாதாரம், Vodafone India

"போட்டியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிழைத்திருக்க வேண்டுமெனில் கட்டண உயர்வு அவசியமானது. இந்தத் துறையில் தனியொரு நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தடுக்கவும் அது உதவும். ஆனால் ஒரே தவணையில் இந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்த்து, படிப்படியாக உயர்த்தியிருக்கலாம். மேலும் அடித்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த-கட்டண திட்டங்களின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்த்திருக்கலாம்," என்கிறார் கோவையைச் சேர்ந்த நுகர்வோர் நல செயல்பாட்டாளரான கதிர்மதியோன்.

பிபிசி தமிழிடம் பேசிய தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் பெயரை வெளிப்படுத்த விரும்பாத தகவல் தொடர்பு அலுவலர், "இது வேறு வழியின்றி எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்தார். "சந்தையிலுள்ள பிற பெரிய நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்த முடிவு செய்து விட்டனர், எனவே நாங்களும் செய்ய வேண்டியதாயிற்று," என்கிறார்.

இதனால் மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை பற்றி கேட்டபோது, அது இயல்பானதுதான் என்றும், மக்களின் உணர்வு முக்கியமானது, அதைத் தாங்கள் கவனித்து வருவதாகவும் கூறினார்.

"ஆனால் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும், இது பற்றிய முழுமையான புரிதல் டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் உண்டாகும்," என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :