கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மொஹம்மத் ஷாஹித்
- பதவி, பிபிசி இந்தி
நரேந்திர மோதி அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான சட்டத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, நவம்பர் 29 ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா அவையில் அறிமுகப்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தனது பணிப்பட்டியல் குறித்த தகவல்களை செவ்வாயன்று மக்களவை வெளியிட்டது. இந்த பணிப்பட்டியலில், 26 மசோத்தாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அடங்கும். இந்த மசோதாவுக்கு, கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவை தனது பணிப்பட்டியலில் கூறியுள்ளது.
இருப்பினும், சிலவற்றுக்கு இந்த மசோதா நிவாரணம் அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கிரிப்டோகரன்சி மசோதா தொடர்பான அரசின் மெளனம்
ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து நீண்ட நாட்களாக சிந்தித்து வருகிறது. ஆனால் அதன் முன்னோடி திட்டம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதுவரை இந்த மசோதாவின் வடிவம் பகிரங்கப்படுத்தப்படவில்லை அல்லது அது குறித்து பொது விவாதம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த மசோதா குறித்து நிதி அமைச்சகம் நீண்ட காலமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு தயாராக உள்ளது என கூறப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்? இந்த டிஜிட்டல் கரன்சிகளைப் பற்றிய மோதி அரசின் நோக்கத்தில் வேறு பல விஷயங்களும் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
நவம்பர் 13 அன்று, பிரதமர் நரேந்திர மோதி கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை நடத்தினர். அந்தக்கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி, உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என 'தி இந்து' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
'பெரிய வாக்குறுதிகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும்' என இந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. கட்டுப்பாடற்ற கிரிப்டோ சந்தைகள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்படலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்துறையில் விரைவான நடவடிக்கை எடுக்க அரசு உறுதியாக உள்ளது.
கிரிப்டோகரன்சியில் பெரும் வீழ்ச்சி
கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன.
'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்லன.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. டிஜிட்டல் கரன்சி காரணமாக இணைய மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, இவ்விவகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மீண்டும் எழுப்பியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது.
ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும்' அரசு, ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. இந்த நாணயம் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது அரசின் எதிர்கால முடிவு குறித்த தொலைநோக்குபார்வை நிர்ணயிப்பதாக இருக்கும்.
எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
- சட்ட வரலாறு: நீதிபதிகளை சட்டமன்றத்தால் கைதுசெய்ய முடியுமா?
- ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்
- தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
- திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்த
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












