தமிழ்நாடு அரசியல்: மேயர், நகராட்சி தலைவர் பதவிகள்: திமுக, அதிமுக கூட்டணியில் இடப்பங்கீட்டு சவால்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் போன்ற முக்கிய பதவிகளில் ஒதுக்கீடு பெற்றுவிட வேண்டும் என்று திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமையில் உள்ள கூட்டணிகளில் உள்ள பிற கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிடும் நோக்கில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்நிலையில் அரசியல் முகாம்களில் நடப்பது என்ன?
விருப்ப மனு அளிப்பதில் ஆர்வம்
`தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்' என்பதால் தொண்டர்களிடம் விருப்ப மனுக்களைப் பெறும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் விருப்ப மனுக்களைப் பெறும் பணிகள் தொடங்க உள்ளதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்தனர். அதேபோல், பா.ஜ.கவிலும் மாவட்டம்தோறும் மனுக்களைப் பெறும் பணிகள் நடந்து வருகின்றன.
அதிலும், 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள் என முக்கிய பதவிகளுக்காக இந்தத் தேர்தல் நடக்கவுள்ளதால் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்றுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், `ஊரக உள்ளாட்சியைப் போல இந்தமுறையும் தோல்வியடைந்துவிடக் கூடாது' என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது. இதன் ஒருபகுதியாக மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க தலைமை விவாதிக்க உள்ளது. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேல், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவையில் என்ன நடக்கிறது?
அந்த மனுவில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்துக் கட்சி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பாக கூறப்பட்ட ஆட்சேபனைகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்றவற்றைச் செய்வதற்கு வாய்மொழியாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இதில், தி.மு.கவின் வாக்குவங்கி குறைவாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் தி.மு.கவுக்கு சாதகமாக வாக்காளர் பெயர் திருத்தம் மற்றும் சேர்த்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, "கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வாக்காளர்களின் அனுமதியின்றி அவர்களுக்குத் தெரியாமலேயே மற்றொரு வார்டுக்கு குறைந்தபட்சம் 30 முதல் 80 வாக்காளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பாபு முருகவேல் தெரிவித்தார்.
வாக்குகள் மடைமாற்றப்படுகின்றனவா?

பட மூலாதாரம், Getty Images
"அ.தி.மு.க ஆட்சியில் இருந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வார்டு மறுவரையறை பணிகளை செய்து முடித்துவிட்டோம். ஆனால், தற்போது தங்களின் வசதிக்காக பாதகமாக இருக்கக் கூடிய வார்டுகளைக் கண்டறிந்து வேறு வார்டுகளில் இருந்து 30 முதல் 80 வாக்காளர்களை மடைமாற்றும் வேலைகளை தி.மு.க செய்து வருகிறது. நகராட்சி என்று எடுத்துக் கொண்டால் வார்டுகளுக்கு 150 வாக்குகள் வீதம் மாற்றுகின்றனர். ஒருவருடைய வாக்கை வேறு வார்டுக்கு மாற்றும்போது சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும். ஆனால், அப்படி எந்த ஒப்புதலையும் பெறாமல் இவர்களின் விருப்பப்படி மாற்றுகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்" என்கிறார், பாபு முருகவேல்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "வார்டு மறுவரையறை பணிகள் என்ற பெயரில் தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாகவும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் தி.மு.க அரசு செயல்படுகிறது. தி.மு.கவினர் என்றைக்குமே தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டதில்லை. இவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். இன்றைக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் 80 சதவிகித இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
காரணம், கடந்த ஆறு மாத காலத்தில் தி.மு.கவின் உண்மை முகத்தை மக்கள் கண்டறிந்துவிட்டனர். அவர்கள் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் முழுமையாக நிறைவேற்றவில்லை. வாக்குறுதி கொடுக்கும்போதே நிறைவேற்றுவது கடினம் என அவர்களுக்கும் தெரியும். எதிர்க்கட்சியில் இருக்கும்போது வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ஹெக்டேருக்கே 20,000 ரூபாய்தான் தருகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக வந்துவிட்டால் மற்றொரு பேச்சு என்பதுதான் தி.மு.கவின் இயல்பு. இவர்களின் செயல்பாடுகளே நகர்ப்புற உள்ளாட்சியில் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்" என்றார்.
"கூட்டணிக் கட்சிகளுக்கான இடப்பங்கீடு எந்த அடிப்படையில் நடக்கும்?'' என்றோம். "அதைப் பற்றி எந்தக் கருத்தையும் கூறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. தலைமையில் பேசி முடிவெடுப்பார்கள்" என்றார்.
தி.மு.க சொல்வது என்ன?
அ.தி.மு.கவின் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.கவின் தலைமைக் கழக வழக்குரைஞர் சூர்யா வெற்றிகொண்டான், "வார்டு மறுவரையறையில் பட்டியலினத்தவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறி தேர்தலையே 2 ஆண்டுகாலம் தி.மு.க நிறுத்தி வைத்தது. வார்டு மறுவரையில் எந்தவிதத் தவறும் நடக்கக் கூடாது எனப் போராடிய கட்சிதான், இப்போது ஆட்சியில் உள்ளது. பிறகு எப்படி தவறு நடக்கும்? அப்படியே இருந்தாலும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தபோது மேற்கொண்ட பணிகளை தற்போது அ.தி.மு.க மேற்கொள்ளட்டும். முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தால், அதற்கு அரசு உரிய முறையில் பதில் அளிக்கும்" என்கிறார்.
`` பலவீனமான வார்டுகளை எல்லாம் தி.மு.க பலப்படுத்திக் கொள்வதாக சொல்கிறார்களே?" என்றோம். ``எதிர்க்கட்சியாக இருந்தபோதே 60 சதவிகித உள்ளாட்சி இடங்களில் வென்றோம். ஆளும்கட்சியாக வந்த பிறகு 93 சதவிகித உள்ளாட்சி இடங்களைக் கைப்பற்றினோம். நாங்கள் எங்கே பலவீனமாக இருக்கிறோம் என்பது எங்களுக்கே தெரியாது. எனவே, மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் பலவீனமாக உள்ளனர். எந்த வார்டிலும் அவ்வாறு வாக்குகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், ஊரக உள்ளாட்சியில் பெற்ற வெற்றியைத் தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பில் அரசு இருக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னையின் வெள்ள பாதிப்பை சீர்செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் வெள்ள நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் வசதிகளை செய்து தர உள்ளோம். அது காலம் முழுக்க தி.மு.கவின் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்" என்கிறார்.
அதிருப்தியில் காங்கிரஸ்?

பட மூலாதாரம், K.S.Alagiri/Facebook
தி.மு.க, அ.தி.மு.க மோதல் ஒருபுறம் இருந்தாலும், `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு எப்படி நடக்கப் போகிறது?' என்ற அச்சம், இரு கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் உள்ளது. காரணம், `ஊரக உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் நடந்த கசப்பான சம்பவங்கள்தான்' என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, `மாவட்ட அளவில் பேசிக் கொள்ளுங்கள்' என தி.மு.க தெரிவித்ததால், 74 ஒன்றியங்களில் ஓர் ஒன்றியம்கூட காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கவில்லை எனவும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் கிடைத்த 71 இடங்களில் 34 இடங்களில் அக்கட்சி வென்றது. அதேநேரம், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களில் ஒதுக்கப்பட்ட 10 இடங்களில் ஒன்பது இடங்களில் காங்கிரஸ் வென்றது. இதில் போதிய இடங்களை ஒதுக்கவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர்.
`நகர்ப்புற உள்ளாட்சியிலும் மாவட்ட அளவில் பேசிக் கொள்ளுங்கள் என்றால் அது சரியாக இருக்காது' என காங்கிரஸ் நிர்வாகிகள் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, `மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கணிசமான அளவுக்கு ஒதுக்குவதற்கு தி.மு.க முன்வருமா?' என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
வி.சி.கவின் எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், vck facebook
``தி.மு.க அணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்குமா?" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் கேட்ட இடங்களை நிறைவாகவே கொடுத்தார்கள். இந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் அதைவிட கூடுதலாக இடங்களை ஒதுக்குவார் என நம்புகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நீண்டகாலமாக நடக்கவில்லை. தற்போது பொதுத்தொகுதியிலும் வெற்றி பெற்ற கட்சியாகவும் விரிவடைந்த ஒரு கட்சியாகவும் வி.சி.க இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரப் பரவலாக்கல் என்பது மிக முக்கியமானது. அப்படியிருக்கும்போது விளிம்பு நிலை மக்களுக்காக போராடுகின்ற கட்சிக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது" என்கிறார்.
மேலும், `` மேயர் பதவி என்பது இதுவரையில் வி.சி.கவுக்கு கொடுக்கப்பட்டதில்லை. அதனை முறியடித்து சமூக நீதி அடையாளத்தை முதலமைச்சர் அளிக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்தகாலங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களைவிடவும் சமூக நீதி மற்றும் ஜனநாயக அடிப்படையில் இந்தமுறை இடப்பங்கீடு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.
`` சென்னை மேயர் பதவியை தலித் சமூகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. நீதிமன்றத்திலும் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளோம். சென்னையின் மேயராக ஏற்கெனவே தலித் சமூகத்தினர் பதவி வகித்துள்ளனர். இங்கு தலித் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். அவர்கள் கவனிப்பாரற்று இருப்பதால் அவர்களின் பிரதிநிதி ஒருவர் மேயராக வருவது என்பது சமூக நீதிக்கான பங்கீடாகப் பார்க்கிறோம்" என்கிறார் வன்னி அரசு.
பா.ஜ.கவுக்கு அதிக இடம் தருமா அ.தி.மு.க.?

பட மூலாதாரம், Tn bjp
அதேநேரம், அ.தி.மு.க அணியிலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளைப் பெறுவதில் கூட்டணிக் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வலுவாக உள்ளது. இந்தமுறை பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகள் எல்லாம் இடங்கள் கிடைக்கும் என நம்புகிறோம். தி.மு.க ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் அ.தி.மு.கவைப் பற்றி என்னவெல்லாம் குறைகளைச் சொன்னார்களோ, ஆறு மாதங்கள் கடந்த பிறகும் அவையெல்லாம் அப்படியே உள்ளன. எந்தவித மாற்றங்களும் இல்லை. எனவே, இந்தத் தேர்தல் என்பது சிக்ஸர் அடிக்கும் களமாகவே அ.தி.மு.க கூட்டணிக்கு இருக்கும். சென்னை வெள்ளம் மற்றும் அரசின் செயல்பாடின்மை, மக்களின் கடும் அதிருப்தி போன்றவை பா.ஜ.கவுக்கு ஆதரவு வாக்குகளாக மாறும்" என்கிறார்.
`` தமிழ்நாடு முழுவதும் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி வருகிறோம். இதில் மேயர் பதவிக்கும் சேர்த்து மனுக்களை வாங்குகிறோம். நேரடித் தேர்தலா.. மறைமுகத் தேர்தலா என்பதைப் பொறுத்து முடிவு செய்வோம். காரணம், பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்புள்ள மேயர் தொகுதிகள் கணிசமாக உள்ளன. அதனை நோக்கி நகர்கிறோம். பா.ஜ.கவின் வளர்ச்சி கணிசமாக உள்ளது என்பதை அ.தி.மு.க புரிந்து கொண்டுவிட்டது. அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ஜ.க வலுசேர்க்கும் என்பதையும் அவர்களும் அறிந்து கொண்டனர். இந்தமுறை அ.தி.மு.கவின் அணுகுமுறையிலும் வித்தியாசம் இருக்கும். தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். நாங்கள் நிற்க விரும்புகின்ற இடங்களையெல்லாம் குறித்து வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையும் சமூகமாக நடக்கும்" என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.
பிற செய்திகள்:
- பெங்களூரைச் சூழ்ந்திருக்கும் பிட்காயின் ஊழல் அரசியல் - நடந்தது என்ன?
- கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை
- போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?
- கிலோ கணக்கில் கறி சாப்பிட்டவருக்கு தடை விதித்த சீன உணவகம்
- 'ஆமைக்கறி, பூனைக்கறி': சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி பேச்சால் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








