உணவு மற்றும் உடல் நலம்: பொதுமுடக்க காலத்தில் எடை அதிகரித்திருந்தால் அதுகுறித்து வருத்தப்பட வேண்டுமா?

உடல் எடை

பட மூலாதாரம், Getty Images

புதிய ஆய்வு ஒன்றில் 48 சதவீதம் பேர் லாக்டவுன் சமயத்தில் தங்களின் எடை அதிகரித்தாக கூறுகின்றனர்.

கோவிட் காலத்தில் மக்கள் பரவலாக மன அழுத்தத்துடன் இருந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு வரும் பிறரின் மீது இரக்கம் காட்டுவதை போல நம்மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

லண்டன் கிங்க்ஸ் காலேஜ் மற்றும் Ipsos MORI என்ற கணக்கெடுப்பு முகமையால் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,254 பேரிடம் அவர்களின் எடை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 48 சதவிதம் பேர் பொதுமுடக்க காலத்தின்போது எடை அதிகரித்ததாக கூறினர். அதேபோன்று 48 சதவீதம் பேர் வழக்கத்தை காட்டிலும் மன அழுத்தத்துடன் உணர்வதாக தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் அதிகமாக மதுபானம் அருந்தியதாக கூறினர்.

எனவே எடையை குறிப்பிட்டு மட்டும் கவலை கொள்ளாமல் உங்கள் மனம் மற்றும் உடல் நலனை எப்படி மேம்படுத்துவது என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.

எடை அதிகரிப்பது உண்மையில் பெரும் பிரச்னையா?

சிலர் மன அழுத்தத்தை குறைக்க அதிகம் உண்பர் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ப்ரியா ட்யூ.

எனவே உடல் எடை அதிகரித்துவிட்டது என்று வருத்தப்படுவது மேலும் மன அழுத்தத்தைதான் கொடுக்கும் என்கிறார் அவர்.

"தற்போதைய சூழலில் பலருக்கும் மன அழுத்தம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை போக்க வழக்கமாக அவர்கள் செய்யக்கூடியது எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை. எனவே பிறரை குற்றவுணர்வுக்கு ஆளாக்காமல் நாம் அவர்களிடம் பழகுகிறோமா என்பதை கவனித்தில் வைத்து கொள்ள வேண்டும்," என்கிறார் பிரியா.

ஆரோக்கியமான வழியில் டயட்டில் இருப்பது எப்படி?

"உங்கள் உணவில் எதை தவிர்க்கலாம் என்பதற்கு பதிலாக எதை சேர்க்கலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். தினமும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது நேர்மறையானதாக இருக்கும். சரி அதையும் உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் அத்துடன் உலகம் முடிந்துவிட்டது என்று தளர்ந்து போக வேண்டாம்." என்கிறார் பிரியா.

உணவு

பட மூலாதாரம், Getty Images

"காய்கறி மற்றும் பழங்களை தினமும் சரியாக உண்ணுகிறேனா? புரதம், கார்போஹைட்ரேட் என அனைத்தும் என் உணவில் சரியாகவுள்ளதா என்று யோசியுங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு பிடித்த ஒரு துண்டு கேக்கை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை" என்கிறார் பிரியா.

"சிறிய முயற்சிகளிலிருந்து தொடங்குங்கள். ஒரு உணவை நீங்கள் உண்ண வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதுவே அதை நீங்கள் அதிகம் தேடுவதற்கு வித்திடும். உணவு என்பது பரிசோ அல்லது தண்டனையோ அல்ல. உணவு என்பது நமக்கு போஷாக்கை வழங்குவது." என்கிறார் பிரியா.

உடற்பயிற்சி உதவுமா?

பிபிசியின் `ஃபிட் அண்ட் ஃபியர்லெஸ்` நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் சானா வான் டிக், பொதுமுடக்க காலத்தில் பலரும் தங்களின் வழக்கமான உடற்பயிற்சி தடைப்பட்டதை எண்ணி மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர் என்கிறார்.

"தனிப்பட்ட முறையில் பொதுமுடக்கம் குறித்த செய்தியை கேட்டவுடன் முதலில் நானும் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானேன். எவ்வாறு எனது உடற்பயிற்சியை மேற்கொள்ளப்போகிறேன் என தவித்து நின்றேன். நான் இருப்பது ஒரு சிறிய வீட்டில் அங்கு எந்த உபகரணங்களும் இல்லை. அதேபோன்று எனது உடற்பயிற்சி நேரத்தை நாம் மிகவும் விரும்பினேன். ஆனால் தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப எனது உடற்பயிற்சியை மாற்றிக் கொள்கிறேன்," என்கிறார் சானா.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

"பொதுவாக பொதுமுடக்க காலத்தில் உடற்பயிற்சியில் தாங்கள் நிர்ணயித்து கொண்ட இலக்கை அடைய முடியாமல் சிலர் மன அழுத்தம் அடைகின்றனர் அனால் அது தேவையில்லாத ஒன்று".

"இப்போது நான் உபகரணங்களை கொண்டு உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக காலையில் எழுந்து ஓடும் முயற்சியில் ஈடுபடுகிறேன். அதேபோன்று ஒவ்வொருவரும் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கொள்ள வேண்டும்," என்கிறார் சானா.

தற்போது இணையத்தில் பல இலவச உடற்பயிற்சி வகுப்புகள் கிடைக்கின்றன அதில் தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து நாம் பின் தொடர்லாம் என்கிறார் சானா. உங்கள் மீது அளவுக்கு மிகுந்த அழுத்தத்தை நீங்களே அளித்து கொள்ள வேண்டும் என்கிறார் சானா.

இதேயேதான் முன்பு பிரியாவும் டயட் விஷயத்தில் குறிப்பிட்டிருந்தார்.

`பிறரைபோல உங்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள்`

நீங்கள் இந்த கொரோனா சூழலுக்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அதை தொடர்ந்து செய்ய முடியாமல் போகலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். ஆனால் அதற்காக உங்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ள தேவையில்லை என்கிறார் மனோதத்துவ நிபுணர் கிம்பர்லே.

"உங்களின் நண்பர் உங்களிடம் வந்து, எனக்கு குறிப்பிட்ட நாட்களாக அச்ச உணர்வு அதிகமாக உள்ளது. என்னால் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே விருப்பமாக உண்ண முடிகிறது. உடற்பயிற்சியை நினைத்ததுபோல செய்ய முடியவில்லை என்று கூறினால் நீங்கள் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா அதைபோலதான் உங்களிடம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்." என்கிறார் அவர்.

"உங்கள் மீது நீங்களே கோபமடைவதை விட்டுவிட்டு மாறாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மகிழ்ச்சியடைந்து கொள்ளுங்கள். இந்த சூழலை கடப்பதற்கான பக்குவம் உடலுக்கு உள்ளது என்பதை நினைத்து மிகிழ்ச்சியாக இருங்கள்," என்கிறார் கிம்பர்லே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :