ஓடந்துறை: பருவநிலை மாற்றத்துக்கு காற்றாலை மின்சாரம், பசுமை வீடுகள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு சொன்ன தமிழக கிராமம்

- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
பருவநிலை மாற்றம் என்பது மனிதர்களின் காதுக்குள் அபாயச் சங்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்க ஒவ்வொரு நாடும் என்ன செய்வது என்று தலையை உடைத்து யோசித்து கொண்டிருக்கின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நாம் செல்வதே நீண்டகாலத்திற்கான தீர்வாக இருக்கும் என பல காலமாக பேசிக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான மின்சாரத் தயாரிப்பு நிலக்கரியை நம்பியே உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்று மின்சாரத் தயாரிப்பில் தன்னிறைவு கிராமமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
பசுமை வீடுகளும் காற்றாலை திட்டமும்
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணிக்கத் தொடங்கியது கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் நீலகிரி மலை அடி வாரத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் அமைந்துள்ள ஓடந்துறை ஊராட்சி. இங்கே 2006ஆம் ஆண்டே காற்றாலை நிறுவப்பட்டுள்ளது.

இங்கு காற்றாலை மட்டுமல்ல, சூரிய சக்தியை பயன்படுத்தும் பசுமை வீடுகளும் உள்ளன. காற்றாலைக்கு முன்பு பயோமாஸ் கொதிகலன்களும் (Biomas gasifier) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஓடந்துறையில் சுமார் 101 வீடுகள் சூரிய சக்தியை பயன்படுத்தும் பசுமை வீடுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
இருபது வருடங்களுக்கு முன் பெரிதாக எந்த வசதியும் இன்றி வெறும் 1000 பேரை கொண்ட ஓடந்துறையில் இப்போது 10 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.
மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற கிராமம்
"நான் 1996ஆம் ஆண்டு ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றபோது கிராமத்தின் மின் கட்டணம் வெறும் 2000 ரூபாய் ஆனால் வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்ட பிறகு 50 ஆயிரம் வரை கட்டணம் வந்தது.
ஒரு போர்வெல் எட்டு போர்வெல்லாக மாறியது. 59 தெரு விளக்குகள் 235 தெரு விளக்குகளாக மாறின. இம்மாதிரியான வளர்ச்சிகள் ஏற்பட்டபோது மின் கட்டணம் இயல்பாக உயர்ந்து விட்டது. ஆனால் வருமானம் குறைவாக இருந்தது. மின் கட்டணத்தை கட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. பஞ்சாயத்தின் வருமானத்தில் 50 சதவீதம் மின் கட்டணத்திற்கே சென்றுவிடும், பாதி பணத்தில்தான் பிற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனவே மின் கட்டணத்தை எப்படி குறைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அப்போது வந்த யோசனைதான் பயோமாஸ் காசிஃபயர்" என பயோமாஸ் கொதிகலன் திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விவரிக்கிறார் அப்போதைய ஓடந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம்.
`பயோமாஸ் கொதிகலன்` என்பது, வீணாகும் மரக்கட்டைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது. இதன்மூலம் மின் கட்டணத்தில் 50 சதவீதம் வரை சேமிக்க முடிந்தது என்கிறார் ஆர். சண்முகம்.

மரக்கழிவில் மின்சாரம்
"2002ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பயோமாஸ் கொதிகலன் மூலம் 1.75 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் தயார் செய்துவிட முடியும். மின் வாரியத்திற்கு 3 ரூபாய் 50 பைசா கட்டி கொண்டிருந்தோம். எனவே இதில் 50 சதவீத அளவில் சேமிக்க முடிந்தது. இரு கிராமத்திற்கான தெரு விளக்குகள் சூரிய சக்தியில் எரியும்படி செய்தோம். அதில் ஒரு 10 சதவீதம் சேமிப்பு ஏற்பட்டது. ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அடிப்படை வசதிகளுக்கான தேவைகளும் அதிகரித்தன. எனவே மின் கட்டணமும் அதிகரித்தது." என்கிறார்.
இந்த பயோமாஸ் கேசிஃபயர் மூலம் 9 கிலோவாட் மின்சாரமும் சூரிய சக்தியின் மூலம் 2 கிலோவாட் மின்சாரமும் தயாரிக்கப்பட்டுள்ளது ஆனால் நாளடைவில் அது போதவில்லை.
அதேபோன்று பயோமாஸ் கொதிகலனிற்கான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்தது. ஒரு யூனிட் மின் கட்டணத்திற்கான செலவும் மூலப்பொருட்களுக்கான செலவும் ஒரு நிலையில் இருந்ததால் அதை நிறுத்திவிட்டனர்.

அதே சமயம் பஞ்சாயத்திற்கு தேவையான மின்சாரத்தை பஞ்சாயத்தே உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் என்கிறார் சண்முகம்.
"ஒரு கட்டத்தில் அதிக திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது வந்த யோசனைதான் காற்றாலை திட்டம். 350 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலையை நிறுவ முடிவு செய்தோம்," என்கிறார்.
வங்கியில் பெற்ற கடன்
"அப்போதைய மாவட்ட ஆட்சியரால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இதுகுறித்து ஆராய சென்னை சென்றோம். பின் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை தேர்வு செய்து காற்றாலைக்கான ஆர்டர் வழங்கினோம். காற்றாலை அமைக்க 1.55 கோடி ரூபாய் தேவையாக இருந்தது. 2001 -2005 ஆம் ஆண்டு வரை பஞ்சாயத்திற்கு அடிப்படை வசதி செய்தது போக 40 லட்சம் உபரி பணமாக இருந்தது. எனவே இந்த 40 லட்சத்துடன்1.15 கோடியை வங்கியிலிருந்து கடனாக பெற்று 1 கோடியோ 55 லட்சம் ரூபாய்க்கு காற்றாலையை நிறுவினோம்." என்கிறார் சண்முகம்.
2006ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று ஓடந்துறையில் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. அதன்பின் சில வருடங்களில் காற்றாலை மூலம் வந்த வருமானத்தில் கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தியுள்ளனர்.
"ஒரு வருடத்திற்கு சுமார் 7 லட்சம் யூனிட் மின்சாரம் அதில் உற்பத்தி செய்யப்படுகிறது. எங்களது கிராமத்திற்கு இப்போது 5 யூனிட் மின்சாரம்தான் தேவையாக உள்ளது. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான தொகை ஓடந்துறை பஞ்சாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது." என்கிறார் சண்முகம்.
பசுமை வீடுகள், பயோமாஸ் கொதிகலன் மற்றும் காற்றாலை திட்டம் என ஓடந்துறை உலக அளவில் பல நாடுகளில் பிரபலமானது. குடிசை இல்லாத கிராமமாகவும் குடிநீர் பெறுவதிலும் தன்னிறைவு கிராமமாக மாறிய ஓடந்துறை இந்தியாவின் 'ஸ்மார்ட் கிராமமாக` மாறியது.
சுமார் 43 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து எங்கள் கிராமத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர் என்று பெருமையுடன் சொல்கிறார் சண்முகம்.
ஜப்பானியர்கள் விரும்பிய ஓடந்துறை

வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டத்தில் உலக வங்கி, மாநில அரசின் மூலமாக ஓடந்துறைக்கு நிதியுதவி வழங்கியது. ஓடந்துறையை பார்வையிட்டுச் சென்று அதன் பின் உதவி பெறும் பல கிராமங்களில் ஓடந்துறை சிறப்பாக செயலாற்றுவதாக வாஷிங்டனிலிருந்து பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜப்பான் பல்கலைக்கழகம் வெளிநாட்டு ஆய்வு படிப்பிற்காக இங்கே வந்து பார்வையிட்டு அவர்கள் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழியில் ஓடந்துறை குறித்த புக்லெட் ஒன்றை பிரசுரித்துள்ளனர். அந்த புக்லெட்டை இப்போதும் வைத்திருக்கிறார் சண்முகம்.
ஃபிரான்ஸிலிருந்து பாராட்டு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழகத்திலிருந்து Smart village குறித்த விளக்கவுரை அளிக்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆப்ரிக்காவிலிருந்து அமைச்சர்கள் வந்தனர். அவர்கள் இந்த திட்டம் குறித்த விவரங்களை கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.

எதிர்கால திட்டம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஓடந்துறை கிராமம் தொடர்ந்து முன்மாதிரியாக செயல்பட்டு வரும் என்று தெரிவிக்கிறார் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேலும். மேலும் காற்றாலையின் திறன் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
"2020 ஏப்ரல் மாதத்திலிருந்து 2021 மார்ச் மாதம் வரை 10 லட்சத்து 47 ஆயிரத்து 589ரூபாய் வருமானம் வந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு கண்காணிப்பு மற்றும் சேவைக்கான தொகை போக தமிழ்நாட்டின் காற்றாலை மின்சாரத்திற்கு மீதி பணம் செல்கிறது. அங்கிருந்து பஞ்சாயத்திற்கு பணம் வருகிறது. செலவு போக சுமார் 4 லட்சம் ரூபாய் வரும்.

இந்த காற்றாலை திட்டம் 350 கிலோ வாட்டில் இயங்கி கொண்டிருக்கிறது இன்றைக்கு ஒரு மெகா வாட் மின்சாரம் எடுக்கும் அளவிற்கு காற்றாலைகள் வந்துவிட்டன எதிர்காலத்தில் இதை விரிவாக்கும் செய்யும் திட்டம் உள்ளது. ஆனால் அனைத்து தரப்பிலும் கலந்தாலோசித்து அந்த முடிவை எடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேலு.
பிற செய்திகள்:
- வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?
- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அமைச்சர் பேட்டி
- நரேந்திர மோதி வாட்டிகன் நகரில் டாக்ஸியில் பயணித்தாரா? உண்மை என்ன?
- தமிழ்நாடு நாள்: நவம்பர் முதல் நாளா? ஜூலை 18ம் தேதியா- சர்ச்சையின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












