You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு
திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சந்தேக மரணமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இவர்களில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராசு. வயது 60. இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று வேலைக்கு சென்ற கோவிந்தராசு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து கோவிந்தராசுவின் மகனுக்கு ரமேஷ் தொலைபேசியில் இருந்து ''உங்கள் தகப்பனார் இறந்து விட்டார்'' என்று தகவல் தெரிவித்ததாக, அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அதன்பேரில் சென்னையிலிருந்து வந்த மகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்துள்ளார். அப்போது அவரது முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயம் இருந்தது என்று இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுவதாக காவல்துறை கூறுகிறது.
இதையடுத்து உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்தராசு முந்திரி தொழிற்சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டு காடாம்புலியூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174 (i)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இயற்கைக்கு மாறான மரணங்களை விசாரிப்பதற்கான சட்டப் பிரிவு இது.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேலு, அல்லாபிச்சை, வினோத் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கினை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றி உத்தரவிட்டார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் செப்டம்பர் 28ஆம் தேதி விசாரணை தொடங்கியது.
கோவிந்தராசு எப்படி உயிரிழந்தார் என்று முந்திரி ஆலை தொழிலாளிகளிடம் காடாம்புலியூர் போலீசார் விசாரித்து பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறப்பதற்கு முன்பு கோவிந்தராசுவை காடாம்புலியூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்ததற்கான சிசிடிவி கேமரா ஆதாரங்கள் மற்றும் கோவிந்தராசுவை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்ட கடலூர் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை அந்த முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் நடராஜன், க கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய ஐந்து பேரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை தேடும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :