You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாட்டா குழுமத்தின் வசமே செல்லவுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978ஆவது ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடாவுக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிப்ரவரி 1978ல் அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசால் முன்னறிவிப்பின்றி ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஜெய்ராம் ரமேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1953ஆவது ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்தப் பொறுப்பில் ஜே.ஆர்.டி டாடா இருந்தார் என்றும் அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஜனவரி 1ஆம் தேதி பம்பாய் (இன்றைய மும்பை) கடலோரம் ஏர் இந்தியா போயிங் 747 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர். இது ஜே.ஆர்.டி டாடா பதவி நீக்கப்பட வழிவகுத்தது.
இந்திரா காந்தி ஜே.ஆர்.டி டாடாவுக்கு எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன?
1978, பிப்ரவரி 14ஆம் தேதியிட்ட கடிதத்தில் இந்திரா காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார்.
நீங்கள் ஏர் இந்தியாவுடன் மேற்கொண்டு இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. நீங்கள் வருத்தமாக இருப்பதைப் போலவே உங்களைப் பிரிந்து ஏர் இந்தியா நிறுவனமும் வருத்தத்தில் இருக்கும். நீங்கள் அந்த நிறுவனத்தின் தலைவராக மட்டும் இல்லை. நிறுவனராகவும், தனிப்பட்ட வகையில் ஆழமான அக்கறையுடன் அதை வளர்த்தவராகவும் இருந்தீர்கள் என்று இந்திரா காந்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலங்காரம் மற்றும் ஏர்ஹோஸ்டஸ்களின் சேலைகள் உள்ளிட்ட சிறிய விவரங்களுக்கு கூட ஜே.ஆர்.டி டாடா நுணுக்கமாக கவனம் அளித்தது ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச நிலைக்கும் உயர்த்தியதாக இந்திராகாந்தி அந்த கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
உங்களைப் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் பற்றியும் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த திருப்தியை உங்களிடம் இருந்து யாராலும் எடுக்க முடியாது. அரசாங்கம் உங்களுக்கு பட்டிருக்கும் கடனை சிறுமைப்படுத்த முடியாது என்று இந்திரா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நம் இருவருக்குள்ளும் சில புரிதலின்மைகள் இருந்தன. நான் செயல்பட வேண்டியிருந்த அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்த எதிர்ப்புகள் ஆகியவற்றை உங்களிடம் வெளிப்படுத்த என்னால் இயலவில்லை. இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று இந்திரா காந்தி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.டி டாடா எழுதிய பதில் கடிதம்
ஏர் இந்தியா நிறுவனத்துடன் தமக்கிருந்த தொடர்புக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது குறித்து இந்திரா காந்தி கடிதம் எழுதியதற்கு பிப்ரவரி 28ஆம் தேதி ஜே.ஆர்.டி டாடா இந்திரா காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தாம் ஆற்றிய பங்கு குறித்து இந்திராகாந்தி எழுதியுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அந்த பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார் ஜே.ஆர்.டி டாடா.
தமது சகாக்கள் மற்றும் ஊழியர்களின் விசுவாசம் மற்றும் உற்சாகம், அரசு அளித்த ஆதரவு ஆகியவை இன்றி தம்மால் எதையும் சாதித்திருக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா தனியார்மயம்
இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது.
ஏர் இந்தியாவை விற்பதற்கான ஏலத்தில் டாடாவின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது டாடா.
டாடாவின் விமான நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தி தேசிய விமான சேவையாக ஏர் இந்தியாவை நடத்தி வந்தது. இப்போது சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா வசமாகிறது.
விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா பணி நீக்கம் செய்ய முடியாது. இரண்டாவது ஆண்டில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :