You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?
- எழுதியவர், பெர்டில் ஃபால்க்
- பதவி, பிபிசிக்காக
இன்று முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, இக்கட்டுரையை மீள்பகிர்வு செய்கிறோம்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் ஃபிரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு தேவைப்பட்டபோதெல்லாம், பெரோஸ் துணை நின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.
லக்னெளவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.
இந்திரா, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அதே 1955-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய ஊழலுக்கு எதிராக பெரோஸ் காந்தி செயல்படத் தொடங்கியது ஒரு வேளை தற்செயலாக நடைபெற்ற சம்பவமாக இல்லாமல் போகலாம்.
அந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மிகவும் வலிமையாக இருந்தது. எதிர்கட்சிகள் சிறிய கட்சிகளாக மட்டும் இல்லை. அவை வலுவற்றவையாகவும் இருந்தன. அதனால், ஜனநாயகத்தில் ஒரு வெற்றிடம் உண்டானது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடைசி வரிசையில் இருந்தவரான பெரோஸ் காந்தி, அப்போதைய அதிகாரபூர்வமற்ற எதிர் கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், இந்த இளம் தேசத்தின் முதல் ஊழல் எதிர்ப்புப் போராளியாகவும் ஆனார்.
அவர் வெளியிட்ட ஊழல்களால், நிறையப்பேர் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது, காப்பீட்டுத் துறை அரசுடைமை ஆக்கப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக வேண்டி இருந்தது.
தனது மருமகன் ஃபிரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் செயல்பட்ட விதம் குறித்து ஜவாஹர்லால் நேரு மகிழ்ச்சியாக இல்லை. இந்திராவும் தனது கணவரின் முக்கியமான செயல்களுக்காக அவரைப் பாராட்டவில்லை.
தனது மனைவியின் எதேச்சதிகாரப் போக்கை ஃபிரோஸ் காந்திதான் முதல் முறையாகக் கண்டறிந்தார். 1959-ஆம் ஆண்டு, தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசை கலைத்துவிட்டு, கேரளாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை இந்திரா உறுதி செய்ததால், ஆனந்த பவனத்தில், உணவு மேசையில் நேருவின் முன்னிலையிலேயே, இந்திராவை 'ஃபாசிஸ்ட்' என்று அவர் அழைத்தார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்பதை கிட்டத்தட்ட அவரது உரை ஒன்றில் கணித்தார்.
ஃபிரோஸ் காந்தி கருத்துரிமைக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராக இருந்தார். நாடாளுமன்றத்தில் எது வேண்டுமானாலும் கூறப்படலாம். ஆனால், என்ன கூறப்பட்டது என்பதை செய்தியாக வெளியிட்டால், அந்த இதழியலாளர் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தப் போக்கு பற்றி ஃபிரோஸ் ஒரு தனிநபர் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுதான் பின்னாளில் 'பெரோஸ் காந்தி பத்திரிக்கைச் சட்டம் ' என்று பரவலாக அறியப்பட்ட சட்டம்.
இந்தச் சட்டத்துக்கு ஒரு வியக்கத்தகு வரலாறு உண்டு. தனது கணவர் மறைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி, அந்தச் சட்டத்தை குப்பைக்கூடைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியால், அச்சட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையின் செயல்பாடுகளை நம்மால் தொலைக்காட்சி மூலமாக நேரலையில் பார்க்க முடியும். ஃபிரோஸ் காந்தியின் பெருமை இதன் மூலம் நிலை கொண்டுவிட்டதாகத் தோன்றுகிறது.
ஃபிரோஸ் மற்றும் இந்திரா எல்லா விவகாரங்கள் குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை வளர்ப்பது குறித்து அவர்கள் மிகவும் முரண்பட்டனர். அரசியல் ரீதியாகவும் அவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
"ஆண்டுகள் ஆக ஆக, நானும் இந்திராவும் நட்புடன் விவாதம் செய்யத் தொடங்கினோம். பிறரை தங்கள் இயல்புடன் இருக்க மற்றவர்கள் விட வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், இந்திரா 'இந்தியத் தாய்' எனும் கருத்தில் உறுதியாக இருந்தார். தன்னிடமே எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார். இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அவர் இருந்தார்," என்கிறார் இந்திராவுக்கு நெருக்கமாக இருந்த மேரி செல்வான்கர்.
"ஒரு கூட்டாட்சி அமைப்புடைய நாடாக செயல்படும் அளவுக்கு இந்தியா முன்னேறவில்லை என்று இந்திரா கருதினார். ஆனால், ஃபிரோஸ் வேறு மாதிரி நினைத்தார். 1950களில் பெரோஸை நான் இரண்டு, மூன்று முறை சந்தித்தேன். அவருடனான எனது உரையாடல்களில் அவர் இந்தியாவில் கூட்டாட்சிக்கு ஆதரவாக இருந்தார் என்றும், இந்திரா அதிகாரக் குவிப்புக்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் புரிந்து கொண்டேன்," என்கிறார் அவர்.
ஃபிரோஸ் காந்தி ஜனநாயகத்திற்கு ஆற்றிய பங்கை சிறுமைப்படுத்துவதில் இந்திரா வெற்றி பெற்றார் என்பது உண்மை. ஆனால், அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு விடயத்தில் அவர்களுக்குள் ஒற்றுமை இருந்தது. இருவருமே தோட்டத்தை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
நவம்பர் 22 ,1943-இல் அகமத்நகர் கோட்டைச் சிறையில் இருந்த தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இந்திரா அதற்காக ஃபிரோஸை பாராட்டியுள்ளார். "அவர் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளாவிட்டால், நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கும் களை செடிகள் இருந்தன. இப்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டு, தரை சீராக உள்ளது," என்று அவர் எழுதியிருந்தார்.
ஃபிரோஸ் காந்திக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருந்ததாக சில புரளிகள் உள்ளன. இந்திராவுடன் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக கூறிக்கொள்ளும் ஆண்களும் உண்டு. ஃபிரோஸ் மற்றும் இந்திரா இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை கருத்தில் கொண்டால், அந்த கிசுகிசுக்கள் அனைத்தும் தொடர்பில்லாதவை. அவர்கள் இருவரும் அன்பும் பகையுமாய் இருந்த ஓர் உறவைக் கொண்டிருந்தனர்.
கேரள ஆட்சி கலைப்பு விவகாரம் குறித்து இந்திராவுக்கு பெரோஸ் காட்டிய எதிர்ப்பு இந்திராவுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருந்தது. தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பிற செய்திகள்:
- இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?
- ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?
- கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி
- தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
- சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
- குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்