You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் ஒரு பழிக்குப் பழி சம்பவம்: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்து கொண்டு சுட்டுக் கொன்ற பெண்
- எழுதியவர், அஜீஜுல்லா கான்
- பதவி, பிபிசி உருது, பெஷாவர்
"என் கணவரைக் கொன்றவனைப் பழி வாங்க முடிவு செய்தேன். அவனுடன் நட்புடன் பழகித் திருமணம் செய்து கொண்டு அவனைக் கொன்று பழி தீர்த்தேன்," என்கிறார் ஒரு பாகிஸ்தான் பெண்.
பாகிஸ்தான் பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த பாஜோர் மாவட்டத்தில் வசிக்கும் இந்தப் பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சக்தாரா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் தமது கணவரின் மரணத்திற்குப் பழிவாங்க மூன்று ஆண்டுகளாக முயற்சித்ததாகவும், இதற்காக ஒரு முழுமையான திட்டத்தை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.
காவல் துறைக்குத் தகவல்
பாஜோர் மாவட்டத்தின் இனாயத் கோட்டையில் உள்ள லூசிம் காவல் நிலைய ஆய்வாளர் விலாயத் கான் பிபிசியிடம் இது ஒரு கடினமான வழக்கு என்றும் தாம் முயன்று இதில் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் முதல் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அது இயற்கையான மரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவரை தனிப்பட்ட முறையில் விசாரித்த போது, அவரது கணவர் தமது நண்பர் குலிஸ்தானால் விஷம் செலுத்தி கொல்லப்பட்டார் என்று கூறினார்.
அவரது மரணம் தொடர்பாக கொலை வழக்கு எதுவும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் காவல் நிலையம் இல்லை என்றும் ஷா ஜாமின் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குலிஸ்தான் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்ததாகக் காவல் துறை கூறியது.
"நாங்கள் அங்கு சென்றபோது, படுக்கையில் ஓர் இரத்தம் தோய்ந்த சடலம் இருந்தது, தலையிலும் உடலின் வலது பக்கத்திலும் குண்டு பாய்ந்திருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த சடலத்துடன் அமர்ந்திருந்தார். மக்கள் கூட்டம் உள்ளேயும் வெளியேயும் கூடியது. மக்களைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்கினோம், அந்த இடத்திலிருந்து ஆதாரங்கள் கிடைத்தன," என பிபிசியிடம் கூறினார் விலாயத் கான்.
ஆஃப்னிஸ்தானைச் சேர்ந்த ஷா ஜமீனுடன் காதல்
குற்றம் சாட்டப்பட்டவர் தமது முதல் கணவர் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தைச் சேர்ந்த ஆஃப்கன் அகதி. அவர் பெஷாவரில் பணிபுரிந்து வந்ததாகவும் தங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்ததாகவும் தங்களுக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அந்தப் பெண் கூறியதாக காவல் துறைத் தரப்பு கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பெண், தமது வாக்குமூலத்தில், "என் கணவர் குலிஸ்தான் என்ற நபருடன் நட்பு கொண்டிருந்தார். பெஷாவரில் இருந்து சம்பாதித்த அனைத்தையும் குலிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தார், தேவைப்படும்போது, அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தார். குலிஸ்தானுடன் ஆழ்ந்த நட்பு இருந்தது அவருக்கு."
அப்பெண்ணின் கணவர் சிறிது காலம் கழித்துத் திரும்பி வந்து குலிஸ்தானிடம் தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பணம் தேவைப் படுகிறது என்றும் கூறினார். ஆனால் குலிஸ்தான் பணத்தைத் திருப்பித் தரவில்லை. பணம் இல்லை என்று மறுத்துவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தமது வாக்குமூலத்தில், "என் கணவருக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, மருந்து வாங்கித் தருகிறேன் என்று கூறி ஊசி மருந்தும் மாத்திரைகளும் வாங்கி வந்து, ஓர் ஊசியை நதிக்கரையில் வைத்து ஷா ஜமீனுக்குச் செலுத்தி, இன்னொரு ஊசியை வீட்டிற்குப் போய்ச் செலுத்திக்கொள்ளுமாறும் மாத்திரைகளையும் உட்கொள்ளுமாறும் கூறினார்.
ஆனால் ஊசி போட்ட பிறகு என் கணவரின் நிலை இன்னும் மோசமடைந்து அவர் தரையில் விழுந்தார். அங்கு இருந்தவர்கள் என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் எனது கணவரை அவர்கள் இறந்த நிலையில் வீட்டிற்கு கொண்டு வந்தனர்," என்று தெரிவித்ததாக விலாயத் கான் கூறினார்.
பழி வாங்கத் திட்டம்
குலிஸ்தான் தமது கணவருக்கு ஊசி போட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர், அதன் பிறகு அவரது நிலை மோசமடைந்தது என்று அந்தப் பெண் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
குலிஸ்தான்தான் தமது கணவரைக் கொன்றார் என்று முடிவுக்கு வந்த அந்தப் பெண் அதற்குப் பழி வாங்குவது என்றும் முடிவு செய்தார். ஐந்து - ஆறு மாதங்களாக தமது கணவரின் மரணத்திற்குப் பழிவாங்க முயற்சி செய்ததாக அவர் கூறினார் என்கிறது போலீஸ் துறை.
ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதன் பிறகு அவர் மீண்டும் குலிஸ்தானுடன் எப்படி நெருங்கி பழகுவது என்று திட்டமிட்டு பின்னர் பழிவாங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குலிஸ்தானை திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு செய்தி அனுப்பியதாகத் தமது வாக்குமூலத்தில் கூறினார் என்கிறது போலீஸ். குலிஸ்தானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் இருந்த நிலையில், அவரை வற்புறுத்தித் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.
"என்னிடம் பணம் இருக்கிறது, நீங்கள் ஒரு கார் வாங்கி அதில் ஊர் சுற்றலாம். நீங்கள் உங்கள் நாட்டில் தொழில் செய்யலாம். நாம் சுகமாக வாழலாம்" என்று ஆசை காட்டிச் சம்மதிக்க வைத்ததாக அந்தப் பெண் கூறினார்.
கடந்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு முன்னர் தாங்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆறு மாதங்கள் அவர்கள் ஒருவரின் வீட்டில், சில சமயங்களில் குலிஸ்தானின் சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் கூறினார். இதன் பின்னர் அந்தப் பெண் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அதில் வசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
"அவர்கள் மாதம் ரூ.3,000 வாடகையில் இனாயத் கலி பகுதியில் ஒரு வீட்டை எடுத்தார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பெண் குலிஸ்தானிடம் தனியாக இங்கு வசிப்பதால் பாதுக்காப்பிற்காக ஒரு துப்பாக்கி இருப்பது அவசியம் என்று கூற, குலிஸ்தானும் 13,500 ரூபாய்க்கு ஒரு துப்பாக்கி வாங்கி வந்தார்.
"எனது முதல் கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன, இரண்டு ஆண்டுகளாக நான் எப்போது, எப்படி பழிவாங்குவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கைத்துப்பாக்கி வீட்டிற்கு வந்தபோது, அதைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன்," என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த நாளைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்ட பெண் கூறுகையில், "நான் இரவில் விழித்திருந்து, ஒரு மணியளவில் மற்றொரு அறைக்குச் சென்று, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி குலிஸ்தானின் அறைக்குச் சென்றேன். குலிஸ்தான் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். ஆனால் துப்பாக்கி சுடவில்லை. துப்பாக்கி வேலை செய்யவில்லை," என்று கூறியுள்ளார்.
அவர் மீண்டும் மற்றொரு அறைக்குச் சென்று துப்பாக்கியை சரிபார்த்தார். இதற்குப் பிறகு அவர் மீண்டும் குலிஸ்தானின் அறைக்குச் சென்று, முதலில் குலிஸ்தானின் தலையிலும், இரண்டாவதாக அவர் உடலின் வலது பக்கத்திலும் சுட்டார். மறு நாள் காலை வரை அங்கேயே அமர்ந்திருந்தார். பொழுது விடிந்ததும், தானே வெளியே சென்று தன் கணவரை யாரோ சுட்டு விட்டதாகக் கூறினார். கூட்டம் கூடத் தொடங்கியது.
காவல்துறை அதிகாரி விலாயத் கான், "முதலில் தான் கொலை செய்யவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தார், ஆனால் காவல்துறை விசாரணையைத் தொடங்கியபோது, அதை ஏற்றுக்கொண்டு எல்லாவற்றையும் கூறினார்.
மேலும் அங்கு கிடந்த துப்பாக்கியைப் பற்றியும் கூறினார். கொல்லப்பட்ட குலிஸ்தானின் மகன் முன்னிலையில் துப்பாக்கியை போலீசார் மீட்டனர்.
குலிஸ்தான் ஒரு நல்ல குணமுள்ள நபர் என்று உள்ளூர் மக்கள் கூறினார்கள். அவர் உள்ளூரில் பணி செய்து கொண்டிருந்தார் என்றும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்