You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் - என்ன நடந்தது?
புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிரூபர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக, டெல்லியில் உள்ள அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட செய்தியாளரான சித்திகி, ஆஃப்கானிஸ்தான் மோதல்களை படம்பிடிக்க சென்றிருந்தார்.
பாகிஸ்தான் எல்லை சாவடி அருகே தாலிபன்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கன் படைகளுடன் சித்திகி இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்திய அரசு இதுவரை ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
தாக்குதலில் இன்னும் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
"தனது நண்பர் கொல்லப்பட்டது" தெரிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் ஃபரிட் மமுன்ட்சே தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த சித்திகி, ராய்டர்ஸ் செய்தி நிறுவத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். 2018ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய அட்னன் அபிடியுடன் இணைந்து புகைப்படத்துறையில் உயரிய விருதான புலிட்சர் விருது பெற்றார்.
மியான்மரின் ரோஹிஞ்சா சமூகத்தினர் எதிர்கொண்ட வன்முறையை புகைப்பட ஆவணம் செய்ததற்காக அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பெரும் அளவில் நிகழ்ந்த இறுதி சடங்குகளை அவர் படம் பிடித்தது பெரிய அளவில் வைரலாகி, உலக கவனத்தை ஈர்த்தது.
"செய்திகளை சேகரிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் ஒரு மனிதரின் உணர்ச்சியை படம்பிடிப்பது போல வேறு எதுவும் இருக்காது" என ஒருமுறை ராய்டர்சிடம் தெரிவித்திருந்தார் சித்திகி.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட நிலையில், காந்தஹாரில் நடக்கும் மோதல்களை படம்பிடித்து செய்தி சேகரிக்க அவர் சென்றிருந்தார்.
செப்டம்பர் 11ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
1990களின் நடுவில் இருந்து 2001ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்புக்கு முன்னர் வரை ஆஃப்கானிஸ்தான் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் கலாசார துன்புறுத்தல்கள் செய்ததாக இந்த அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு படைகள் விலகிவரும் நிலையில், ஆஃப்கானிஸ்தானின் பல பகுதிகளை தாலிபன்கள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வேகமாக கொண்டு வருகின்றனர். இது உள்நாட்டுப்போர் மூளும் அச்சத்தை அங்கு உருவாக்கி இருக்கிறது.
"எங்கள் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டது தெரிந்து மிகுந்த வருத்தமாக உள்ளது" என ராய்டர்ஸ் தலைவர் மைக்கெல் ஃபிரிடென்பெர்க் மற்றும் முதன்மை ஆசிரியர் அலெசான்ட்ரா கலோனி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவரது இறப்பு குறித்து மேலும் தகவல்களை அறியவும், அவரது குடும்பத்துக்கு ஆதரவு தரவும், அப்பிராந்திய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டேனிஷ் எடுத்த சில முக்கிய புகைப்படங்களின் தொகுப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்