You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?
இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, தனது மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பதற்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்து வரும் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது.
ரூ.499-க்கு மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாகனத்தின் விலை தற்போது சந்தையில் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனங்களைவிட ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கும் என ஓலா நிறுவனம் கூறுகிறது. ஆனால் இதுவரை விலை குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
எப்போது இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என்பது குறித்தும் ஓலா நிறுவனம் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. முன்பதிவு செய்தவர்கள் வாகனத்தைச் சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் வாய்ப்பும் இப்போது இல்லை.
கறுப்பு வண்ணத்திலான ஒரு வாகனத்தை ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு காணொளியை அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார்.
எனினும் என்னென்ன வண்ணங்களில் இருசக்கர வாகனம் தயாரிக்கப்படுகிறது, என்னென்ன வசதிகள் இருக்கப் போகின்றன என்பவை உள்ளிட்ட விவரங்களை ஓலா அறிவிக்கவில்லை.
இவை அனைத்தும் விரைவில் வெளியாகும் என தனது இணையத்தளத்தில் ஓலா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தனது விற்பனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், முன்பதிவுப் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியையும் வழங்கியுள்ளது.
ஓலா தொழிற்சாலையின் முக்கியத்துவம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து வரும் தொழிற்சாலையில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஓலா நிறுவனத்துக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, பிப்ரவரி மாதம் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, வாகன உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி நான்கே மாதங்களில் பணிகள் நிறைவுறும் நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் தனு சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த ஜூன் 30-ஆம் தேதி சந்தித்த பவிஷ் அகர்வால் தொழிற்சாலைக் கட்டுமானப் பணி குறித்து விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
- 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரியில் அமையும் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையான இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு கோடி மனித பணிநேரத்தில் அதிவேகமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு, திட்டத்தின் முதல் அலகில் விரைவில் வாகன உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படும் இந்த தொழிற்சாலையின் உட்பகுதியிலேயே சுமார் இரண்டு ஏக்கர் அளவில் காட்டை ஏற்படுத்தி, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுதவிர தொழிற்சாலை வளாகத்தில் மொத்தம் 10 ஏக்கர் அளவுக்கு காடுகளை உருவாக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
- இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான மின்கலன் (பேட்டரி) இங்கயே தயாரிக்கப்படவுள்ளது.
- தொழிற்சாலையின் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நிறைவுற்றவுடன் சராசரியாக இரண்டு நொடிக்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்யப்படும்.
- இதன் மூலம், உலகின் இருசக்கர வாகன உற்பத்தியில் 15 சதவீதத்தை இந்த ஒரே தொழிற்சாலையால் தயாரிக்க முடியும்.
- இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, பிரிட்டன் லத்தீன் அமெரிக்கா, ஆசியா - பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது.
- இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட தொழிற்சாலையாக அமைக்கப்படும் இங்கு வாகன வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சுமார் 3,000 ரோபாட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
- இங்கு அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செய்யப்படவுள்ள இருசக்கர வாகனங்கள் மிகச் சிறந்த வடிவமைப்பு, கழற்றிக்கூடிய வகையிலான மின்கலன், நீடித்த உழைப்பு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் ஐஎச்எஸ் மார்க்கிட் இன்னோவேஷன் விருது மற்றும் ஜெர்மன் டிசைன் அவார்ட் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
பிற செய்திகள்:
- மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி
- இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்: ஸ்டாலின், எடப்பாடி, கமல் உரிமை கோரும் திட்டத்துக்கு நிதி எங்கிருந்து வரும்?
- புதுச்சேரி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது பாமக - அடுத்தது என்ன?
- திமுகவின் கூட்டணிக் கணக்கில் கலங்கிப் போன கம்யூனிஸ்ட் கட்சிகள் - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்