'ஏப்பம் விடாத மாப்பிள்ளை தேவை' - வைரலான பெண்ணியவாத திருமண விளம்பரம் உண்மையா?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவில் பெண்ணியவாதிகள் பொதுவாக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து திருமணத்திற்கு மணமகன் தேடமாட்டார்கள். 

செய்தித்தாள்களில் வரும் திருமண விளம்பரங்கள் எல்லாம், மதம், ஜாதி,தோலின் நிறம், உயரம், அழகாக வேண்டும், சம்பளம் வேண்டும் என்றுதான் இருக்கும். இந்த நிலையில் கடந்த மாதம் செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரம் பலரின் கவனத்தையும் பெற்று வைரலானது. 

அதில் "ஏப்பம் மற்றும் வாயுவை வெளியேற்றாத, அழகான, பணக்கார பெண்ணியவாத ஆண்" தேவை. "பெண்ணுக்கு சிறிய முடி இருக்கும், மற்றும் உடலில் துளையிட்டு ஆபரணங்கள் குத்தியிருப்பார்" என இந்தியாவின் முக்கிய நாளிதழில் விளம்பரம் வெளியானது.

இதனை காமெடியன் அதித்தி மிட்டல், பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா ஆகியோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர். 

இந்நிலையில், இந்த விளம்பரம் உண்மையானதா என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இறுதியில் அது உண்மையில்லை என்றும், ஒரு சகோதரன், சகோதரி மற்றும் அவரது தோழியுடைய விளையாட்டு என்றும் தெரிய வந்துள்ளது. 

விளம்பரத்தில் இருந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து, அந்த பெண்ணியவாதி யார் என்பதை பிபிசி கண்டுபிடித்தது. அப்போது இது சாக்ஷி, அவரது சகோதரர் ஸ்ரீஜன் மற்றும் தோழி தமயந்திஆகியோரின் யோசனை என்று தெரிந்தது. 

அவர்கள் தங்கள் உண்மையான பெயரை வெளியிட விரும்பாததால் அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

"நாங்கள் அனைவரும் நல்ல வேலையில் இருக்கிறோம். நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் சமூக வலைத்தள கேலிகளுக்கு ஆளாக விரும்பவில்லை" என்கிறார் சாக்ஷி. 

"சாக்ஷியின் 30வது பிறந்த நாளிற்காக நாங்கள் செய்த சிறிய விளையாட்டு இது" என்கிறார் ஸ்ரீஜன்.

"30 வயதை அடைவது ஒரு மைல்கல். குறிப்பாக திருமணம் செய்து கொள்ளுமாறு சமூகத்திடம் இருந்து இருக்கும் அழுத்தம் அதிகம்."

சாக்ஷிக்கு உண்மையில் சிறிய முடிதான் இருக்கிறது. உடலில் பல இடங்களில் ஆபரணங்கள் அணிந்திருக்கிறாரர். சமூக சேவைத் துறையில் பணியாற்றும் அவர், வாயு அல்லது ஏப்படி விடாத நபர் வேண்டும் என்பது தங்கள் குடும்ப நகைச்சுவை என்று கூறுகிறார். 

வட இந்திய மாநிலங்களில் பலவற்றில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இதற்கு ஆன செலவு 13,000 ரூபாய். 

"கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் அந்த காசை வைத்து, பெரிதாக கொண்டாடி இருப்போம்" என்கிறார் ஸ்ரீஜன்.

தமது பிறந்தநாளுக்கு முன்நாள் இரவு, தனது சகோதரர் தமக்கு காகித சுருள் ஒன்றை பரிசாக அளித்ததாக கூறுகிறார் சாக்ஷி.

"நான் அதை பிரித்து பார்த்தபோது, [email protected] என்ற இ-மெயில் முகவரியுடன் பாஸ்வர்டும் இருந்தது. அதை வைத்து எனக்கு என்ன செய்வது என்றுகூட தெரியவில்லை. காலையில் ஸ்ரீஜன் செய்தித்தாளை வாங்கி வந்து அந்த விளம்பரத்தை காண்பித்த போது அனைவரும் சேர்ந்து சிரித்தோம்" என்கிறார் சாக்ஷி.

ஆனால் அவர்களுக்குள் செய்து கொண்ட இந்த விளையாட்டு, விரைவில் சமூக ஊடகங்கள் முழுவதும் பரவத் தொடங்கியது. பல நட்சத்திரங்களும் அந்த விளம்பரத்தை பகிர ஆரம்பத்தினர். 

புதிதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு டஜன் கணக்கான மெயில்கள் வந்தன.

"இதுவரை 60க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளன. பலருக்கும் இது விளையாட்டுக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் என்று தெரிந்துள்ளது" என்று சாக்ஷி கூறினார். 

ஆனால், பெண்ணியம் என்பது பெரும்பாலும் மோசமான வார்த்தையாகவும், பெண்ணியவாதிகள் என்றால் ஆண்களை வெறுப்பவர்கள் என்று புரிந்து கொள்ளப்படும் இந்தியா போன்ற நாட்டில், இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாக்ஷிக்கு பல மெயில்கள் வந்துள்ளது.

அதில் சாக்ஷியை பலரும் மோசமான நபராக விவரித்துள்ளனர். 

90 சதவீத திருமணங்களால் பெற்றோர்களால் பார்த்து நடத்தி வைக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில், "அனைவருக்கும் நல்ல மாப்பிளை வேண்டும். ஆனால், சிறந்த மாப்பிளை வேண்டும் என்று விளம்பரம் போட்டால் அது அவர்களை கொந்தளிக்க வைக்கிறது," என்கிறார் தமயந்தி.

பலருடைய அகங்காரத்தை இந்த விளம்பரம் தொட்டுள்ளது என்று கூறுகிறார் சாக்ஷி. 

"ஒருசில விஷயங்களை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு வைத்திருக்கிறார்கள். உயரமான, மெல்லிய அழகான பெண்கள் வேண்டும் என்பது எப்போதும் ஆண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்கள் அவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறி விட்டது. அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்."

மேலும் சாக்ஷி கூறுகையில், "உயரமான, வெள்ளையான, அழகான பெண்கள் வேண்டும் என்று விளம்பரம் போடுபவர்கள்தான் எங்கள் விளம்பரத்தை பார்த்து முதலில் புண்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :