சீக்கியர்கள் ஏன் உலகெங்கும் அன்பைக் கொண்டாடுகிறார்கள்?

500 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் உருவான சீக்கிய மதம், உலகின் ஐந்தாவது பெரிய மதமாகக் கருதப்படுகிறது. அந்த மதத்தினர் ஏன் நல்லது செய்பவர்களாக இருக்கிறார்கள்? சீக்கிய மதத்தினரிடையே காணப்படும் தன்னலமற்ற சேவைப் பண்பைப் பற்றி எழுதுகிறார் ஜஷ்ரீன் மாயல் கன்னா.

எந்த பேரிடரைப் பற்றி நினைத்தாலும், அங்கு உடனே ஓடிவந்து சேவை செய்யும் சீக்கியத் தன்னார்வலர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவளிப்பது, கலகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது, நிலநடுக்கத்திற்குப் பிறகு வீடுகளை மீண்டும் கட்டித்தருவது என்று பல தொண்டுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

மியான்மரின் ரோஹிஞ்சா பிரச்னையிலும், பாரீஸ் குண்டுவெடிப்பு சம்பவங்களின் போதும், இந்தியாவின் விவசாயிகள் போராட்டத்திலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்களின்போதும் என 3 கோடிப் பேரைக் கொண்ட இந்த சமூகம் உலக அளவில் பாதிக்கப்பட்ட அந்நியர்களுக்கு சேவை செய்வதை ஒரு மரபாகவே வைத்திருக்கிறது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின்போது அவர்களின் சேவை மனப்பான்மை உச்சத்தைத் தொட்டது எனலாம்.

மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில், சென்ற வருடம் பத்து வாரத்துக்குள் இருபது லட்சம் பேருக்கு ஒரு குருத்வாராவில் உணவளிக்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட எல்லா தங்கத்தையும் உருக்கி பல குருத்வாராக்கள் இந்தியா முழுவதிலும் மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் கட்டமைத்தன.

சீக்கிய என்.ஜி.ஓக்கள் மூலமாக "ஆக்சிஜன் லங்கர்கள்" உருவாக்கப்பட்டன. லங்கர் என்பது சீக்கியர்களின் சமூக உணவுக்கூடம். கொரோனா இரண்டாம் அலையின்போது மக்கள் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால் லங்கர்களில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

சீக்கியர்கள் எப்படி உலகிற்கு சேவை செய்பவர்களாக மாறினார்கள்?

பெரும்பாலான மதங்களில் மற்றவர்களுக்கு உதவுமாறும் நல்லது செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சீக்கியர்கள் எவ்வாறு பேச்சிலிருந்து செயலுக்குப் பயணித்தார்கள்?

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக், தன்னலமற்ற சேவையும் கடின உழைப்பும் ப்ரார்த்தனையின் அளவுக்கு முக்கியமானது என்று அறிவுறுத்தினார். சீக்கியர்கள் குருத்வாராவுக்குச் செல்லும்போது புனித நூலின்முன்பு நன்றி தெரிவிப்பார்கள், ப்ரார்த்தனை செய்வார்கள்.

அதே அளவுக்கு நேரத்தை லங்கர்களில் உணவு தயாரித்துப் பரிமாறுவதிலும், பக்தர்களின் காலணிகளை கவனித்துக்கொள்வதிலும் இடத்தைத் தூய்மைப்படுத்துவதிலும் செலவழிப்பார்கள்.

சீக்கியக் கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களாவும் சமூக உணவுக்கூடங்களாகவும் சமூகத் தளங்களாகவும் இருக்கின்றன. உங்களுக்கு வீடு இல்லாவிட்டால் அது உங்களுக்கு வீடாகவே விளங்கும்.

சேவையை அவர்களது புனிதப் பாடலாக மாற்றியதன் மூலம், சீக்கியர்களின் மரபணுவிலேயே குருநானக் சேவை மனப்பான்மையை விதைத்திருக்கிறார்.

பஞ்சாபில் உள்ள ஒரு மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகைக்கு வரும் பக்தர்களின் காலணிகளைக் கடந்த 40 வருடங்களாகப் பார்த்துக்கொள்கிறார் பல்ஜீந்தர் சிங்.

"மனிதநேயம் என் மதத்தை விட உயர்வானது" என்கிறார்.

நம் பிரச்சனைகளிலிருந்து மனதை திசைதிருப்பி மற்றவர்களுக்கு உதவி செய்வது நம் மனநலனைப் பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சேவை செய்யும்போது ரத்த அழுத்தம் குறைகிறது. இறப்பு விகிதம் குறைகிறது. மனநலம் மேம்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

கைகளால் வேலை செய்வது ஒரு சக்திவாய்ந்த தியானத்தைப் போல மனதை ஆற்றுப்படுத்துகிறது. பாஷ்மீனா கம்பளி நூற்பவர்களையும் ஜப்பானில் அழகுசாதன பிரஷ்களை உருவாக்குபவர்களையும் கேட்டுப்பாருங்கள், தங்கள் நுணுக்கமான வேலை ஒரு தியானத்தைப் போன்றது என்று கூறுவார்கள்.

பெருந்தொற்றுக் காலத்தின்போது லண்டன் சௌத் ஹாலில் 97 வயதான நிஷாரத் கௌர், வீடற்றவர்களுக்கான ஒரு சமூகக் கூடத்தில் உணவு சமைத்திருக்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதை எட்டிவிட்ட கௌர், நடமாடிக்கொண்டிருக்கும் வரை சேவை செய்யவேண்டும் என்று நம்புகிறார்.

அந்த வேலையே ஒரு சுயமருந்தாக இருக்கிறது - மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான கடுமையான முயற்சிகள் இல்லாமலேயே நிகழ்த்தப்படும் ஒரு தியானம் அது.

மேலும் ஒரு நிகழ்வில், ஹஸ்மீத் சிங் வசித்த கனடாவின் நோவா ஸ்கோடியாவில் அவரைப் பலரும் இஸ்லாமியர் என்றே நினைத்தனர். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் பாங்க்ரா வீடியோக்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவை வைரலாகின. தன் கசப்புணர்வை மறந்து தனக்கான மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டார் ஹஸ்மீத் சிங்.

நல்லவர்களாக இருக்க பெரிய ரகசிய முயற்சிகள் தேவையில்லை, மற்ற மனப்பான்மைகள், செயல்பாடுகளிலிருந்தே அது வந்துவிடும்.

சீக்கியர்களின் அன்றாட வழிபாட்டில் இரு வேண்டுதல்கள் உண்டு. ஒன்று "ஸர்பத் தா பல்லா" அல்லது அனைவருக்குமான நல்வாழ்வு. இதை வேண்டிக்கொள்வதன் மூலம், சீக்கியர்கள் அனைவரும் ஏற்புடைய, சமமானவர்கள் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர். அதுவே சேவையின் அடிப்படை, அதனாலேயே குருத்வாராக்களில் அனைவரும் வழிபட முடிகிறது.

இரண்டாவது முடிவற்ற நேர்மறை எண்ணம். இது "சர்தி காலா" என்று அழைக்கப்படுகிறது. குருத்வாராவில் வழிபடும்போது, திருமணங்களின்போதும் விழாக்களின்போதும் வாழ்வில் பிரச்னைகள் ஏற்படும்போதும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் இந்த இரண்டு வார்த்தைகளை சொல்லிக் கொள்வார்கள்.

சேவை செய்வதற்கான நோக்கம் என்பது ஒரு பயனை நோக்கிய மகிழ்ச்சியைக் கண்டடைவது.

நல்வாழ்வு வாழ நமக்கு இருவகையான மகிழ்ச்சிகள் தேவை என்று மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். வாழ்த்துக்கள், பொருட்களை வாங்குவது, பயணம் செய்வது போன்ற புறக்காரணிகளால் வருவது ஹெடோனிஸ்டிக் மகிழ்ச்சி (Hedonistic happiness) என்று அழைக்கப்படுகிறது.

யூடெய்மானிக் (eudaimonic) மகிழ்ச்சி என்பது ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, சேவை செய்வது போன்றவற்றால் வருகிறது.

சீக்கியர்கள் தங்கள் வாழ்வில் இரண்டையும் திறமையாகக் கடைபிடிக்கிறார்கள்.

எல்லா சீக்கியர்களும் மகிழ்ச்சியானவர்களாகவும் சேவை செய்வதில் மகிழ்பவர்களாகவும் இருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை. ஆணாதிக்க சிந்தனை, வன்முறை என்று இந்த சமூகம் நிறைய பார்த்திருக்கிறது. சீக்கியர்களின் நற்பண்புகளைப் போலவே அவர்களின் பிரச்னைகளும் பரவலானாவை.

உதாரணமாக, 2015ல் பஞ்சாப்பியர்கள் குறித்த ஆய்வு கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட பஞ்சாபில் போதைப்பழக்கமும் போதைப்பழக்கம் சார்ந்த குற்றங்களும் அதிகம் என்கிறது அந்த கணக்கெடுப்பு.

எல்லா மனிதர்களையும் போலவே சீக்கியர்களிடமும் குறை உண்டு. அவர்கள் மற்றவர்களை விட மேலானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களது மத நம்பிக்கை அவர்களிடம் சில விஷயங்களை அறிவுறுத்துகிறது. அதுவும் அவர்களது வளர்ப்பு முறையும் சேர்ந்து, மற்றவர்களோடு ஒப்பிடும்போது அவர்களைக் கூடுதலாக சேவை செய்ய வைக்கிறது.

சீக்கிய மதத்தில் நன்மை செய்வது என்பது ஒரு கொண்டாட்டம், கடமை அல்ல. அதுதான் இங்கு ரகசியம். அதனால்தான் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட சீக்கியர்கள் காவல்துறையினருக்கு உணவளித்தார்கள்.

வெளியிலிருந்து பார்த்தால் சேவை என்பது பெரிய தன்னலமற்ற தொண்டு போலத் தெரியும். ஆனால் அதைத் தொடர்ந்து செய்யும்போது, மனதில் ஒரு சலனமற்ற தன்மையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் வரும். அது ஒரு எளிதான, மகத்தான தீர்வு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :