You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குரு நானக்: சடங்குகளை எதிர்த்த சீக்கிய குரு பற்றிய 7 தகவல்கள்
இன்று சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த 7 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
- குரு நானக் ஏப்ரல் 15ஆம் தேதி 1469 ஆம் ஆண்டு பிறந்தார். ஆனால், கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று இவர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த நாள் வரும்.
- சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்த பகுத்தறிவாளராக இவர் வாழ்ந்துள்ளார். சீக்கியர்கள் இதற்கு ஆதாரமாக, ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்கள். ஒரு முறை இவர் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் மக்கள் தண்ணீரை கைகளில் அள்ளி கிழக்கு நோக்கி தெளிப்பதைப் பார்த்தார். இது குறித்து குரு நானக் கேட்டபோது அவர்கள், "இப்படி தண்ணீர் தெளிப்பதன் மூலம் தங்கள் முன்னோர்களின் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்கும்" என்று கூறுகிறார்கள். உடனே குரு நானக், தண்ணீரை எடுத்து மேற்கு பக்கம் தெளிக்கிறார். இதற்கு அந்த மக்கள் காரணம் கேட்கும் போது, நான் பஞ்சாபில் இருக்கும் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகக் கூறுகிறார் குரு நானக். அதைக் கேட்டு சிரித்த அந்த மக்கள், "இங்கே தண்ணீர் தெளித்தால் எப்படி பஞ்சாபுக்கு தண்ணீர் செல்லும்?" என்று கேட்கிறார்கள். "இங்கே தெளிக்கும் நீர் வேறு உலகத்தில் இருக்கும் முன்னோர்களுக்கு செல்லும் எனில், பஞ்சாபுக்கு செல்லாதா?" என்று கேட்கிறார். இப்படி பல சடங்குகள், மூட நம்பிக்கைகளை எதிர்த்து போதனைகளை வழங்கினார் குருநானக்.
- இந்து குடும்பத்தில் குரு நானக் பிறந்திருந்தாலும், தாம் இந்துவோ, முஸ்லீமோ அல்ல என்று கருதி வந்தார் குரு நானக். அவர், "நான் இந்துவோ, முஸ்லிமோ அல்ல. பின் யாருடைய பாதையை நான் பின்பற்ற? நான் கடவுளின் பாதையை பின் பற்றுகிறேன். ஏனெனில் கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை." என்கிறார்.
- குரு நானக் முக்கியமாக மூன்று போதனைகளை முன் வைக்கிறார். "வந் சக்கோ", "கிரட் கரோ" மற்றும் "நாம் ஜப்னா". வந் சகோ என்றால் பிறருக்கு உதவுவது, பிறருடன் சேர்ந்து வாழ்வது. கிரட் கரோ என்பது பிறரை சுரண்டாமல் நேர்மையாக வாழ்வது. "நாம் ஜப்னா" என்பது அகத் தூய்மையுடன் கடவுளிடம் பிரார்த்திப்பது.
- குரு நானக் தன்னுடைய 18 வயதில், மாதா சுலகானி என்பவரை செப்டம்பர் 24, 1487 ஆம் ஆண்டு திருமணம் செய்கிறார். அவருக்கு இரண்டு மதங்கள் ஸ்ரீ சந்த் மற்றும் லக்ஷ்மி சந்த் .
- குரு நானக் தான் படைத்த புனித நூலான குரு கிராந்த சாகிப்புடன் உலகம் முழுக்க பயணம் சென்றார். மெக்கா, திபெத், காஷ்மீர், வங்கம், மணிப்பூர், ரோம் ஆகிய இடங்களுக்கு தம் முஸ்லிம் நண்பனான பாய் மர்தானாவுடன் பயணித்து தனது வழிமுறையைப் பரப்பினார்.
- பாலின சமத்துவத்தை வலியுறுத்தியவர் குரு நானக். பெண்கள் உரிமை குறித்து உறுதியாகப் பேசியவர் அவர். பாலின பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியான பிரசாரத்தை முன்னெடுத்த அவர், "பெண்ணிலிருந்தே ஆண் பிறந்தான். பெண்ணிலிருந்தே அரசனும் பிறந்தான். பின் ஏன் பெண்ணை தீட்டாகக் கருதுகிறீர்கள்? பெண்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்