You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்போன் இல்லாமலே பிறருக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் வசதி பரிசோதனை
செல்போனைப் பயன்படுத்தாமலேயே பிறருக்குச் செய்தியை அனுப்பும் வகையிலான புதிய வசதியை வாட்சாப் பரிசோதனை செய்து வருகிறது.
இது தவிர, வாட்சாப் தொடர்புடைய இன்னொரு பரபரப்பான செய்தியும் உள்ளது. அதாவது 20 லட்சம் இந்தியப் பயனர்களை வாட்சாப் முடக்கியுள்ளது. எப்போது, எதற்காக என்ற விவரங்கள் இந்த செய்தியின் பின் பகுதியில் உள்ளன.
இப்போது முதலில் செல்போனை பயன்படுத்தாமலே பிறருக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் வசதி பரிசோதனை செய்யப்படுவது குறித்து பார்ப்போம்.
ஒரே நேரத்தில் 4 சாதனங்களில்
இப்போது வாட்சாப் செயலியானது முற்றிலுமாக ஒரு தொலைபேசி எண்ணுடனும் திறன்பேசியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அதை டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கணினிகளில் இணைத்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.
தற்போது வாட்சாப் பரிசோதித்து வரும் புதிய வசதி மூலம், உங்களுடைய செல்போனின் பேட்டரி தீர்ந்துவிட்ட பிறகும் செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும்.
டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் என நான்கு பிற வகைச் சாதனங்களிலும் ஒரே நேரத்தில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என வாட்சாப் கூறியுள்ளது.
முதலில் பீட்டா வடிவில் வெளியிடப்படும் இந்த வசதியானது, சில பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும். பொதுவாக வெளியிடுவதற்கு முன் இந்த வசதியை மேம்படுத்தவும் வாட்சாப் திட்டமிட்டிருக்கிறது.
வாட்சாப் பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானதான இரு எல்லை குறியாக்கம் (END to END encryption) புதிய வசதியிலும் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்சாப் செயலிக்குப் போட்டியாக விளங்கும் பல்வேறு செயலிகளில் இத்தகைய வசதி ஏற்கெனவே இருக்கிறது. சிக்னல் போன்ற செயலிகளில் கணக்கைத் தொடங்குவதற்கு மட்டும் திறன்பேசி இருந்தால் போதுமானது. அதன் பிறகு கணினி மூலமாகவே செய்திகளை அனுப்ப முடியும்.
வாட்சாப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திறன்பேசி இல்லாமல் செய்தியை அனுப்பும் வசதி வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.
"அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம்"
புதிய வசதியைக் கொண்டுவரும் வாட்சாப்பின் முயற்சி, அதன் மென்பொருள் வடிவமைப்பில் "மறுபரிசீலனை" செய்ய வேண்டியதாக அமையும் என இந்த அறிவிப்பை வெளியிட்ட இடுகையில் ஃபேஸ்புக் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"ஏனென்றால், தற்போதைய வாட்சாப் பதிப்பு "திறன்பேசி பயன்பாட்டை முதன்மை சாதனமாகப் பயன்படுத்துகிறது. இது எல்லா பயனர் தரவுக்கும் திறன்பேசியை மூல ஆதாரமாகக் கொண்டிருக்கிறது" என்று வாட்சாப் தெரிவித்துள்ளது.
வாட்சாப் வலை மற்றும் பிற ஸ்மார்ட்போன் அல்லாத பயன்பாடுகள் அடிப்படையில் தொலைபேசியில் என்ன நடக்கிறது என்பதற்கான "கண்ணாடி" ஆகும்.
ஆனால் கணிணியில் பயன்படுத்தும் செயலியுடனான இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவது தற்போதிருக்கும் முறையில் பெரும் குறைபாடாகக் கருதப்படுகிறது.
தற்போது வாட்சாப்பை பயன்படுத்தும்போது ஒரு நேரத்தில் ஒரேயொரு துணைப் பயன்பாடு மட்டுமே இயங்க முடியும். வேறொரு சாதனத்தில் வாட்சாப்பை பயன்படுத்த முயன்றால் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பயன்பாடு துண்டிக்கப்பட்டு விடும்.
"வாட்சாப்பின் புதிய பல-சாதனக் கட்டமைப்பு இந்த தடைகளை நீக்குகிறது, இனி ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசி மட்டுமே மூல ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதே நேரத்தில் பயனர்களின் தரவை தடையின்றி, பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்" என்று வாட்ஸ்அப் கூறுகிறது.
ஒவ்வொரு சாதனத்துக்கும் குறியீடு
தொழில்நுட்ப அளவில், ஒவ்வொரு சாதனத்துக்கும் அதன் சொந்த "அடையாளக் குறியீடு" வழங்கப்படும். எந்தெந்தக் குறியீடுகள் ஒரே பயனர் கணக்கைச் சேர்ந்தவை என்ற பதிவை வாட்சாப் வைத்திருக்கும். அதாவது தரவுகளை வாட்சாப் அதன் சொந்த சர்வர்களில் சேமிக்க தேவையில்லை.
ஆனால் வைரஸ் தடுப்பு நிறுவனமான ஈசெட்டின் பாதுகாப்பு நிபுணர் ஜேக் மூர், "பாதுகாப்பு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அதிகமான சாதனங்களில் செய்திகளை வைத்திருப்பது கவலைக்குரியதாக மாறலாம்" என்று கூறினார்.
"தீங்கிழைக்க நினைக்கும் ஒருவர் எப்போதுமே ஒரு சிக்கலை உருவாக்க விரும்புவார்," என்று அவர் தெரிவித்தார்.
"வீட்டில் கொடுமை இழைப்பவர்கள், கண்காணிப்பவர்கள் இந்த புதிய வசதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முற்படக்கூடும். கைபேசி தவிர பிற சாதனங்களில் ஒத்திசைக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் கண்காணிப்பதற்காக கூடுதல் துணைப் பயன்பாடுகளை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்"
சமூக பொறியியல் என்பது "எப்போதும் அதிகரித்து வரும்" அச்சுறுத்தல். பிறர் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதை பயனர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
"மக்கள் தங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்காணிக்க வேண்டியதும் மிக முக்கியம்" என்று அவர் கூறினார்.
20 லட்சம் கணக்குகள் முடக்கம்.
விதிகளை மீறியதற்காக மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியிருப்பதாக வாட்சாப் தெரிவித்துள்ளது.
இவர்களில் 95% பயனர்கள் தகவல்களைப் பகிரும் பார்வார்ட் வசதியை வரம்புக்கு அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் சர்ச்சைக்குரிய புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் வாட்சாப் தனது முதல் மாத இணக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.
சுமார் 40கோடி பயனர்களைக் கொண்ட இந்தியா வாட்சாப்பின் மிகப்பெரிய சந்தையாகும். இது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
தேவையற்ற மற்றும் தீங்கிழைக்கும் செய்திகளை அதிக அளவில் அனுப்புவதைத் தடுப்பதே தனது முக்கியமான பணி என்று வாட்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 80 லட்சம் கணக்குகளை வாட்சாப் தடை செய்கிறது. இதற்காக இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தை வாட்சாப் பயன்படுத்துகிறது.
மே 15 முதல் ஜூன் 15 வரை இந்தியாவில் மட்டும் "அதிக எண்ணிக்கையிலான மற்றும் அசாதாரண அளவிலான தகவல்களை" அனுப்பிய 20 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்சாப் கூறுகிறது.
+91 (இந்தியாவின் தொலைபேசிக் குறியீடு) மூலம் இந்த எண்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் வாட்சாப் தெரிவிக்கிறது.
வாட்சாப்பும் வதந்திகளும்
வாட்சாப்பும் வதந்திகளும் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டன. பெரும்பாலும் இந்தியாவில் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்புவது குறித்த விவாதங்களில் வாட்சாப் மையமாக இருக்கிறது.
இத்தகைய வதந்திகளும் போலிச் செய்திகளும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு சில மணிநேரத்தில் அனுப்பப்படுகின்றன. அவற்றைத் தடுப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
மொத்தமாக பரவும் செய்திகளும் வீடியோக்களும் இந்தியாவில் கும்பல் வன்முறையைத் தூண்டிய நிகழ்வுகள் உண்டு. அவை மரணங்களுக்கும் வழிவகுத்தன.
தங்களது சேவையை தவறான முறைகளில் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் கருவிகளை களமிறக்கியிருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
குற்றம் இழைப்பவர்கள் எனச் சந்தேகிப்பவர்களைக் கண்டறிய அவர்களின் குழு புகைப்படங்கள், சுய விவரங்கள், மறைகுறியாக்கப்பட்ட தரவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாகவும் வாட்சாப் கூறியுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய அரசுடன் தீவிரமான மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சூழலில் வாட்சாப் தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் வழிகாட்டுதல்கள் கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தன. இதன்படி சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ளடக்கம் ஒழுங்குபடுத்தப்படும். இது பேச்சுரிமை மற்றும் பயனர்களின் தனிப்பட்ட உரிமை உள்ளிட்டவற்றுக்கு எதிராக இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தில் மிக அதிக அளவிலான தகவல்களை அகற்றுவதற்கு அரசுக்கும், அரசு அமைப்புகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த விதிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால் வதந்திகள் பரவுவதையும், கொடுமை இழைப்பதையும் தடுப்பதற்காகவே இவை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- பிராசாந்த் கிஷோர் எதிர்காலம் என்ன? அரசியல் ஆலோசகரா? அரசியல்வாதியா?
- தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்?
- போதை ஊசிகள் வியாபாரம்: கோவை இளைஞர்கள் இலக்காவது எப்படி?
- 5 மணி நேரத்துக்கு ஒரு என்கவுன்டர்; லவ் ஜிகாத் கைதுகள் - உ.பி அரசை விமர்சித்து சிசிஜி திறந்த மடல்
- அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்