பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது சிறுமி
படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் சிறுமி ஐந்து ஆண்களால் கடந்த எட்டு மாதங்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

பிறந்த பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதாக அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறார் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தம்மை வல்லுறவு செய்ததுடன், அவரது நண்பர்களுடனும் உடலுறவு கொள்ள வற்புறுத்திய உறவினர் குழந்தையைக் கொல்ல உதவினார் என்று அந்தச் சிறுமி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள்.

ஆகஸ்ட் வரை ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான இணையவழி பணப் பரிவர்த்தனைகள்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், @finminindia twitter

படக்குறிப்பு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இணையவழி பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பயனாளா்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார் என்கிறது தினமணி செய்தி.

உலக தொழில்நுட்ப நிறுவனத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன. அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பயனாளர்களின் தனியுரிமைக்கு நிறுவனங்கள் உரிய மதிப்பளித்துச் செயல்பட வேண்டும்.

பயனாளர்களின் தரவுகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதே நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முதுகெலும்பாக விளங்குகிறது என்று கூறினார்.

நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான இணையவழி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியாகவும், கடந்த 2019-இல் ரூ.2 லட்சம் கோடியாகவும் இருந்தது. பொறுப்புமிக்க இணையவழி பணப் பரிவர்த்தனை தொடா்பான கொள்கைகளை ஐ.நா. இந்தக் கூட்டத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு சிறப்புவாய்ந்தது. சரியான நேரத்தில் இந்தக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் - மேலும் ஓராண்டு அவகாசம்

விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கியுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு புதிய சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி, விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர், வழக்கமான வளர்ச்சிக்கட்டணம், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டுக் கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், திறந்தவெளிப் பகுதி விதிமீறல்களுக்கான கட்டணம் போன்றவற்றை செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்காக செப்டம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :