MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், BCCI / IPL
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
இதற்கு முன்பு அந்த அணி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது.
நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்திருந்தால் மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி இருக்கும்.
ஆனால் நேற்றைய வெற்றியின் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை தங்கள் ரசிகர்கள் இழக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.
நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுத்தனர்.
அடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், BBCI / IPL
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தவர் 42 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது.
மும்பை அணிக்காக பும்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவிகரமாக இருந்தனர்.
சௌரப் திவாரி 37 பந்துகளில் 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து இருந்தனர்.
19வது ஓவரின் இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றுள்ளது.
நேற்றைய வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மேலே செல்வதற்கு உதவியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது.
எனவே மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாது, அதிக ரன்கள் எடுத்து வெல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணி, நேற்றைய போட்டிக்கு முன்பு விளையாடிய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. நேற்று மும்பைக்கு எதிரராக மீண்டும் தோற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
இப்போது அந்த அணி 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.
பிற செய்திகள்:
- நாசா வெளியிட்ட படத்தில் இருக்கும் 'கடவுளின் கை' - உண்மை என்ன? #factcheck
- ஆப்கன் பெண் நீதிபதிகளை தேடும் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து தலைமறைவு
- சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு
- பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு: அதிபருக்கு காயமில்லை; முட்டை உடையவில்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












