ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் சார்ஜா ஆடுகளத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் அழுத்தம் கொடுத்த சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்தை வலுவாகப் பிடித்திருக்கிறது. தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. நான்கு ஓவர்களை வீசிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
தொடக்கத்தில் டெல்லி அணி சிறப்பான அடித்தளத்தை அமைத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர், ஃபெர்குசன் என கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.
ஒருபுறம் ரிஷப் பண்ட் ரன் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.
ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யாரும் களத்துக்குள் நீடித்து நிற்கவில்லை, கணிசமாக ரன் எடுக்கவும் இல்லை. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்தது.
அச்சுறுத்திய சார்ஜா ஆடுகளம்
கொல்கத்தாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. டெல்லி அணியின் பந்துவீச்சு கொல்கத்தாவையும் தடுமாற வைத்தது. 14-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது அந்த அணி. சற்று சறுக்கினாலும் தோல்வியடையும் நிலை இருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
எனினும் நிதிஷ் ராணா சிறப்பாக ஆடி 36 ரன்களை எடுத்திருந்தார். கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத சுனில் நரைன் இந்தப் போட்டியில் பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, பத்தே பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெற்றிக்கு அருகில் அணியைக் கொண்டு வந்தார் நரைன்.
கடைசியில் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு பவுண்டரியை அடித்து டெல்லி அணிக்கு வெற்றிபெற வைத்தார் ராணா.
பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட சுனில் நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சார்ஜா மைதானத்தின் மிக மெதுவான ஆடுகளமே இரு அணிகளும் ரன் எடுக்கத் தடுமாறியதற்கு முக்கியக் காரணம். அதிரடி ஆட்டம் பெரும்பாலும் எடுபடவில்லை. இந்த நிலைமையை கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டார்கள்.
கொல்கத்தாவில் ஆண்ட்ரே ரஸல் இல்லாத நிலையிலும் அந்த இடத்தை வெங்கடேஷ் அய்யர் நிரப்பினார்.
பழிதீர்த்த அஸ்வின்
முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தினேஷ் கார்த்திக் குறுக்கே வந்து அவர்களைத் தடுத்தார். இதற்குப் பதிலடியாக கொல்கத்தா பேட்டிங் செய்யும்போது, இயான் மார்கனை இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஸ்வின் வெளியேற்றினார். அப்போது மார்கனை நோக்கி குரல் எழுப்பியபடி ஓடிவந்து பழிதீர்த்துக் கொண்டார்.
பிற செய்திகள்:
- சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு
- பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு: அதிபருக்கு காயமில்லை; முட்டை உடையவில்லை
- காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?
- SRH vs RR: வீணாய் போனது சஞ்சு சாம்சனின் அதிரடி; ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












