யானை பாகங்களும் சர்வதேச கடத்தல்களும்: பல பாகமாக கூறுபோட்டு விற்கப்படும் யானைகள் #WildlifeTrafficking

யானை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யானை
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் உள்ள தோலம்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அந்த யானையின் தந்தங்களைப் பார்த்த குஞ்சூர்பதி கார்த்திக் குமாருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. யானையின் தந்தங்களை உருவி எடுத்து காட்டுப் பகுதியில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனை விற்பதற்காக ஆள் தேடி அலைந்துள்ளனர். ஒரு வழியாக மான் என்கிற தாமோதரன் என்பவர் மூலம் தந்தங்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அவற்றை கேரளாவில் விற்பதற்காக தங்கராஜ் என்பவரை அணுகியுள்ளனர். அவர், `நல்ல விலை கிடைக்கும்' எனக் கூறியதால் தந்தங்களை அங்கேயே மறைத்து வைத்துவிட்டனர். பின்னர், அந்த தந்தங்கள் காணாமல் போகவே இவர்களுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காவல்துறை விசாரிக்க வந்தபோதுதான், யானை தந்த விவகாரம் வெளியில் வந்தது.

தொடர்ந்து வனத்துறையினரின் விசாரணையில் கேரளாவுக்கு தந்தங்களை தங்கராஜ் கொண்டு சென்ற தகவல் கிடைத்துள்ளது. கொச்சினில் தங்கராஜை பிடித்து விசாரித்தபோது கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 அடி நீளம் கொண்ட 5 கிலோ எடையுள்ள தந்தங்கள் சிக்கியுள்ளன.

இதே வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 11 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி தந்தங்களை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் இந்தக் கும்பல் தந்தத்தை விற்பதற்கான பணிகளில் இறங்கியபோது வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். இதனால் தங்களின் இருப்பிடத்தை சேலத்துக்கு மாற்றினர். இருப்பினும், பின்தொடர்ந்து சென்று ஐந்து பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர்.

``தந்தங்களை வர்த்தகம் செய்பவர்களில் 2 வகையான குற்றவாளிகள் உள்ளனர். உலகத் தேவையை அறிந்து தந்தத்தின் மதிப்பைக் கணக்கிட்டு வேட்டை நடப்பது. அடுத்ததாக, இறந்து கிடந்த யானையின் தந்தத்தை மறைத்து வைத்து விற்பது எனச் செயல்படும் சிறு கும்பல்.

யானை தந்தத்தில் செய்யப்பட்ட மாலை

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau

படக்குறிப்பு, யானை தந்தத்தில் செய்யப்பட்ட மாலை

இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களை வைத்து விலையை நிர்ணயிக்க முடியாது. சர்வதேச சந்தையில் உள்ள விலை காரணமாக வலைப்பின்னலோடு இந்த வியாபாரம் நடக்கிறது. இதனைக் களத்தில் செய்பவர்கள் மிகச் சாதாரண மனிதர்களாக உள்ளனர். ஆனால், விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் மிகப் பெரிய மனிதர்களாக உள்ளனர்" என்கிறார் `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ்.

``யானையின் முடி, யானையின் பல் (கஜ முத்திரை), தோல், கால் ஆகியவற்றையும் விற்கின்றனர். முன்பெல்லாம் காட்டுக்குள் சென்று யானையை வேட்டையாடிவிட்டு தந்தத்தை மறைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. பின்னர், `அந்த யானையின் தந்தத்தை யாராவது வாங்குவார்களா?' எனத் தேடிக் கொண்டிருந்தனர். இப்போது டிரெண்டு மாறிவிட்டது. உள்ளூர் வேட்டைக்காரர்களுக்குச் சில உத்தரவுகள் செல்கின்றன.

`எங்களுக்கு இந்த ஐவரி, இப்படிப்பட்ட எடையில் வேண்டும்' என வர்த்தகர் கூறுகிறார். அந்தத் தகவல் சிலர் மூலம் வேட்டைக்காரர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதன்பிறகு குறிப்பிட்ட யானைகளை அந்தக் கும்பல் தேடத் தொடங்குகிறது. அதில் எந்த ஆண் யானையின் தந்தம் சரியாக இருக்கும் எனக் கண்காணிக்கின்றனர்.

பின்னர், அந்த யானை வரும் பாதையை அறிந்து அதை தனியாக பிரித்து சுட்டுக் கொல்கின்றனர். `எனக்கு இப்படிப்பட்ட தந்தம்தான் வேண்டும்' எனக் கூறி ஆர்டர் செய்வதைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது" என பிபிசி தமிழிடம் விவரித்தார், கிருபா சங்கர் ஐ.எஃப்.எஸ். இவர் இந்திய அரசின் வனஉயிரின குற்றத் தடுப்புப் பிரிவின் தென்மண்டல துணை இயக்குநராக இருக்கிறார்.

`` தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான், ஒரிசா என அனைத்து மாநிலங்களிலும் யானைகளின் உடற்பாகங்களை வெட்டிக் கடத்துவது நடந்து வருகிறது. இதுவரையில் 150 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கென ஒரு குழு செயல்படுகிறது. யானையை காட்டில் வேட்டையாடுவது, அதன்பிறகு அந்த யானையின் தந்தத்தைக் காட்டுக்குள் பதுக்கி வைப்பது, பின்னர் அந்த தந்தத்தைக் காட்டில் இருந்து வெளியே கொண்டு வருவது என ஒரு குழு செயல்படும்.

அதிலும், யானையை எல்லோராலும் வேட்டையாடிவிட முடியாது. அதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வது, அதில் கோளாறு ஏற்பட்டால் சரிசெய்து கொடுப்பது என குழு செயல்படும். வெளியில் வந்த தந்தங்களை அப்படியே விற்கும்போது போலீஸ் கையில் சிலர் பிடிபடுகின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக அதனை கார்விங் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி அலங்காரப் பொருள்கள், சிலை என செய்து விற்கின்றனர். தந்தத்தை அப்படியே விற்பதைவிடவும் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்வது கடத்தல்காரர்களுக்கு எளிதாக உள்ளது" என மேலதிக விவரங்களைப் பட்டியலிட்டார் கிருபா சங்கர்.

யானை தந்தத்தில் செய்யப்பட்ட விலங்கு பொம்மைகள்

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau

படக்குறிப்பு, யானை தந்தத்தில் செய்யப்பட்ட விலங்கு பொம்மைகள்

`` தந்தங்களை சிறிதளவு கமிஷன் வைத்து விற்பவர்கள், தேசிய அளவில் அதனை வெளியில் கொண்டு செல்பவர்கள் என இரண்டு வகைகளாக உள்ளனர். இரண்டாவது குழுவினர் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் செயல்படுகின்றனர். அங்கிருந்து சர்வதேச அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது புது டிரெண்டாக புராதனப் பொருள் என்ற பெயரில் தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகளையும் பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் கும்பல் முளைத்துள்ளது. கன்னியாகுமரியில் பிடிபட்ட 3 பேர் கும்பல் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோத்தகிரி, பெங்களூருவில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், 2018 ஆம் ஆண்டு முதல் முகநூலில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் ராஜஸ்தானில் இரண்டு கும்பல்கள் பிடிபட்டுள்ளனன" என்கிறார்.

``தந்தத்தால் ஆன கலைப் பொருள்களுக்கு என்ன விலையை நிர்ணயம் செய்கின்றனர்?" என கேட்டோம் ``தொகையைக் குறிப்பிட்டால் தெரியாதவர்கள்கூட குற்றங்களைச் செய்வதற்கு தூண்டுதலாக அமைந்துவிடும். காட்டுவாழ் உயிரினங்களின் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாது. தொகையை குறிப்பிடக் கூடாது என விதிகள் உள்ளன. யானையின் தந்தத்தை வீட்டில் வைத்திருந்தால் நல்லது நடக்கும் என்பது சிலரின் தவறான நம்பிக்கையாக உள்ளது. சில மருத்துவர்கள்கூட ஆன்லைனில் இந்தப் பொருள்களை வாங்கியுள்ளனர். வனவிலங்குகளின் உறுப்புகளை வீட்டில் வைத்திருந்தால் குற்றம்தான் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது" என்கிறார்.

ஒரு குற்ற வழக்கில் எல்லைகளைக் கடந்து விசாரிப்பதே பெரும் பணியாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என எந்தவகையில் இந்த நெட்வொர்க்கை வளைக்கிறீர்கள்? என்றோம். `` நாங்கள் மத்திய அரசின் ஒருங்கிணைப்பு ஏஜென்சியாக செயல்படுகிறோம். உள்ளூர் வனத்துறை, காவல்துறை, புலனாய்வு அமைப்புகள், வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து வனவிலங்கு தொடர்பான குற்றங்களைக் கட்டுப்படுத்தி வருகிறோம்.

எங்கு சட்டவிரோத விற்பனை நடந்தாலும் எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைக்கும். அதனை காவல்துறை, வனத்துறை ஆகியோருடன் இணைந்து சென்று பிடிப்போம். தமிழ்நாட்டில் வேட்டையாடப்படும் யானைகளின் தந்தத்தை கேரளாவில் கார்விங் செய்கின்றனர். அதனை கொல்கத்தாவில் விற்கின்றனர். இதுபோல் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் விவகாரங்களை கையாள்கிறோம். இதனால் மொத்த நெட்வொர்க்கின் பின்னணியையும் அறிய முடிகிறது. குறிப்பாக, கேரளாவில் பிடிபட்ட தந்தத்தை விசாரிக்கும்போது அது தமிழ்நாட்டில் நடந்த வேட்டைகளோடு தொடர்புடையனவாக உள்ளன. அப்படியொரு வழக்கில் நான்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது சி.பி.ஐ விசாரணை நடந்து வருகிறது.

யானை தந்தத்தில் செய்யப்பட்ட கடவுள் சிலை

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau

படக்குறிப்பு, யானை தந்தத்தில் செய்யப்பட்ட கடவுள் சிலை

பல நேரங்களில் எங்களின் ஆய்வாளர்கள் மாறு வேடமிட்டு போய்த்தான் குற்றவாளிகளை பிடிக்கின்றனர். காரணம், உள்ளூர் ஆட்களாக இருந்தால் தந்தங்களை விற்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மலையாளத்தில் பேசினால் தந்தத்தைக் கொடுத்துவிடுவார்கள். கேரளாவில் இருந்து வருவது தெரிந்தால்தான் தந்தத்தையே கண்ணில் காட்டுவார்கள்.

ஆந்திரா சென்று வாங்கினால் இந்தியில் பேசித்தான் வாங்க வேண்டும். கோத்தகிரியில் சிக்கிய பொருள்களில் ஐவரி மாலை, ஒன்றரை அடி சிலை, செஸ் போர்டு காய்கள், வளையல் என பலவிதமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

அவை அலங்காரம் செய்யப்பட்ட தொனியைப் பார்த்தால் கேரளாவில் செய்யப்பட்டதுபோல இருந்தது. சிலர் யானையின் கால்களை டேபிளாக பயன்படுத்தும் கொடுமையும் நடக்கிறது" என்கிறார்.

மேலும், `` இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன்படி வனவிலங்குகளின் உறுப்புகளை வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்க முடியும். வனவிலங்கு குற்றம் மூலமாக சம்பாதித்த சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முடியும். அண்மையில் ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட கடல்வாழ் பொருட்களைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட வில்லாயுதம் என்பவரின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. தங்களின் வீடுகளில் வனவிலங்குகளின் உறுப்புகளை பதுக்கி வைப்பது குற்றம் என்பதை மக்கள் உணர வேண்டும்" என்கிறார்.

`` இந்திய அரசின் வனஉரியின குற்றத் தடுப்புப் பிரிவை போலவே தமிழ்நாடு அரசும் இதேபோன்ற ஓர் அமைப்பை உருவாக்க உள்ளது. 2 ஏக்கர் தோட்டத்தைப் பராமரிப்பது என்பது வேறு. 2 ஆயிரம் ஹெக்டேர் காட்டை பராமரிப்பு என்பது வேறு. அதனை முழுமையாகக் கண்காணிக்க முடியாது. இதற்கு புலனாய்வு அமைப்புகள் தேவை. உலகளவில் ஆசிய யானைகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் வேட்டையாடப்படுகிறது.

யானை தந்தத்தில்செய்யப்பட்ட யானை பொம்மை

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau

படக்குறிப்பு, யானை தந்தத்தில்செய்யப்பட்ட யானை பொம்மை

தந்த வேட்டை என்பது பகட்டுக்கானது. `என்னிடம் தந்தத்தில் சீப் உள்ளது' என்பதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன. அன்றைய காலகட்டத்தில் போர்க்களத்தில் இறந்த யானைகளின் தந்தங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். இப்போதெல்லாம் யானைகள் இறந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் தகவல் வெளியில் வருகிறது. இதனைக் கண்டறிய நுட்பமான புலனாய்வு குழுக்கள் தேவைப்படுகின்றன. மாநில அரசின் வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவால் தமிழ்நாட்டில் தந்த வேட்டை குறையும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார், ஓசை சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ்.

உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்கின்படி பார்த்தால், ஆப்ரிக்க யானைகள் 4,15,000 என்ற அளவிலும் ஆசிய யானைகள் 40,000 முதல் 50,000 வரையிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாற்பதாயிரம் என்பது அதிகப்படியாக பார்க்கப்பட்டாலும் ரயில் விபத்து, விஷம் வைப்பது, வேட்டை, மின்வேலி போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் 2,400-க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள 101 யானை வழித்தடங்களில் ஆண்டுதோறும் 300 கி.மீ வரையில் யானைகள் பயணம் செய்கின்றன. அந்த வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் அடைக்கப்படுவதால் மிகக் குறுகிய பரப்பளவுக்குள் இரையை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்டை உள்பட பல்வேறு காரணங்களால் ஆசிய யானைகளின் இறப்பு விகிதத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :