தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன் - சேலத்தில் கொடூரம்

- எழுதியவர், ஏ.எம். சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா (70). அவரது மனைவி காசியம்மாள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தம்பதி வசிஷ்ட நதி கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டிலிருந்து தம்பதியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் தீ எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததாலும், வீட்டின் மேற்புறத்தில் தகர ஷீட் அமைக்கப்பட்டு இருந்ததாலும் தண்ணீரை ஊற்றி அணைக்க அக்கம் பக்கத்தினரால் முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் வயதான தம்பதியை காப்பாற்ற முடியவில்லை. காட்டுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, காசியம்மாள் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதற்கிடையே, சம்பவ பகுதிக்கு வந்த காவல்துறையினர், இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயில் தம்பதி கருகிய பகுதியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இறந்த தம்பதியின் மூன்றாவது மகன் குமாரின் 16 வயது மகனிடம் காவல்துறையினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இறந்த தம்பதியின் மூத்த மகன் தேசிங்கு உள்ளூர் அரசியல் பிரமுகர். அவருடன் தன்னை ஒப்பிட்டு பேசியதால் ஆத்திரமடைந்த நிலையில், தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு தீ வைத்து விட்டு வீட்டின் வெளிப்புறத்தை பூட்டியதாக அந்த 16 வயது நபர் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக பிபிசி தமிழுக்காக ஆத்தூர் உதவி ஆய்வாளர் ராஜதுரையிடம் பேசினோம்.
"அந்த சிறார் கொத்தாம்பாடி அரசு பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பு படிக்கிறார். அவரது பெரியப்பா அரசியல் கட்சியில் உள்ளார். அவருக்கு சொந்த வீடு, கார் உள்ளது. அவரை ஒப்பிட்டு உங்க பெரியப்பாவை பார்... அவர் எப்படி இருக்கிறார்... நீ ஏன் இப்படி இருகிறாய் என பேசியுள்ளதாக தெரிகிறது. இப்படி சிறாரின் பெரியப்பாவுடன் அவரை அந்த தம்பதி ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதை பொறுக்க முடியாத பேரன், இந்த விபரீதமான செயலை செய்திருப்பதாக அறிகிறோம். அந்த சிறார் மீது தீயிட்டுக்கொளுத்துதல் ( 436 ) மற்றும் கொலை வழக்கு ( 302 ) பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் என்பதால் அவர் சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்," என்றார் உதவி ஆய்வாளர் ராஜதுரை.
பிற செய்திகள்:
- ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
- பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












