ஆயுஷ்மான் பாரத்: கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீட்டை பிரபலமாக்க 0.01% செலவிட்ட நரேந்திர மோதி அரசு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Pib india

    • எழுதியவர், அர்ஜுன் பர்மர்
    • பதவி, பிபிசி குஜராத்தி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இந்திய அரசின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரபலப்படுத்துவதை விட சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, போராட்டங்களை தூண்டிய வேளாண் திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றை பிரபலப்படுத்துவதற்காக இந்திய அரசு அதிகமான பணத்தை செலவிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு கோடிக் கணக்கான இந்தியர்களை கொரோனா வைரஸ் தொற்று பாதித்த பொழுது இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மருத்துவச் செலவை ஈடுகட்டுவதற்காக அரசின் மிகப்பெரிய நிதியுதவி திட்டமாக இருந்தது.

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் நரேந்திர மோதி அரசு எவற்றை ஊடக விளம்பரம் மூலம் பிரபலப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்தது என்பதை அறிய பிபிசி குஜராத்தி செய்தியாளர் அர்ஜுன் பர்மர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தினார்.

ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 2021 இடைப்பட்ட காலத்தில் விளம்பரங்களுக்காக இந்திய அரசு 212 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இதில் 0.01 சதவீதம் மட்டுமே அதாவது 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் அல்லாமல் பொது வெளியில் விளம்பரப்படுத்துவதற்காக செலவு செய்யப்பட்ட தொகை இந்தத் தரவுகளில் அடங்கவில்லை.

உலகில் சராசரியாக 7.23 சதவிகிதம் பேர் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின் தரவுகளின்படி உலக சராசரியை விடவும் குறைவாக 3.76 சதவிகிதம் பேர் மட்டுமே ஏதாவது ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்திய அரசு எதில் செலவு செய்தது?

விளம்பரம் செய்வதற்காக நரேந்திர மோதி மற்றும் அவரது தலைமையிலான அரசு அதிகமான செலவு செய்வதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.

2014-ம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜனவரி 2021 வரை இதுவரை ஒட்டுமொத்தமாக ரூபாய் 5,749 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது இந்திய அரசு.

இந்திய அரசின் விளம்பரங்கள் தொடர்பான விவகாரங்களை கையாளும் பீரோ ஆப் அவுட்ரீச் அண்ட் கம்யூனிகேஷன் மூலம் தற்போதைய அரசு விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்தது என்பதை அறிய பிபிசி சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த விண்ணப்பத்திற்கு அளிக்கப்பட்ட பதிலில் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள். டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் பொது வெளிகளில் மே 2004 முதல் ஜனவரி 2021 வரை இந்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகைகளின் விவரங்களை கொண்ட சுமார் 2 ஆயிரம் பக்க ஆவணங்கள் அளிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் விளம்பரங்களுக்கு இந்திய அரசு எவ்வளவு செலவு செய்தது?

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய அரசு சுகாதார நெருக்கடியில் இருந்த பொழுது கூட தாம் எடுத்த சர்ச்சைக்குரிய கொள்கை முடிவுகளுக்கு ஆதரவு திரட்டவும், அவை குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இந்திய அரசு மிகக் கணிசமாக செலவிட்டுள்ளது என்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நரேந்திர மோதி அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பலன்கள் யாருக்கு தெரியும்?

மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் கீழே உள்ள இந்தியர்களுக்காக 2018ஆம் ஆண்டு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மிகவும் பிரபலமான காப்பீட்டுத் திட்டமான 'ஒபாமா கேர்' என்பதை போல இந்த திட்டம் 'மோதி கேர்' என்று அரசின் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இந்திய பொது சுகாதார கட்டமைப்பு பெரும்பாலான இந்தியர்களை தனியார் மருத்துவமனைகளை நாடவேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. இதனால் மருத்துவச் செலவுகளை எதிர்கொண்டு அவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.

இத்தகைய சூழலில் அரசு அளிக்கும் மருத்துவ காப்பீடு பெரும் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் என்று இந்திய அரசு ஏப்ரல் 2020-இல் அறிவித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதுடன், ஒரு குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டின் கீழ் பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Please wait...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிபிசி பெற்ற தகவலின்படி, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் விளம்பரங்களுக்காக 2018-இன் பிற்பகுதியிலிருந்து 2020 தொடக்கம் வரை 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்திய அரசு செலவழித்துள்ளது தெரியவந்தது.

ஆனால் 2020ஆம் ஆண்டு, 'மும்கின் ஹை' என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியை மையப்படுத்திய விளம்பரம் போல, அரசாங்கம் குறித்து நேர்மறையான கருத்தை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டு, இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோலியை சர்சைக்குரிய சட்டங்களின் விளம்பரத்துக்கு அதிகமான தொகை செலவு செய்யப்பட்டு சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குறைவான தொகையை செலவு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

'மோதி கேர்' திட்டம் ஏழை மக்களுக்கு உதவியதா?

இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தாலும் ராஜஸ்தான் மாநிலம் சிகாரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத், மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.

ராஜேந்திர பிரசாத்தின் சகோதரர் சுபாஷ் சந்த் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் இருப்பதே எங்களுக்கு தெரியாது என்று பிபிசி ஹிந்தி செய்தியாளர் சரோஜ் சிங்கிடம் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காப்பீட்டு அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்த மருத்துவர்கள், என்னுடைய சகோதரருக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் மறுத்து விட்டனர். இந்த அட்டையால் எனக்கு எந்த பலனும் இல்லை என்றே கருதுகிறேன் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தகுதியுடைய மருத்துவமனைகளின் பட்டியல் கொண்டுள்ள இணைப்பை இந்த காப்பீடு அட்டை வைத்துள்ள அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது என்று ராஜஸ்தான் மாநில சுகாதார திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி அருணா ரஜோரியா கூறுகிறார்.

கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீட்டு விளம்பரத்துக்கு வெறும் 0.01% செலவிட்ட இந்திய அரசு

தமக்கு அப்படி எந்த குறுஞ்செய்தியும் வரவே இல்லை என்கிறார் கோவிட் தொற்றுக்கு உள்ளான சுபாஷ் சந்த்.

இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்றார்கள் என்பதை அறிவதற்கு பிபிசி இன்னொரு தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்தையும் அரசுக்கு அனுப்பியது.

ஆகஸ்ட் 18. 2021 வரை இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் ஏழு லட்சத்து எட்டாயிரம் பேர் பலனடைந்துள்ளனர் என்று தெரியவந்தது.

செப்டம்பர் 2, 2021 வரை இந்தியா முழுவதும் கோவிட் தொற்றால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்; 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 13 கோடி குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சமீபத்திய தகவலின்படி நாடு முழுவதும் 10.74 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடிக்கும் அதிகமானவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.

இந்த 50 கோடி பேர் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 40 சதவீத மக்கள் தொகையை சேர்ந்தவர்கள்.

இந்த காப்பீட்டு திட்டம் தொடர்பான விளம்பரத்துக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து அறிய இந்திய அரசின் தேசிய சுகாதார ஆணையத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

கொரோனா காலத்தில் முன்னுரிமை எதற்கு?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராம்கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பெறும் பலன்கள் தொடர்பாக பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லாதது குறித்து கவலை வெளியிட்டு இருந்தது.

ஆயுஷ்மான் பாரத் - கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீட்டை பிரபலமாக்க 0.01% செலவிட்ட நரேந்திர மோதி அரசு

பட மூலாதாரம், Getty Images

2020 நவம்பரில் இந்த நிலை குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக செய்து கொள்ளலாம் என்பதே பொதுமக்களுக்கு தெரியாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து பெருந்தொற்று காலத்தில் அதிகமாக விளம்பரப்படுத்த படவேண்டும் என்றும் இந்த நிலைக்குழு அரசை வலியுறுத்தி இருந்தது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 40 சதவீத மக்கள் தொகைக்கு பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று பொது கொள்கை மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹரியா தெரிவிக்கிறார்.

போதுமான அளவு விளம்பரப்படுத்தபடாததால் இத்திட்டம் தேவையாக இருந்த பெரும்பாலான மக்களுக்கு உதவவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

2021-22ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக 6,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

2019 -20 மற்றும் 2020 -21 ஆகிய ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையிலும் இதே அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒட்டு மொத்த நிதியில் 8.98 சதவிகிதம் ஆகும்.

இந்த காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் இதற்காக 2,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :