அண்ணாமலை கையில் 'விநாயகர்' அஸ்திரம்: கே.டி. ராகவன் விவகாரம் திசை திரும்ப இது உதவுமா?

அண்ணாமலை பாஜக

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தென்மாவட்ட சுற்றுப் பயணம், கே.டி.ராகவன் விவகாரம், விநாயகர் சதுர்த்தி சர்ச்சை என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ` பாலியல் காணொளியால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்யும் வகையிலேயே அவரது சுற்றுப்பயணம் அமைந்துள்ளது' என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். என்ன நடக்கிறது பா.ஜ.க.வில்?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநில தலைவரின் பணிகள், தனக்கான குழு என சிலவற்றை அவர் தொடங்குவதற்கு முன்னதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்புடைய பாலியல் காணொளி ஒன்று வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, காணொளியை வெளியிட்ட நபருடன் அண்ணாமலை பேசும் உரையாடல்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக எல்.முருகன் பதவி வகித்த காலகட்டத்தில் கந்தசஷ்டி விவகாரம், வேல் யாத்திரை என ஒரு ரவுண்டு வலம் வந்தார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் அமைச்சராகி விட்டதால், அண்ணாமலையின் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

அண்ணாமலையின் `விநாயகர்' அஸ்திரம்

இந்நிலையில், கோவிட் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளதால் அதனை முக்கிய பிரச்னையாக பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக, தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரத்தில் 1 ஆம் தேதி நடந்த பா.ஜ.க ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ` கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத தி.மு.க, மற்ற கட்சிகளைக் குறைகூறிவிட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்குத் தடைவிதிக்கும் அரசு, டாஸ்மாக் கடையை ஏன் திறக்க வேண்டும்? விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்த அரசு தடுத்தாலும் நடந்தே தீரும்,' என்றார்.

``தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் கட்சியின் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகளை அண்ணாமலை எடுக்க இருக்கிறார்" என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``தமிழக பா.ஜ.கவுக்கு புதிதாக யார் தலைவர் பதவிக்கு வந்தாலும் தனக்கான குழுவை உருவாக்கிக் கொள்வது வழக்கம். அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகு தனக்கென சில இலக்குகளை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறார். அதன்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 10 இடங்களில் வெற்றி பெறுவது, அடுத்ததாக 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது. இந்த இரண்டையும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறார்.

சுவரொட்டிகளில் 3 பேர்

அண்ணாமலை பாஜக

பட மூலாதாரம், Annamalai

இது தவிர, கட்சியின் செயல்பாடுகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இதற்கு முந்தைய காலத்தில் கட்சி சார்பாக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் கட்சியின் மூத்த முன்னோடிகளின் படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோரை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதாவது, மத்திய இணை அமைச்சர், மாநிலத் தலைவர், சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற வரிசைப்படி படங்களை இடம்பெற வைக்கின்றனர்," என்கிறார்.

மேலும், ``கட்சியின் நிர்வாக அமைப்பில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வரும் முடிவில் அண்ணாமலை இருக்கிறார். அதனை மூன்று வகையாக பிரித்து செயல்படுத்த உள்ளார். கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்படும் சீனியர்கள் பதவிகளில் தொடர்வதில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லை. எந்தப் பணிகளையும் செய்யாமல் வெறும் சீனியர் என்ற தகுதிக்காகவே பதவியில் இருப்பவர்கள் உரிய மரியாதையோடு வேறு இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். மூன்றாவதாக, வேறு கட்சிகளில் இருந்து பா.ஜ.கவுக்கு வந்தவர்களுக்குப் பதவி கொடுப்பது என முடிவெடுத்துள்ளார்," என்கிறார்.

தொடர்ந்து, ``எல்.முருகனின் செயல்பாட்டுக்கும் அண்ணாமலையின் அணுகுமுறைக்கும் இடையே வித்தியாசம் உள்ளதே?" என்றோம். `` முருகன் பதவிக்கு வந்த காலகட்டம் என்பது வேறு. அப்போது `கறுப்பர் கூட்டம்' சர்ச்சை எனக் கையில் எடுப்பதற்கு சில விவகாரங்கள் இருந்தன. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையோ, அடுத்து 3 ஆண்டுகளுக்கு நிரந்தர தலைவராக இருப்பார். அவரும், கட்சியின் உள்கட்டமைப்பை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சி நிர்வாகம் பிளஸ் அரசியல் என அண்ணாமலை செயல்படுகிறார். முருகனிடம் அரசியல் பார்வைகள் சற்று அதிகமாக இருக்கும்" என்கிறார்.

கே.டி.ராகவன் விவகாரம் என்னாச்சு?

பாஜக கே.டி. ராகவன்

பட மூலாதாரம், K.T. RAGHAVAN

படக்குறிப்பு, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் கே.டி. ராகவன்

இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய தென்மாவட்ட பா.ஜ.க நிர்வாகி ஒருவர், வரும் நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள 16,000 கிராமங்களில் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

"இந்தப் பயணத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசாமல், பா.ஜ.க அனுதாபிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அவர்கள் மூலமாக அறிமுகமாகும் மாணவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். இதனால் கட்சிப் பணிக்கு நிறைய பேர் கிடைக்கின்றனர். கல்லூரி மாணவர்கள், சாதி சங்க நிர்வாகிகள் சந்திப்பு, ஊர் பெரியவர்கள் சந்திப்பு என அண்ணாமலையின் பயணம் நகர்கிறது. கிராமங்களில் கொடியேற்றுவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது. தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்வதால், அவர்களில் சிலரை நீக்கும் பணிகளும் நடக்கவுள்ளன," என்கிறார்.

மேலும், ``கே.டி.ராகவன் விவகாரத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் நோக்கிலேயே இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராகவன் விவகாரத்தை மாநில செயலாளர் மலர்கொடி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கமலாலயத்துக்கு வரவைக்காமல் தனிப்பட்ட இடங்களில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு வராமல் நடுநிலையாக அண்ணாமலை முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது," என்கிறார்.

விநாயகர் சதுர்த்தி:கர்நாடகத்திலும் தடை உள்ளதே...

கர்நாடகா பாஜக

பட மூலாதாரம், BASAVARAJ BOMMAI

படக்குறிப்பு, பசவராஜ் பொம்மை, கர்நாடக முதல்வர்

``வேல் யாத்திரையைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதே?" என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது இந்து இயக்கங்களின் அடிநாதமாக உள்ளது. அதில் கையை வைத்தால் எங்களின் இதயத்தில் கையை வைப்பது போலாகும். இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு தவறான முடிவெடுத்ததால், அண்ணாமலை கோபத்தை வெளிப்படுத்தினார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை போடுவது என்பது சரியான ஒன்றல்ல. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு தெய்வீக எண்ணங்களை உருவாக்குவதற்கு இந்த விழா பயன்படுகிறது" என்கிறார்.

``கர்நாடகாவிலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்குத் தடை உள்ளது. அங்கு பா.ஜ.க அரசுதானே உள்ளது?" என்றோம்.

``கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தமிழ்நாட்டில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்றெல்லாம் அலசிப் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் தடுப்பூசி உள்பட கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இங்குள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் கர்நாடகாவுடன் ஒப்பிடுவதே தவறானது" என்கிறார்.

பா.ஜ.கவுக்கு பாதிப்பில்லையா?

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா.

பட மூலாதாரம், J.P. NADDA

படக்குறிப்பு, கோப்புப் படம்.

``புதிய நிர்வாகிகள் மாற்றத்தில் சீனியர்கள் சிலர் நீக்கப்படலாம் என்கிறார்களே?" என்றோம்.

``2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை இலக்காக வைத்து மாநிலத் தலைவர் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்காக புதிய குழுவை அவர் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். இது யாருக்கும் விரோதமானதாகவும் ஒருதலைபட்சமாகவும் இருக்காது" என்கிறார்.

``கே.டி.ராகவன் விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கத்தான் தென்மாவட்ட சுற்றுப்பயணம் என்கிறார்களே?" என்றோம். `` பா.ஜ.க என்பது மிகப் பெரிய இயக்கம். தனி மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படக் கூடிய இயக்கம் அல்ல. கே.டி.ராகவன் விவகாரம் என்பது பா.ஜ.கவுக்கு எதிராக ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒன்று. பா.ஜ.க மீது வீசப்பட்ட இந்த அம்பு, இலக்கை அடையாமல் பாதியிலேயே விழுந்துவிட்டது. தனிப்பட்ட நபர்களின் செயல்களால் பா.ஜ.க பாதிக்கப்படாது என்பதற்கு இது ஓர் உதாரணம்" என்கிறார்.

மேலும், ``அண்ணாமலை பேசியதாகச் சொல்லப்பட்ட ஆடியோவை வெளியிட்ட நபரின் விமர்சனம், அந்த ஆடியோவை கேட்டவுடன் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அதனை வெளியிட்ட நபரையே அந்த விவகாரம் தாக்கியது. காரணம், அந்தப் பேச்சில் நேர்மையில்லாமல் போனதுதான். அண்ணாமலைக்கு இதனால் பலமும் பெருமையும்தான் சேர்ந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தில் தான் கையில் எடுத்த இலக்கை உறுதியாக அடையும் நோக்கில் அண்ணாமலையின் பயணம் இருக்கும்," என்கிறார்.

திசை திருப்பும் உத்தி என்கிறது திமுக

இதையடுத்து, ``விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தி.மு.க தவறாக கையை வைத்துவிட்டது என பா.ஜ.க விமர்சிக்கிறதே?" என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` மத உணர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலையில்லை. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 ரூபாயை தாண்டிவிட்டது. அவர்களின் கட்சி நிர்வாகி ஒருவர் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு விநாயகர் சதுர்த்தியை கையில் எடுத்துள்ளனர். சொல்லப்போனால் கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவில்லை. அதையெல்லாம் இவர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள்" என்கிறார்.

மேலும், `` கேரளத்தில் ஓணம் பண்டிகையால் தொற்றுப் பரவல் அதிகரித்தது. அதைப் பார்த்து இங்கும் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் கோவில்கள் எல்லாம் வாரத்தில் 3 நாள்கள் திறக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல் வேளாங்கண்ணி திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவாகத்தான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. பாலியல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, பொதுச்சொத்துகளை விற்பது என பா.ஜ.கவுக்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்புவதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவைப் பயன்படுத்த நினைக்கின்றனர். இதனால் அவர்களுக்குப் பலன் கிடைக்கப் போவதில்லை" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :