கோவை சுற்றுச்சூழல்: 'எஞ்சிய இயற்கை வளங்களையாவது விட்டு வையுங்கள்' - செங்கல் சூளைகளால் பாதிக்கப்பட்ட தடாகம் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மு ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகே அமைந்துள்ளது தடாகம் பள்ளத்தாக்கு.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இயங்கி வந்த செங்கல்சூளைகளால் விவசாயம் பாதிப்படைந்ததோடு சுற்றுச்சூழல் மாசடைந்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பேராபத்துகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் தடாகம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.
சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள், கனிமவளக்கொள்ளை, காற்றுமாசு, கனரக வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகள், மனித-வனவிலங்கு மோதல்கள் என பல்வேறு பிரச்சினைகள் இப்பகுதியில் உள்ளதால் இங்கிருந்த பலர் சொந்தநிலங்களை விற்றுவிட்டு மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் செங்கல் சூளைகளுக்கு எதிராக சட்டப்போராட்டங்களை மேற்கொண்டு வரும் தடாகம் பாதுகாப்புக் குழுவினர்.
விளை நிலமாக இருந்த தடாகம், இப்போது பாலைவனமாக மாறி இருப்பதாக கூறுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கராஜ்.
'ஒரு காலத்தில் விவசாயம் சார்ந்த நிலமாக தடாகம் இருந்தது. கரும்பு, சோளம், வாழை, தென்னை, தானிய வகை என பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு பொன் விளைந்த பூமியாக இப்பகுதி இருந்தது.
விவசாயம் பாதிப்பு

இங்கு வாழ்ந்த மக்கள் தூய்மையான காற்றை சுவாசித்து, சுத்தமான நீரைப்பருகி, விவசாயம் செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று நிலை தலைகீழாக மாறியுள்ளது.
செங்கல் சூளைகள் தடாகத்தில் முளைத்த பின்பு காற்று மாசு ஏற்பட்டது. இதனால், பயிர் வளர்ச்சி குன்றியது. செங்கல் உற்பத்திக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, விவசாயத்திற்கு நீர் இல்லாமல் போனது.
விவசாயத்தை விட செங்கல் சூளைகளில் அதிக வருமானம் கிடைத்ததால் பலர் வேளாண் நிலங்களை அழித்து செங்கல் சூளைகளை உருவாக்கினர். மேலும் பலர் விளை நிலங்களை செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு விற்றுவிட்டு மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
2010க்கு பிறகு செங்கல் சூளைகளின் எண்ணிக்கை இங்கு அதிகமானது. ஒரு கட்டத்தில் விவசாயம் முழுமையாக முடங்கி, செங்கல் உற்பத்தி சூளைகள் மட்டுமே தடாகத்தின் அடையாளமாக இன்று மாறிவிட்டது.
இங்குள்ள மக்களும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் செங்கல் சூளைகளில் அடிமைகளாக வேலை செய்து வருவதோடு. இந்தப் பகுதி தற்போது பாலைவனமாக மாறி வருகிறது' என்கிறார் மாணிக்கராஜ்.
தற்போது 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தடாகம் பகுதியில் உள்ளன.
'செங்கல் சூளை நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டும், எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்க வில்லை.
மாறாக செங்கல்சூளை உரிமையாளர்களின் அராஜக தாக்குதல்களுக்கு நான் பலமுறை ஆளாகி இருக்கிறேன்.
வளங்களை அழித்து, சுயநலத்திற்காக மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கி வரும் செங்கல் சூளைகளை இப்பகுதியிலிருந்து அகற்றிட வேண்டும். இங்கிருந்த இயற்கை வளங்களை மீண்டும் மீட்டெடுத்து விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களையாவது அடுத்த தலைமுறையினருக்கு விட்டுவைக்க வேண்டும்' என்கிறார் இவர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு

செங்கல் சூளைகளிலிருந்து வெளியேற்றப்படும் கரும்புகையும், மண் தூசியும் சுற்றுச்சூழலை பெருமளவு பாதித்து வருவதாக தெரிவிக்கிறார் சமூக ஆர்வலர் கணேஷ்.
'கொரோனா காலகட்டத்தில் தான் மக்கள் அனைவரும் இப்போது முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், தடாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல வருடங்களாகவே முகக்கவசமும், தலைக்கவசமும் கட்டாயம் அணிந்துதான் சாலைகளில் பயணித்து வருகின்றனர்.
இதற்கு காரணம் செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் ஏற்படுத்தும் தூசி மற்றும் புகை. இதனால் இங்குள்ள தார் சாலைகள் அனைத்தும் செம்மண் சாலைகளாக காட்சியளிக்கும். சாலையோரங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கு எந்த நிறத்தில் வண்ணம் பூசினாலும் அவை செம்மண் நிறத்தில் மாறிவிடும்.
மிகச்சிறிய அளவிலான தூசி துகள்கள் இப்பகுதி முழுவதும் எப்போதும் நிறைந்திருக்கும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு தடாகம் பகுதியிலிருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். அருகில் உள்ள கணுவாய் வரை பழைய உடைகளை அணிந்து சென்று, அங்கிருந்து வெள்ளை வேட்டி சட்டைகளை மாற்றி செல்வோம். இந்த நிலை தான் கடந்த 20 வருடங்களாக தடாகத்தில் உள்ளது.
செங்கல் உற்பத்திக்காக எரியூட்டும் போது ரப்பர், முந்திரி பொட்டு போன்ற பல்வேறு நச்சுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் கரும்புகை காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது.
செங்கல் சூளைகளில் உள்ள புகைப்போக்கிகளில் இருந்து வெளியேற்றப்படும் சூடான புகை, காற்றில் கலந்து காற்றின் ஈரப்பதத்தை குறைக்கிறது. இதனால் இப்பகுதிக்கான சராசரி மழைப்பொழிவு உரிய காலங்களில் கிடைப்பதில்லை.
மேலும், செங்கல் உற்பத்திக்காக பல நூறு அடிகளுக்கு மேல் போர் போடப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நீராதாரங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிம வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கடந்தகாலங்களில் மெத்தனப்போக்கையே கடைபிடித்தனர்' என்கிறார் இவர்.
வனவிலங்குகள் மரணம்

பட மூலாதாரம், Getty Images
கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதல் அதிகம் ஏற்படும் பகுதியாக தடாகம் பள்ளத்தாக்கு உள்ளது. யானை உயிரிழப்புகளும் இங்கு அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதாக தெரிவிக்கிறார் சமூக ஆர்வலர் கணேஷ்.
'அரியவகை உயிரினங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் யானைகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தடாகம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் செய்துவந்த வரை மலைகளிலிருந்து பல்வேறு வனவிலங்குகள் மலையடிவாரம் வரை வந்து செல்லும். யானைகளின் வலசைப்பாதைகளும் இங்கு உள்ளன.
மலை அடிவாரத்தில் இயங்கி வரும் செங்கல் சூளைகளால் 50 அடி முதல் 200 அடி வரை குழிகள் தோண்டப்பட்டு, கனிம வளங்கள் சட்டவிரோதமாக திருடப்படுகிறது. மண் அள்ளியபிறகு இந்தக் குழிகள் மூடப்படுவதில்லை.
இதனால் உணவு மற்றும் நீருக்காக இப்பகுதியை கடக்கும் யானைகள் ஆழமான குழிகளில் விழுந்து உயிரிழக்கின்றன. யானைகள் குழியில் விழுந்து மரணிப்பது இப்பகுதியில் தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இதை தடுக்கும் பொருட்டு செங்கல் உற்பத்தி நிறுவனங்கள் வளாகத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்துள்ளன. அதில் அடிபட்டும் யானை உட்பட பல விலங்குகள் உயிரிழக்கின்றன.
இந்த பிரச்சனைகளால் உணவு தேடி வரும் யானைகள் வழி தவறி, ஊருக்குள் வந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் இப்பகுதியில் மனித விலங்கு மோதல் அதிக எண்ணிக்கையில் ஏற்படுகிறது' என்கிறார் இவர்.
தடாகம் பகுதிக்குட்பட்ட வீரபாண்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம் ஆகிய 4 வருவாய் கிராமங்களை கடந்த 2003ஆம் ஆண்டு மலையிட பாதுகாப்பு ஆணையம் (Hill Area Conservation Authority - HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. இப்பகுதியில் கட்டடம் அமைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை அமல்படுத்தியது. ஆனால், அவற்றை மீறியே நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளுக்கான ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறார் கணேசன்.
மனிதர்களுக்கு பாதிப்பு

தடாகம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தோல், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
'24 மணி நேரமும் செங்கல் சூளைகள் செயல்பட்டு புகைபோக்கிகளிலிருந்து நச்சுக்காற்றும், கரும்புகையும் வெளியேற்றப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.
வீடு முழுவதும் நுண் தூசிகள் நிறைந்திருப்பதால் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு என அனைத்திலும் இந்த தூசிகள் படர்ந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
இங்கு உள்ளவர்கள் பலர் நுரையீரல் சார்ந்த நோய் பிரச்சனையால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளனர்' என்கிறார் தடாகம் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி பேபி.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் ரமேஷ், செங்கல் சூளைகளால் தடாகம் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறுகிறார்.
'1995 முதல் தடாகம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வருகிறேன். செங்கல் சூளைகளின் வருகைக்குப் பின்னர் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
தோல்களுக்கும் சதைக்கும் இடையில் உடலில் கட்டி ஏற்படுகிறது. இவை மரபனு ரீதியிலான நோயாக இருக்குமா? என பரிசோதித்ததில் அவ்வாறு இல்லை.
2007க்கு பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு இப்பகுதி மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. கோவை நகரப்பகுதியில் வசிக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு இங்கு அதிகமாக உள்ளது.
மேலும், உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சமீபகாலங்களில் இப்பகுதியினர் பலர் உயிரிழந்துள்ளனர். சிறுநீரக செயலிழப்பு பாதிப்பின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகி வருகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் அந்த பகுதிகளில் இயற்கை வளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் நோய்களின் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் தடாகம் பகுதியில் வசிக்கும் மக்களை முறையாக மருத்துவ பரிசோதனை செய்து ஆராய்ச்சி செய்தால், செங்கல் சூளைகளால் இங்கு ஏற்பட்டுள்ள பேராபத்துக்களை உணரமுடியும்' என தெரிவிக்கிறார் மருத்துவர் ரமேஷ்.
சட்டப்போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய பகுதிகளில் உரிமமின்றி செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் செயல்பட கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளின் இயக்கத்தை தடை செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர்.
அதில் செங்கல் சூளைகள் உரிமம் இன்றி செயல்படுவது தெரியவந்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத 186 செங்கல் சூளைகள் செயல்படுவது சட்ட விரோதமாகும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அரசின் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுத்து பயன்படுத்தினால் வருவாய்த்துறை, காவல்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோர் நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை கைப்பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு எண்.379ன் படி வாகனம், வாகன ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், உரிமம் பெறாத செங்கல் சூளையில் இருந்து சுட்ட செங்கற்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வது குற்றமாகும் எனவும் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
தடாகம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கக் கோரி தொடர் சட்டப்போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார் ராஜேந்திரன்.
'நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக மண் எடுப்பதும், செங்கல் சூளைகள் இயங்குவதும் தொடர்ந்து வருகிறது.
இம்மாதம் 18ஆம் தேதி, தடையை மீறி செங்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் செயல்பட்டு உரிமையாளர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
மேலும், நில ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வந்த செங்கல் சூளைகள் அகற்றப்பட்டு, உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடாகம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் குறித்து தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து, விசாரித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய பல்வேறு அரசு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக எந்த சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் ஆட்சி அதிகாரத்தின் உதவியோடும், அரசியல் பலத்தோடும் அரசின் அனைத்து துறைகளிலும் முறைகேடு செய்து இதுநாள் வரை இயற்கை வளங்களை சீரழித்துள்ளனர். நாங்கள் இப்போது நீதிமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளோம். தடாகம் பகுதியிலிருந்து செங்கல் சூளைகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை' என கேட்டுக்கொண்டார் ராஜேந்திரன்.
இந்த விவகாரத்தில் செங்கல் சூளை நிறுவன உரிமையாளர்களின் கருத்தைப்பெற பிபிசி தொடர்புகொண்டபோது உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை.
நீதிமன்ற உத்தரவையடுத்து தடாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக செங்கல் சூளைகளின் இயக்கம் ஓரளவிற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், தடாகம் பகுதியில் நிலவிய காற்று மாசின் அளவு குறைந்து வருவதாகவும், இந்த நிலை எப்போதும் தொடர வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவிக்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.
பிற செய்திகள்:
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
- பாலியல் காணொளி சர்ச்சை; கட்சிப் பதவியில் இருந்து விலகினார் கே.டி. ராகவன்
- அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்
- 'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












