மீரா மிதுன் கைது: போலீசார் பட்டபாடு என்ன?

மீரான மிதுன்

பட மூலாதாரம், MEERA MITHUN

படக்குறிப்பு, நடிகை மீரா மிதுன்

பட்டியல் சாதியினரை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், காவல்துறை விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

` தனிப்பட்ட முறையில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. ஆனால், சாதிக் கட்டமைப்பில் பொதுவான மனநிலையில் இருந்துதான் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரை சாதி ரீதியாக நடிகை மீரா மிதுன் விமர்சித்துப் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ ஒன்றில் தனது ஆண் நண்பருடன் இணைந்து பேசிய மீரா மிதுன், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்களை சினிமா துறையைவிட்டே நீக்க வேண்டும் எனக் கூறியதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கலகலத்தை உண்டாக்குதல், வன்கொமை தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கும் வீடியோ மூலம் பதில் அளித்த மீரா மிதுன், ` என்னைக் கைது செய்வது என்பது நடக்காது. அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்களாகக் கூறவில்லை. எனக்குத் தொல்லை கொடுத்தவர்களை மட்டுமே கூறினேன்' என்றார். இதனையடுத்து சென்னையில் இருந்து மீரா மிதுன் தலைமறைவானார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்றபோது, மீரா மிதுன் கடுமையான எதிர்ப்பைக் காட்டியுள்ளார். ` ஒரு பெண்ணை இப்படித்தான் நடத்துவீர்களா.. என்னைத் தொட முயற்சித்தால் கத்தியால் குத்திக் கொள்வேன். முதலமைச்சரே.. பிரதமரே தமிழ்நாடு போலீஸார் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க' என்றெல்லாம் கோபத்துடன் பேசி அதனையும் ஒரு வீடியோவாக வெளியிட்டார்.

இதன்பின்னர் அவரை கேரளாவில் இருந்து சென்னைக்குக் கொண்டு வருவதற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களை சென்னை வரும் வரையில் ஒருமையிலேயே மீரா மிதுன் வசைபாடியதாகவும் குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சி.சி.பி அலுவலகத்துக்கு மீரா மிதுன் கொண்டு வரப்பட்டார். அப்போது அவரது சத்தமே பிரதானமாக இருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

"என்னுடைய வழக்குரைஞர் வரும் வரையில் நான் எதையும் பேசப் போவதில்லை" என விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளார். கூடவே, தன்னுடைய கையை உடைப்பதற்கு போலீஸார் முயற்சி செய்வதாகவும் சத்தம் போட்டுள்ளார். அவரை எதிர்கொள்ள முடியாமல் காவலர்கள் திணறியுள்ளனர். தொடர்ந்து அவரது ஆண் நண்பர் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.

மீரா மிதுன் மீது புகார் கொடுத்த வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தனிப்பட்ட முறையில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. ஆனால், இந்த சாதிய கட்டமைப்பில் பொதுவான மனநிலையில் இருந்துதான் சிலர் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர், `சேரி மனநிலை' என்று கூறியதை கமல்ஹாசனும் கண்டிக்கவில்லை. அதுபோலத்தான் இவர்களும் பேசுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு யாரும் முயற்சி செய்வதில்லை. சமூகத்தில் அவர்களும் ஓர் அங்கம் என்பதையும் சிலர் புரிந்து கொள்வதில்லை" என்கிறார்.

மீரா மிதுன்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, மீரா மிதுன்

மேலும், `` திரைத்துறையில் உள்ளவர்கள், இதுபோன்று பேசுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடிகர் சங்கமும் நடவடிக்கை எடுப்பதில்லை. சாதாரணமாக ஒரு குற்றச்சாட்டு வந்தால்கூட சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி போன்றவை கண்டிக்கவில்லை. அவர்களும் இதை வரவேற்கிறார்களா எனத் தெரியவில்லை.

திரைத்துறை என்பது வலிமையான ஊடகம். இந்த ஊடகத்தில் சாதியத்தை வளர்ப்பது என்பது தவறானது என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்த் திரையுலகம் நவீனத்தோடு வளர வேண்டும் என்றால், இதுபோன்ற சம்பவங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதாரணமாகவே, திரைத்துறைக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகப் பேசப்படுவதால்தான் இதுபோன்ற பேச்சுகள் வெளிப்படுகின்றன. இனி இதுபோல் பேசுகிறவர்களை ரெட் கார்டு போட்டு வெளியேற்ற வேண்டும்" என்கிறார் வன்னியரசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :