மு.க.ஸ்டாலின்: விடுதலைப் போராட்ட வீரர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு

சுதந்திர தினவிழாவுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முப்படை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, சுதந்திர தினவிழாவுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முப்படை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கொடியேற்றினார்.

`வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும்' என சுதந்திர தின உரையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். அதன்பிறகு அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றினர்.

தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 9 மணியளவில் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதினை முனைவர் மு.லட்சுமணனுக்கு வழங்கினார். வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.

கருணாநிதிக்கு நன்றி

சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `` தேசியக் கொடியை கோட்டையில் ஏற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உரிமை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு நன்றி. ஐம்பது ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உழைத்த நான், தமிழ்நாடு மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. நான் பொறுப்பேற்று இன்றோடு 101 நாள்கள் ஆகின்றன. மாநிலத்தின் பெரும் நிதி சுமைக்கு இடையில் பொறுப்பை ஏற்றுள்ளேன்" என்றவர், தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

`` தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக்காற்றைக் கொண்டுதான் நினைவுத்தூண் கட்டப்பட்டது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு வருகிறது. அதனை அரசு விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நேரத்தில் அன்றைய தி.மு.க அரசு 3 தவணைகளாக 50 கோடியை வழங்கியது. இனி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் 17,000 ரூபாயில் இருந்து 18,000 ஆக உயர்த்தப்படும். அவர்களின் குடும்ப ஓய்வூதியமும் 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" என்றார்.

மேலும், `` கொரோனா தொற்று எதிர்ப்புப் போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மனதாரப் பாராட்டுகிறேன். கொரோனா தொற்றால் ஏராளமான படிப்பினைகளை நாம் பெற்றுள்ளோம். இதனால் வாழ்வாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டு தவணைகளாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி மியூசியம் 6 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. ஆவின் பால் விலை மற்றும் பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரையில் குறைத்துள்ளோம்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் காவல் துறை அணிவகுப்பைப் பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, சுதந்திர தினத்தை ஒட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் நடந்த காவல் துறை அணிவகுப்பைப் பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தடுப்பூசியை வீணடிக்கும் நிலையை தடுத்து நிறுத்தியுள்ளோம். திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருதினை சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு வழங்கியுள்ளோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது" என அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :