புலமைப்பித்தன் அதிரடி: இது பெரியார் நாடு, இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையே பாஜக கால் பதிக்க காரணம்

புலவர் புலமைப் பித்தன்

பட மூலாதாரம், Pulavar Pulamaipithan Facebook

படக்குறிப்பு, புலவர் புலமைப் பித்தன்
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வந்த வி.கே.சசிகலா, ஜெயலலிதாவுடனான தனது நட்பு குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி விவாதப் பொருளாக மாறியது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி இணைப்பில் தான் முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் பேசியுள்ளார்.

எனவே, அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?' என்பதை அறிவதற்காக அ.தி.மு.கவை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்தவருமான புலவர் புலமைப்பித்தனை பிபிசி தமிழுக்காக சந்தித்தோம்.

கே: ``சசிகலாவோடு தொலைபேசியில் பேசியவர்களில் நீங்களும் ஒருவர். `அவரோடு பேசினால் கட்சியைவிட்டே நீக்குவோம் என்று சீண்டியதால் பேசினேன்' என்கிறீர்கள். ஒரு கட்சித் தலைமையின் உத்தரவை மீறி பேசியது சரியா?

``எனக்கு எப்போதுமே சரியில்லாததைப் பேசும் வழக்கம் இல்லை. சரியானதைப் பேசினால் அதற்காக பெருமைப்பட்டுக் கொள்வேன். நான் பேசியது நூற்றுக்கு நூறு சரி."

கே: ``அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. இந்தநிலையில், அ.தி.மு.கவுக்கு சசிகலாதான் பொதுச் செயலாளர் என நீங்கள் கூறுவதை எப்படிப் பார்ப்பது?"

``இரட்டைத் தலைமை என்ற ஒன்று கிடையாது. இவர்கள் தங்களின் வசதிக்காக அவ்வாறு ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு எப்படி இரட்டைத் தலைமை இருக்க முடியும்?

இவர்கள் கட்சியின் வரலாற்றை அறியாதவர்கள். தி.மு.க.வை அண்ணா தொடங்கியபோது, `நாம் பெரியாரை விட்டுப் பிரிந்து வந்திருந்தாலும் நமக்குத் தலைவர் அவர்தான். அதனால் தலைவருக்கு உரிய நாற்காலி காலியாகவே இருக்கும். பொதுச் செயலாளர் இருப்பார், நாம் கூட்டம் நடத்துவதற்கு வசதியாக அவைத் தலைவர் இருப்பார் என்றார். அதுதான் அண்ணா வழி.

வி கே சசிகலா

பட மூலாதாரம், Getty Images

அவ்வாறே அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர், அவைத் தலைவர் ஆகியோர் மட்டும்தான் உள்ளனர். தலைமையே இல்லாதபோது இரட்டைத் தலைமை எப்படி வரும்? அதனை நான் ஒப்புக் கொள்ளாததற்குக் காரணம், நான் திராவிடர் கழகத்திலும் தி.மு.கவிலும் இருந்தவன். அதனால் எனக்கு வரலாறும் தெரியும். மரபும் தெரியும். இரட்டைத் தலைமை என்ற ஒன்று இல்லை."

கே: 'ஜானகியை போல சசிகலா பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்' என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

"இந்தக் கட்சியைத் தொடங்கியபோது ஜெயக்குமார் எங்கே இருந்தார் என்பது அவருக்குத் தெரியும். அதனால் இந்த வரலாறுகள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கே: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவுக்காக வி.என்.ஜானகி விட்டுக் கொடுத்தார். அதைப்போல இவர்களிடம் இந்தக் கட்சியை விட்டுக் கொடுக்க முடியுமா?

பதில்: அதனை ஓர் எடுத்துக்காட்டாக கூற முடியாது. அவர்களுக்குள் இருந்த புரிந்துணர்வு காரணமாக இணைப்பு முயற்சியில் வெற்றி பெற்றார்கள். அந்தப் புரிந்துணர்வு இப்போது இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன்.

கே: ``எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, `அ.தி.மு.கவில் பிரிந்திருந்த அணிகளை இணைத்தேன்' என்கிறார் சசிகலா. அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது?"

``அணிகளை இணைத்தது தொடர்பாக சேர்த்தவர்களுக்குத்தான் தெரியும். இது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த நேரத்தில் வி.என்.ஜானகியும் ஜெயலலிதாவும் பிரிந்திருந்தபோது, இணைப்புக்கான முயற்சியில் சசிகலா ஈடுபட்டார் என்பதே வரலாற்றில் அறியப்படாத ஒரு செய்தி."

வி கே சசிகலா

பட மூலாதாரம், Getty Images

கே: ``இந்த இணைப்பில் நடராசனும் பங்கு வகித்ததாக சசிகலா கூறுகிறாரே? உண்மையில் அப்போது அதுதான் நடந்ததா?"

``அ.தி.மு.கவுக்கு யோசனைகளை சொல்வதில் நடராசன் முக்கியமானவராக இருந்தார். அவர் கட்சியின் பின்னால் இருந்து கொண்டு யோசனைகளைக் கூறியதாக சொல்வதில் எந்தப் பிழையும் இல்லை. அவர் நேரடியாக அரசியலுக்குள் வரவில்லை. ஆனால், யோசனைகளைக் கூறியது நடராசன்தான்."

கே: ``இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. அவர்களும் ஐந்தாறு தேர்தல்களாக இரட்டை இலை சின்னத்தை வைத்துக் களம் கண்டுவிட்டார்கள். இந்தச் சூழலில் மீண்டும் அ.தி.மு.கவுக்குள் சசிகலா வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?"

``இரட்டைத் தலைமை என்பதே கிடையாது. இது அடிப்படையிலேயே தவறு. தலைமையும் கிடையாது, இரட்டைத் தலைமையும் கிடையாது."

கே: ``சட்டசபையில் 66 இடங்களோடு வலுவான இடத்தில் அ.தி.மு.க இருக்கிறது. இந்தச் சூழலில் சசிகலாவால் என்ன செய்துவிட முடியும்?"

``வெற்றி தோல்வியைப் பற்றி நாம் பேசுவது கொள்கைக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் வேறு வேறு. அதேநேரம், இயக்கத்தின் மரபு மாறிப் போனதைத்தான் நான் எதிர்க்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றதாலேயே அவர்கள் இயக்கத்தின் கொள்கை தெரிந்தவர்கள், மரபு தெரிந்தவர்கள் என ஒப்புக் கொள்ள முடியாது. வெற்றி பெற்றதற்காக இவர்களை அங்கீகரிக்க முடியாது."

கே: ``இரட்டைத் தலைமை என்பது சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக பேசுகிறார்கள். சசிகலாவால் மீண்டும் அ.தி.மு.கவுக்குள் வர முடியுமா?"

``அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவர் சசிகலா. `அவர் வேண்டாம்' என்று கூறி மீண்டும் பொதுக்குழுவை கூட்டட்டும். அவர் உள்ளே நுழையக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வரட்டும், பார்க்கலாம். கட்சியின் பொதுக்குழுவால் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா. அவரை எப்படி மறுக்க முடியும்?"

இ பி எஸ் & ஓ பி எஸ்

பட மூலாதாரம், Getty Images

கே: ``அ.தி.மு.க என்பது குறிப்பிட்ட சாதியின் பிடிக்குள் அடங்கிவிட்டது என்கிறீர்கள். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?"

``அ.தி.மு.க என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. கொங்கு மண்டல கவுண்டர் சமுதாயத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சி செல்வதை ஒப்புக் கொள்ள முடியாது. அது இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறானது. இந்தக் கட்சியில் சாதியும் இல்லை, மதமும் இல்லை. நான் தற்போதுள்ள தலைமையை நிராகரிக்கிறேன்."

கே: ``தற்போது தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில்தான் போட்டி. இது இருமுனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்தப் போட்டியில் அ.தி.மு.க இல்லையா?"

``இவர்களை இங்கே கால் பதிக்க வைத்தது இந்த இரட்டைத் தலைமைதான். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு எப்படி இந்தளவுக்கு செல்வாக்கு வரும்? பா.ஜ.க என்பது மதவாதக் கட்சி. இது பெரியார் தேசம். இங்கு மதவாதக் கட்சிகளுக்கு இடமில்லை. எங்களுக்கு சாதி, மதம், கடவுள் என எதுவும் இல்லை."

கே: ``பா.ஜ.க என்பது மதவாதக் கட்சி என்றால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவர்களை ஆதரிக்கத்தானே செய்தார்?"

``நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா.. லேடியா எனப் பிரசாரம் செய்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்லாமல், 69 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றிவிட்டு, `நான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க மாட்டேன், அமல்படுத்துவேன்' என்றார். அந்தத் தைரியம் வேறு யாருக்கும் வராது. 69 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றியதன் மூலம் திராவிட இயக்கத்தின் கொள்கையை ஜெயலலிதா முழுமையாக நிறைவேற்றினார்."

கே: ``தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களை ஆதரித்து சில அரசியல் கட்சிகள் போராட்டம் செய்கின்றன. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சியும் ஈழப் பிரச்னையில் மனதார அக்கறை செலுத்தி ஈடுபடுவதில்லை. அது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது. என்னை அமைதிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஈழத்தை எம்.ஜி.ஆர் ஆதரித்தார். பின்னர், என்னைவிடவும் தீவிர ஈழ விடுதலைப் பற்றாளராக எம்.ஜி.ஆர் மாறிப் போனார்."

எம் ஜி ஆர் சிலை

பட மூலாதாரம், Getty Images

கே: ``விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசிய வார்த்தைகள் விவாதப் பொருளாக மாறியது. நீங்கள் பிரபாகரனோடு நெருங்கிப் பழகியவர். உண்மையில் அவர்களின் விருந்தோம்பல் எப்படி இருக்கும்?"

"பிரபாகரனோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்தே செல்வச் சீமானாக மாறியவர் சீமான். பிரபாகரனை ஒருநாள் சீமான் சந்தித்தார். அதைவைத்தே எல்லா இடத்திலும் வசூல் செய்து வருகிறார். `சீமான் இனிமேல் கால்வைக்கக் கூடாது' என கனடா நாட்டில் உள்ள தமிழர்கள் கூறியதாகவும் தகவல் வந்தது. சீமானுக்கும் புலிகள் அமைப்புக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை."

கே: ``விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் காலம்காலமாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம், புலிகள் இயக்கத்தோடு முன்னாள் முதல்வர் கருணாநிதி முரண்பட்டு இருந்தார் என பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். அது உண்மையா?"

``அந்தக் காலகட்டத்தில், ஒவ்வோர் இயக்கத்துக்கும் தலா 25,000 ரூபாய் தருவதாக கருணாநிதி சொன்னார். அதனை பிரபாகரன் பெறவில்லை. கருணாநிதிக்கு ஈழ விடுதலையில் நம்பிக்கை இல்லாததால் அதனை அவர் ஆதரிக்கவில்லை. காரணம், ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர் மனதார ஆதரவு தந்தார். இதற்காக என் மூலமாக எம்.ஜி.ஆரை அணுகினார்கள். கருணாநிதியை புலிகள் நம்பியிருந்தால் என்ன உதவிகள் கிடைத்திருக்கும்? 25,000 தருவதாக கருணாநிதி கூறிய நேரத்தில் 15 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர் கொடுத்தார். புலிகள் மீது கருணாநிதிக்குப் பற்றும் இல்லை, அவர் ஆதரிக்கவும் இல்லை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :