தீபிகா குமாரி: இவரது அம்புகள் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் என பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்த இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி.
கிரிக்கெட், மிஞ்சிப் போனால் கால்பந்து, டென்னில் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களை, தன் வில்வித்தையால் வசியம் செய்தவர்.
யார் இவர்?
மகேந்திர சிங் தோனியைப் போல பொருளாதார ரீதியாக பெரிதும் முன்னேறாத ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் பிறந்த தீபிகா குமாரியை சிறு வயதிலேயே வில்வித்தை வசீகரித்தது.
அவர் குடும்பத்துக்கு பெரிய பின்புலம் எல்லாம் கிடையாது. துடிப்போடு அம்பெய்தி வந்த துரு துரு தீபிகா குமாரி மீரா முண்டாவின் கண்ணில் பட்டார்.
இவர் முன்னாள் ஜார்கண்ட் மாநில முதல்வரும், தற்போதைய இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்ஜுன் முண்டாவின் மனைவி. அப்போது அவர் சராய்கேலா கரஸ்வான் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவரின் ஆதரவு கிடைத்த பின் தீபிகா குமாரிக்கு வில்வித்தை தான் வாழ்கை என்றானது எனலாம். 2005ஆம் ஆண்டு சராய்கேலா கரஸ்வானில் மா தாமாத்ரி விளையாட்டரங்கில் இருக்கும் வில்வித்தை சங்கத்தின் பயிற்சி அரங்கில் தீபிகா பயிற்சி பெற வழிவகுத்தது.
11 வயது முதல் சராய்கேலா கரஸ்வான் வில்வித்தை சங்கத்தின் செயலர் சுமந்தா மொஹாந்தியின் வீட்டில் 10 பெண்களோடு தங்கி வில்வித்தையின் பால பாடங்களைக் கற்றார்.
பயிற்சி தவத்துக்கு மெல்ல பதக்க வரம் கிடைக்கத் தொடங்கியது. 2008ஆம் ஆண்டு தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.
தீபிகா குமாரியின் குறி தவறா தாக்குதல்களை, மற்றவர்கள் மெல்ல கவனிக்கத் தொடங்கினர். அதே ஆண்டில் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஆர்சரி அகாடமியில் தன்னை பட்டை தீட்டிக் கொள்ள இணைந்தார்.
அதே ஆண்டில் துருக்கியில் நடந்த உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் 16ஆவது இடம் பிடித்ததால் தொய்ந்து போனார் தீபிகா. டாடா அகாடமியில் தீபிகாவின் பயிற்றுநராக இருந்த தர்மேந்திர திவாரி ஆறுதல் கூறி தேற்றினார்.

பட மூலாதாரம், Getty Images
தீபிகாவின் மனம் ஒருமுகப்பட்டது, இம்மியளவும் விலகாத இலக்குகளுக்கு சொந்தக்காரரானார்.
2009ஆம் ஆண்டு உலக இளையோர் சாம்பபியன்ஷி போட்டியில் தங்கம் வென்றார். இந்தியாவில் நடந்த 2010 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். ஆசிய போட்டிகள், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் என பதக்க வேட்டை தொடர்ந்தது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பே உலகின் நம்பர் 1 பெண் வீராங்கனை ஆனார் தீபிகா. இருப்பினும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும், 2016ஆம் ஆண்டு பிரேசில் ரியோ ஒலிம்பிக்கிலும் தீபிகாவால் பதக்கங்களை வெல்ல முடியவில்லை.
எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி, உலகின் முன்னணி வில்வித்தை வீராங்கனை என்கிற இடத்தை தன் விடாமுயற்சியால் தக்க வைத்துக் கொண்டார் தீபிகா.
வில்லனை மணந்த வில்லி

பட மூலாதாரம், Getty Images
இந்த ஒலிம்பிக்கில் போட்டியிடவிருக்கும் அதானு தாஸை, கடந்த 2020ஆம் ஆண்டு மணந்து கொண்டார் 'வில்லி' தீபிகா குமாரி.
இவரின் வில்வித்தை திறனை கெளரவித்து இந்திய அரசு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி இருக்கிறது.
டோக்யோ ஒலிம்பிக்கில் பெண்கள் சார்பாக வில்வித்தையில் தேர்வாகி இருக்கும் ஒரே வீரர் தீபிகா மட்டுமே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொரியாவைச் சேர்ந்த கேங் சே வாங், அன் சான், சீனாவைச் சேர்ந்த செங் யியாச், மெக்சிகோவைச் சேர்ந்த அனா வாஸ்க்வஸ், நெதர்லாந்தைச் சேர்ந்த கேபி ஸ்க்லோஸர் ஆகியோர் தீபிகா குமாரிக்கு சவால் கொடுக்கும் போட்டியாளர்களாக இருக்கலாம் என ஸ்போர்ட்ஸ்டார் வலைதளம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
9ஆவது இடம்

பட மூலாதாரம், Getty Images
இன்று தான் அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன என்றாலும், ஜூலை 21ஆம் தேதி முதலே தகுதி சுற்றுகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இன்று நடந்த வில்வித்த தக்திச் சுற்றில், கொரிய குடியரசைச் சேர்ந்த ஆன் சான் என்கிற வில்வித்தை வீராங்கணை, தகுதிச் சுற்றிலேயே 680 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார்.
இச்சுற்றில் தீபிகா குமாரி 663 புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். தீபிகா காலிறுதிச் சுற்றில், கொரியாவின் ஆன் சானை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் வலைதள செய்தி கூறுகிறது.
இரண்டு ஒலிம்பிக் அனுபவம், பல்வேறு சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்கள் என தேர்ந்த பட்டறிவோடு டோக்யோ ஒலிம்பிக்கில் களமிறங்கியுள்ளார் தீபிகா.
அவர் இலக்குகள் இந்தியாவை பதக்கப் பட்டியலில் உயரே கொண்டு செல்லும் என பல விளையாட்டு ஆர்வலர்கள் கணிக்கிறார்கள்.
Please wait..
பிற செய்திகள்:
- மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் பலி - என்ன ஆனது?
- "சூர்யா பெரிய நடிகராக வருவார் என்ற ஜோசியம் கேட்டு சிரித்தேன்" - சிவக்குமார் பேட்டி
- நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
- பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தன் தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய டெரிக் ரெட்மண்ட்
- சீனாவில் வெள்ளத் தாண்டவம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












