You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருந்தார். இதற்கு இறக்குமதி வரியாக 1,88,11,045 ரூபாயை செலுத்தியிருந்தார்.
ஆனால், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரி.ின் அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்ற போது தமிழ்நாடு வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி ஆட்பேசனை இல்லா சான்று வாங்கி வருமாறு கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், நுழைவு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் சில வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி வரி செலுத்த மறுத்துள்ளார் விஜய்.
ஆனால், நுழைவு வரியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்ததால், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 20 சதவிகித நுழைவு வரியை செலுத்தி விட்டு வாகனத்தைப் பதிவு செய்வதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவையடுத்து அதே மாதம் 23ஆம் தேதி 20 சதவிகித வரியை செலுத்திவிட்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் பயன்படுத்தி வந்தார்.
இந்த சூழலில் கடந்த வாரம் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளதால் நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்துமாறு உத்தரவிட்டார்.
கூடவே, வழக்கினை தொடர்ந்தற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார். அந்த, தீர்ப்பை அளித்தபோது நீதிபதி தெரிவித்திருந்த கருத்து, பொதுவெளியிலும் விஜய் ரசிகர் வட்டாரத்திலும் விவாதத்தை தூண்டியது.
அதில், ''புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்கும் நன்கொடை அல்ல. மக்கள் செலுத்தக் கூடிய வரிகள்தான் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் உண்மையான ஹீரோக்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
வரி செலுத்த மறுத்து தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள், திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். ரீல் ஹீரோக்களாக அவர்கள் இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஒரு தேச துரோகம்'' எனவும் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்தும் தன்னைப் பற்றிய விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்