கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் - ஐ.சி.எம்.ஆர்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது. இப்போதும் கொரோனா நமக்கு மத்தியில் தான் இருக்கிறது.
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என அது கூறியுள்ளது.
இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர்.
எந்த மாநிலங்கள் பத்திரமாக இருக்கவேண்டும்?
"ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்" என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை எனவும் அவர் எச்சரித்து இருக்கிறார்.
கொரோனா மூன்றாம் அலை எப்போது வரும்? அது எத்தனை தீவிரமாக இருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.
ஒருவேளை கொரோனா வைரசின் மூன்றாம் அலை உருவானால், 2021 ஆகஸ்ட் மாத இறுதியில் அது இந்தியாவைத் தாக்கலாம் என கூறியுள்ளார் மருத்துவர் சமீரன் பண்டா.
இந்த நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒன்றாக வைத்து பேசக் கூடாது, காரணம் கொரோனா பெருந்தொற்று ஒவ்வொரு மாநிலத்தையும் பல்வேறு வகையில் பாதித்து இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாநிலத்துக்குத் தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சமீரன் பண்டா.
எனவே மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சானிடைசர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவது, காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன?
"துரதிர்ஷ்டவசமாக நாம் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்” என சில நாட்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் "கொரோனா வைரசின் டெல்டா திரிபு 111 நாடுகளில் பரவியுள்ளது. இத்திரிபு உலகில் கொரோனா வைரசைப் பரப்பும் முக்கிய திரிபாக உருவெடுக்கலாம்" என்றும் எச்சரித்தார் டெட்ரோஸ்.
இந்திய மருத்துவக் கழகமும் (ஐ.எம்.ஏ.) கொரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது எனக் கூறியது. எனவே ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்றும் ஐ.எம்.ஏ. கேட்டுக்கொண்டது.
கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டமாகக் கூடுவது தீவிரமாக கொரோனா பரவ வழிவகுக்கும். எனவே சுற்றுலா, மதம் சார் கூட்டங்கள், புனித யாத்திரை போன்றவைகளை இன்னும் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் ஐ.எம்.ஏ. கூறியது.
பிற செய்திகள்:
- மூன்றாம் அலையை தடுப்பது எப்படி? தமிழ்நாடு அரசு திட்டமிடும் வழிமுறைகள் என்னென்ன?
- ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய்
- 36,000 கி.மீ வரை விண்வெளியை கண்காணிக்கும் ரேடார் - அமெரிக்கா முயல்வது ஏன்?
- இந்திய - இலங்கை கிரிக்கெட்: ஷிகர் தவான் தலைமையில் இந்தியா - 10 சுவாரசிய தகவல்கள்
- ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












