கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது எப்படி? தமிழ்நாடு அரசு திட்டமிடும் வழிமுறைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு, ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்படாமல் மக்கள் அலட்சியமாக நடமாடுவதால் மூன்றாம் அலைக்கான பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதன் காரணமாக அலட்சியமாக செயல்படும் கடைகள் மீதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதே நேரம், கோவை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்பாட்டில் வராததால் அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்புகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. `மூன்றாம் அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பு வரலாம்' எனக் கூறப்பட்டுள்ளதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுப்பது, சமாளிப்பது ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி வாயிலாக பேசினார்.

இந்த ஆலோசனையின்போது, மூன்றாவது அலையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.

தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரம்

பட மூலாதாரம், ARUN SANKAR/ Getty Images

படக்குறிப்பு, தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரம்

இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள் என்னென்ன?

அப்போது, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் மாவட்டங்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இன்னும் எவ்வளவு பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்பது குறித்தும் இறையன்பு கேட்டறிந்தார்.

மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பது, கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்வது, வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வது எனப் பல்வேறு அறிவுறுத்தல்களை தலைமைச் செயலாளர் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் விளக்கியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை செயலர் பணீந்திர ரெட்டி, கூட்டுறவுத் துறை செயலர் நஜிமுதீன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சிறப்பு அலுவவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :