'பப்ஜி' மதனுக்கு பணம் எங்கிருந்து எப்படி வந்தது? மனைவி கிருத்திகா திடீர் பேட்டி

யூட்யூப் சேனலில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விளையாடியே தனது கணவர் சம்பாதித்ததாகவும் எந்த பண மோசடியிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருக்கிறார் "பப்ஜி' மதனின் மனைவி கிருத்திகா. மதன் கைது செய்யப்பட்டுள்ள அதே வழக்கில் கிருத்திகாவும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாச வர்ணனைகள் மற்றும் சிறார், பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்றும் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார் மதன். இவரது மனைவி கிருத்திகா சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மதன் சட்டவிரோதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை என்றும் அவர் சொத்துகளை குவித்ததாக கூறப்படுவது பொய் என்றும் தெரிவித்தார்.
"மதன் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த சொத்தையும் வாங்கியதில்லை. நாங்கள் இரண்டு சொகுசு கார்களை வைத்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. சொகுசு கார் ஏதும் என் பெயரிலோ, மதன் பெயரிலோ இல்லை. அவர் பெயரில் ஆடி ஏ 6 கார் மட்டுமே இருக்கிறது. நாங்கள் இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம்.
மதன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் 'பப்ஜி' விளையாடுவார். நான்கு மணி நேரம்தான் தூங்குவார். அதன் மூலமாகவும் சூப்பர் சாட் மூலமாகவும்தான் பணம் வந்ததே தவிர, வேறு விதத்தில் பணம் வரவில்லை. இப்போது எங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. வீட்டுச் சாவி கூட காவல்துறையிடம்தான் இருக்கிறது. காவல்துறையின் விசாரணைக்கு போனபோது நான் சொன்னதைக்கூட அவர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், MADHAN
மதனின் யூட்யூப் சேனலுக்கு என்னுடைய வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டது. அதைத் தவிர, அந்தச் சேனலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நானும் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறித்தான் என்னை கைது செய்தார்கள்.
நானும் அந்த விளையாட்டை விளையாடியதாகவும் அதில் வரும் பெண் குரல் என்னுடையது என்றும் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. அப்படிச் சொல்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் கூறினார் கிருத்திகா.
தங்கள் மீது 200 பேர் புகார் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில், யார் அந்த 200 பேர் எனத் தெரிந்து கொள்வதற்காகத்தான் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததாகவும் ஆனால், அதற்கு முன்பாகவே மதன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கிருத்திகா கூறினார்.
தான் அறிந்தவரையில் மதன் மீது நான்கு பேர் மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"பணத்தை எமாற்றியதாக குற்றம்சாட்டுகிறார்கள். எங்களைப் பற்றி யாராவது அப்படிச் சொல்லியிருக்கிறார்களா? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஆதாரத்தைக் காண்பிக்கச் சொல்லுங்கள்," என்றார் கிருத்திகா.
ஆனால், ஆபாசமான வசவுகளுடன் நேரலையில் பப்ஜி விளையாடியது சரியா என செய்தியாளர்கள் கேட்டபோது, "மதன் விளையாடும்போது கமென்ட் செய்யும் பகுதியில் வேண்டுமென்றே சிலர் மதனுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவரை அப்படிப் பேச வைத்திருக்கிறார்கள். வெறும் நான்கு பேர்தான் இதைச் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோக்களில் உள்ள கமென்ட் பகுதியைப் பாருங்கள். அவர்களும் அதே கெட்ட வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்," என்று பதிலளித்தார்.
காவல்துறையால் கைப்பற்றப்பட்டிருக்கும் 'ஆடி ஆர் 8 ரக கார்'' தங்களுடையதல்ல என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்ட நான்கு பேரே மதன் மீது திரும்பத்திரும்ப புகார் கொடுத்திருப்பதாகவும் கிருத்திகா தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER
இந்தியாவில் தடை செய்யப்பட்ட "பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட் - பப்ஜி" என்ற விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனை மற்றும் வசவுகளுடன் யூ டியூபில் நேரலை செய்து வந்த புகாரில் பப்ஜி மதன் என்ற நபர் கடந்த ஜூன் 18ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மதன் மீது 159 புகார்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதவிர, தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணத்தை வாங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மதன் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டார்.
கிருத்திகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- தாலிபன்கள் யார்? அவர்கள் பற்றிய அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- 60 ஆண்டுகள் காத்திருந்து விண்வெளி செல்லும் அமெரிக்கப் பெண் வேலி ஃபங்க்
- மீண்டும் தாலிபன்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்? அஞ்சி ஓடும் ராணுவம்
- தமிழ்நாட்டில் இ - பாஸ் முறை ரத்து - வேறு புதிய தளர்வுகள் என்ன?
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் போரால் பிரிந்தது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












