தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எப்போது? கேள்விக்குறியாகும் தனிதேர்வர்களின் எதிர்காலம் - என்ன செய்யவிருக்கிறது அரசு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா பெருந்தொற்று காரணமாக 10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து இருப்பது பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தனித்தேர்வர்களுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வராததால் இரண்டு ஆண்டுகளாக தனியார் பயிற்சி மையங்களில் பயின்று வரும் தனிதேர்வாளர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் மருத்துவ காரணங்களால் பள்ளியில் படிப்பை தொடர முடியாமல் இடை நின்றவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தனித்தேர்வு எழுத கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் பள்ளியில் பயின்று வந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை கொரோனா பெருந்தொற்றால் தமிழக அரசு 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்ததால் ராமேஸ்வரத்தில் பயின்று வந்த தனித்தேர்வாளர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.
அதே போல் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர்களையும் தமிழக அரசு 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்ததால் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத காத்திருந்த தனி தேர்வாளர்கள் தேர்வு எழுத முடியாததால் மேற்படிப்புக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், @CMOTamilnadu, Twitter
தனி தேர்வாளர்களுக்கு முறையான தேர்வு அல்லது பெயர் அளவிலாவது ஒரு தேர்வு வைத்து மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்யாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தங்களின் மேற்படிப்பைத் தொடர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே தனி தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெற்றோர்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதங்கள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் அனைவரும் பெரும் கலக்கத்தில் உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ராமேஸ்வரத்தை போல் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் தனி தேர்வு எழுத முடியாமல் உள்ளனர். எனவே தமிழக பள்ளி கல்வித்துறை தனி தேர்வாளர்களுக்கு ஆன்லைன் தேர்வு அல்லது நேரடி தேர்வு வைத்து மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மாணவி பிபிசி தமிழிடம் பேசுகையில் "எனது பெயர் காட்ஸி. நான் 2017-18 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 460 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. 11ஆம் வகுப்பு அதே பள்ளியில் சேர்ந்தேன் ஆனால் எனது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால் தொடர்ந்து பள்ளியில் படிக்க முடியாமல் போனது.
2019ஆம் ஆண்டு தனித்தேர்வு எழுதி 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறேன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசு பொது தேர்வை ரத்து செய்து 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்ததால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.
நான் மட்டுமல்ல என்னைப் போல் நிறைய மாணவர்கள் நான் படிக்கும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகின்றனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பள்ளியில் என்னுடன் படித்தவர்கள் எனக்கு பின்னால் படித்த மாணவர்கள் தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தயாராகி வருகின்றனர். ஆனால் நான் இன்னும் அதே 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை தனி தேர்வாளர்கள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
நாங்களும் ஏதேனும் அறிவிப்பு வந்து விடாதா என தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து கொண்டே இருக்கிறோம். தற்போது கொரோனா மூன்றாவது அலை வரும் என மருத்துவ வல்லுநர்களும், மருத்துவர்களும் கூறுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது.
அப்படி மூன்றாவது அலை வந்தால் நிச்சயம் எங்களுடைய பள்ளிப்படிப்பு முடிய இன்னும் கால தாமதமாகும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தனி தேர்வாளர்களுக்கு தமிழக அரசு பொது தேர்வு நடத்த வேண்டும் அல்லது ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் இல்லையெனில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தனித்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்" என கூறுகிறார் மாணவி காட்ஸி.
இது குறித்து மாணவி காட்ஸியின் தாயார் மலர் பிபிசி தமிழிடம் பேசுகையில் "நான் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவ பெண். எனது மகள் பத்தாம் வகுப்பு முடித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 11 ஆம் வகுப்பு தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்வு எழுதாததால் என் மகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

என் கணவர் இறந்ததால் எனது உழைப்பில் எனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். என் மகளின் படிப்பிற்காக என்னால் முடிந்த அளவு அனைத்து உதவிகளும் செய்து வருகிறேன். ஆனாலும் அவள் இரண்டு ஆண்டுகளாக தேர்வு எழுத முடியாமல் மிகவும் வேதனையுடன் இருக்கிறாள்.
எனது மகளின் மனநிலை இறுக்கமாக இருப்பதை என்னால் கண் கூடாக காணமுடிகிறது. உடனடியாக அரசு தனி தேர்வாளர்கள் மீது கவனம் செலுத்தி மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்" என்கிறார் மலர்.
இது குறித்து தனிதேர்வு மையம் நடத்தி வரும் ஆசிரியை நளினி பிபிசி தமிழிடம் பேசுகையில் "தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நான் கடந்த 12 ஆண்டுகளாக தனியார் பயிற்சி மையம் நடத்தி வருகிறேன்.
எனது பயிற்சி மையத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறியுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் ஓரே வகுப்பிற்கான தேர்வுக்கு பயின்று வருகின்றனர்.
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெரிய பாதிப்பாக உள்ளது. மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பயில முடியாமல் எதிர்காலத்திற்கு வருமானம் தேடி கொள்ள முடியாத நிலை உள்ளது.
இது குறித்து பலமுறை நாங்கள் பயிற்சி மையம் சார்பில் கல்வியாளர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தொடர்ச்சியாக விசாரித்து வருகிறோம். ஆனால் இதுவரை தமிழக அரசு சார்பில் முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக உயர் கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஒரே வகுப்பில் மாணவர்கள் படித்து வருவதால் அவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியை நளினி தெரிவித்தார்.

தனிதேர்வாளர்கள் தேர்வு எப்போது நடத்தப்படும் என பிபிசி தமிழ் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது "கடந்த 2019 - 20 கல்வி ஆண்டுக்கான தனி தேர்வாளர்களுக்கு தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக பலரால் தேர்வு எழுத முடியவில்லை.
இந்தாண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தனி தேர்வாளர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு தமிழக அரசு தான் எடுக்க வேண்டும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இவை அனைத்துமே கொரோனா நோய் தொற்று முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு மாணவர்களின் உடல் நிலை மற்றும் மனநிலை பொருத்தே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார் அப்பள்ளி கல்வித்துறை அதிகாரி.
பிற செய்திகள்:
- உடல் மெலிந்த வடகொரியாவின் கிம் ஜோங் உன் - என்ன ஆனது?
- மீண்டும் செல்வாக்கை பெருக்கும் ட்ரம்ப்பின் புதிய உத்தி
- விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை வழக்கில் என்ன நடந்தது?
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












