இந்தியாவில் கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் புரிந்து கொள்ள முடியாத புதிய ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்த மாதத்தில் மகாராஷ்டிராவின் சேவாகிராமில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் நான்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுடைய தாய்மார்கள் ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளுக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அவர்களது உடலில் ஆன்பாடி என்று அழைக்கப்படும் உயிர் எதிர்ப்பொருள்கள் இருந்தன. ஏற்கெனவே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான அடையாளம்தான் இவை.
அந்தக் குழந்தைகள் பல்லுறுப்பு அழற்சி (MIS-C) என்ற உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு போராடினார்கள். பொதுவாக குழந்தைகளும் பதின்ம வயதினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு இது போன்ற நிலை உருவாகிறது.
அவர்களில் இரண்டு குழந்தைகள் பாதிப்பில் இருந்து மீண்டார்கள். மற்ற இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
"இந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து நமக்குப் புரியவில்லை. இது குறித்து போதுமான புள்ளி விவரங்கள் இல்லாதது நமது கவலையை அதிகரிக்கிறது," என்கிறார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எஸ்.பி.காலந்திரி.
இரண்டாவது அலை மக்களை மருத்துவமனை நோக்கி செல்ல வைத்தபோது, நாடு முழுவதும் இருக்கும் குழந்தை மருத்துவர்கள் இதுபோன்ற அரிதான மற்றும் அதே நேரத்தில் கொடிய பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து கூறத் தொடங்கினர். இன்னும் இதுபோன்ற தகவல்கள் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இதுவரை எத்தனை குழந்தைகள் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியாது. அமெரிக்காவில் இதுவரை 4 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 36 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் கங்காராம் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் திரென் குப்தா இரண்டாவது அலை தொடங்கிய பிறகு இதுவரை 75 குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார். அனைவரும் 4 முதல் 15 வயதுக்கு உள்பட்டவர்கள்.
அந்த மருத்துவமனையில் பல்லுறுப்பு அழற்சி (MIS-C) என்று அழைக்கப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 18 படுக்கைகளைக் கொண்ட புதிய வார்டு திறக்கப்பட்டது.

பட மூலாதாரம், Gangaram Hospital
இந்த நோயால் டெல்லியிலும் அதன் புறநகரப் பகுதிகளிலும் 500-க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று திரென் குப்தா கணிக்கிறார்.
சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு நகரமான புனேயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஆர்த்தி கினிகர் இதுபோன்ற 30 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். அவர்களில் 13 குழந்தைகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு மையோகார்டிட்டிஸ் என்ற இதயத் தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இரண்டாவது அலைக்குப் பிறகு இதுபோன்ற பாதிப்புகளால் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது என்கிறார் கினிகர்.
மகாராஷ்டிராவின் சிறுநகரங்களுள் ஒன்றான சோலாப்பூரில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தயானந்த் இதுபோன்ற 20 குழந்தைகளக்குச் சிகிச்சையளித்திருக்கிறார். பெரும்பாலும் அவர்கள் 10 முதல் 15 வயதுக்கு உள்பட்டவர்கள்.
இரு வாரங்களுக்கு முன்பு பல்லுறுப்பு வீக்கத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய நோய்களின் கீழ் கொண்டுவந்தது. அதன்படி இந்த நோய் ஒருவரிடம் இருப்பதைக் கண்டறிந்தால் அதை மேலதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமானது.
கொரோனா வைரஸுக்கு எதிராக நமது எதிர்ப்பு ஆற்றல் மிகத் தீவிரமாக இயங்கினால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு முக்கிய உறுப்புகளில் வீக்கமோ அழற்சியோ ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நோய்க்கு முதலில் ஏற்படும் அறிகுறிகள் வேறு நோய்க்குரியவை போலத் தோன்றும். தொடர்ச்சியான தீவிரக் காய்ச்சல், சிவப்பு நிறக் கண்கள், சொறி, நிணநீர்க் குழாய்களில் வீக்கம், வயிற்றுவலி, குறைந்த ரத்த அழுத்தம், உடல்வலி, சோம்பல் போன்றவை இதன் அறிகுறிகள்.

பட மூலாதாரம், Gangaram Hospital
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளைத் தாக்கும் அரிதான கவாசாகி நோயைப் போன்றே சில அறிகுறிகள் இருக்கும்.
"பல்லுறுப்பு அழற்சி என்பது லேசான கவாசாகி நோயில் இருந்து பல்லுறுப்பு செயலிழப்பு வரையிலான நிலைக்கு இடையே உள்ளதாக இருக்கும்" என்கிறார்ல் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான உதவிப் பேராசிரியர் ஜூமா சங்கர்.
அழற்சி தீவிரமாகும்போது உயிருக்கு ஆபத்தான செப்டிக் ஷாக், சுவாச மண்டலச் செயலிழப்பு, ஆகியவை ஏற்படவும், இதயம், சிறுநீரகம், கல்லீரல், போன்றவை பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. பல்லுறுப்பு அழற்சியால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நரம்பும மண்டலப் பாதிப்பு இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர் குப்தா தெரிவிக்கிறார். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு ஒரு வாரம் வரையில் வென்டிலேட்டர் பொருத்தவேண்டியிருக்கிறது.
ஸ்டீராய்டுகள், ஆன்டிபயாடிக், இம்மியூனோகுளோபுலின், செயற்கைச் சுவாசம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய குழந்தைகளை மீட்க முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குப்தாவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 90 சதவிகித குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலைதரக்கூடிய அம்சம். கொரோனா பாதிப்பு நீங்கிய இரு வாரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு பல்லுறுப்பு அழற்சி ஏற்படுகிறது என்கிறார் குப்தா.
"இந்தக் குழந்தைகளுக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படும் வரையில் காத்திருக்கக்கூடாது என்பதுதான் எனது கவலை. கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்டுகிறதா என்பதைப் பெற்றோர்கள் கண்காணித்து உரிய நேரத்தில் மருத்துவர்களிடம் காட்ட வேண்டும்"
"இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால் அவர்களக்குச் சிகிச்சையளிக்கும் வகையிலான வசதிகள் நம்மிடம் இருக்கின்றனவா என்பதும் கவலை தருகிறது" என்கிறார் குப்தா.
குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு மிகவும் அரிது. உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவந்துவிட்டால் இறப்பு விகிதமும் மிகக் குறைவுதான். மும்பை மருத்துவமனைகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேரில் ஒருவர்தான் இறந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இதே பாதிப்பு பிரிட்டனில் குழந்தைகளின் பல்லுறுப்பு அழற்சி (PIMS) என்று அழைக்கப்படுகிறது. அங்கு இறப்பு விகிதம் பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும், மிகவும் அரிதாகவும் இறப்பு நேரிடுவதாக பிரிட்டனின் குழந்தைகளுக்கான ராயல் கல்லூரி கூறுகிறது.
புனேயில் இந்த நோய் குறித்துப் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாரித்த துண்டுக் குறிப்புகள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன. குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆன்லைனில் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆனாலும் இந்த நோயைப் பற்றி முழுமையாகப் புரியாத அம்சங்கள் இருக்கின்றன.கொரோனா பாதிப்புக்குப் பிறகு ஆன்டிபாடிகள் அதிகமாக உருவாவதால் இந்த நோய் ஏற்படுகிறதா? இல்லை கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தன்னிச்சையாகவே இந்த நோய் உருவாகிறதா? குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே ஏன் பாதிக்கப்படுகிறார்கள்?
"இது கொஞ்சம் புதிரானதுதான்" என்கிறார் மருத்துவர் பணிக்.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்?
கீழ்க்கண்ட அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவுறுத்துகிறது.
- மூச்சுத் திணறல்
- தீராத மார்பு வலி, அல்லது மார்ப்பு பகுதியில் தீராத அழுத்தம்
- மனக் குழப்பம்
- தூக்கத்தில் இருந்து விழிக்க இயலாமை, தொடர்்து விழித்திருக்க இயலாமை
- தோல் அல்லது உதடுகள் வெளிர், சாம்பல் நீல நிறமாக மாறுதல்
- அல்லது ஆணி படுக்கைகள், தோல் தொனியைப் பொறுத்து
- கடுமையான வயிற்று வலி
பிற செய்திகள்:
- 1991 நெருக்கடி: 21 டன் தங்கத்தில் நரசிம்மராவ் எழுதிய இந்தியாவின் கதை
- ஆசிரியர் ராஜகோபாலன் முதல் கிஷோர் கே சாமி வரை - குண்டர் சட்டம் பாய்வதால் என்ன நடக்கும்?
- தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
- விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை வழக்கில் என்ன நடந்தது?
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












