கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய எம்ஐஎஸ்-சி நோய் குறித்து மருத்துவ உலகம் என்ன கூறுகிறது?

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசாந்த் சாஹல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நான்கு வயதான அமனை அவசரமாக உத்தர பிரதேசத்தில் உள்ள காஜியாபாதில், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது " காலம் தாழ்த்தாமல், குழந்தைகளுக்கான ஐ.சி.யுவில் அமன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும்" என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளில் சில அசாதாரண குளறுபடிகளை மருத்துவர்கள் கண்டனர். அதனால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது.

"என் மகனுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக லேசான காய்ச்சல் (சுமார் 99 டிகிரி) இருந்தது. கண்களில் அரிப்பு இருந்தது. மருத்துவமனையை அடைவதற்கு முன்பு வயிற்று வலி இருப்பதாகவும் அவன் கூறினான். மற்றபடி எல்லாம் இயல்பாக இருந்தன. உடல் ரீதியாக எந்தப்பிரச்சனையும் காணப்படவில்லை" என அமனின் தாயார் பூஜா கூறினார்.

ஆனால், "ஒரு தொற்று காரணமாக, அவரது மகனின் இதயத்தின் ஒரு பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது" என அமனின் தந்தை சூரஜிடம் மருத்துவர்கள் கூறியபோது, ​​அவர் அதிர்ச்சி அடைந்தார்.

"அமனுக்கு எம்ஐஎஸ் - சி (MIS-C) என ஒரு சிக்கல் உள்ளது," என்று மருத்துவர்கள் கூறினர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் 'மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்' அல்லது எம்.ஐ.எஸ் - சி என்பது தற்போது கோவிட் -19 உடன் தொடர்புடைய ஒரு தீவிர நோய் என உலகின் பிரபலமான மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான 'தி லேன்செட்' தெரிவிக்கிறது.

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

அமன் நோய் வாய்ப்படுவதற்கு முன்பு ஆசிரியராக பணியாற்றும் சூரஜின் முழு குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. மே இரண்டாவது வாரத்தில், முழு குடும்பமும் சிகிச்சைக்குப் பின்னர் தங்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர். மேலும் அனைவரின் கோவிட் பரிசோதனை அறிக்கையும் நெகட்டிவ் ஆனது. கொரோனா நோய் தொற்றின் போது குடும்பத்தின் மற்றவர்களைப் போலல்லாமல், அமனுக்கு கண்னில் மட்டும் தொற்று ஏற்பட்டது தவிர வேறு தீவிர அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை.

அமனின் ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கை நெகட்டிவாக இருந்தது. ஆனால் ஆன்டிபாடி சோதனையில், கணிசமான அளவிற்கு கோவிட் ஆன்டிபாடிகள் அமனின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.

"அமனின் ஈ.சி.ஜி மோசமாக இருந்தது. எக்கோ கார்டியோக்ராம் (இதய பரிசோதனை) அறிக்கையும் ஒழுங்காக இல்லை. வேறு சில உடல் நலம் சார்ந்த விஷயங்களும் சரியாக இல்லை. இந்த வயதில் திடீரென்று இப்படி இருப்பது ஒரு அசாதாரண விஷயம் , "என அமனுக்கு சிகிச்சையளிக்கும், சிசு மற்றும் குழந்தை மருத்துவரான டாக்டர் அஜீத் குமார் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக அதிகரிக்கும் இந்த நோய்

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

"மக்கள் கொரோனாவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், குழந்தைகள் எம்ஐஎஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இது முக்கியமாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பின் ஏற்படும் நிலை. இருப்பினும், குழந்தைகளுக்கு எம்ஐஎஸ் நோயால் பாதிக்கப்படுவது அரிதானது. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை இதுவரை கண்டறிய இயலவில்லை. இந்த அலையில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், குழந்தைகளிடையே இந்த நோயும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது," என மருத்துவர் அஜீத் குறிப்பிட்டார்.

மருத்துவர் அஜீத் குமாரின் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஆறு ஐ.சி.யு படுக்கைகள் உள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் எம்.ஐ.எஸ்-சி நோயாளிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி தலைநகர் வலயத்தில், எம்.ஐ.எஸ்.சி நோயால் இதுவரை சுமார் 200 கேஸ்கள் பதிவாகியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது என செய்தி முகமையான ஏ.என்.ஐ தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களில் எம்ஐஎஸ்-சி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக் இன்டென்சிவ் கேர் என்கிற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு எம்ஐஎஸ்-சி நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது அவ்வமைப்பு. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் இந்த நோயின் தாக்கம் ஆறு மாத குழந்தைகளில் கூட காணப்படுகிறது என்கிறார்கள்.

MIS-C ஐ அடையாளம் காண்பது எப்படி?

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு (சி.டி.சி), 2020 மே மாதம் முதல் இந்த நோய் பற்றி ஆய்வு செய்து வருகிறது.

எம்ஐஎஸ்-சி என்பது அரிதான ஆனால் ஆபத்தான நோயாகும். இது கோவிட் -19 உடன் தொடர்புடையது என சி.டி.சி தெரிவிக்கிறது.

இந்த நோய் குழந்தைகளின் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், மூளை மற்றும் கண்களை பாதிக்கும் என அவ்வமைப்பு கூறுகிறது.

எம்ஐஎஸ்-சி உள்ள சில குழந்தைகள் கழுத்து வலி, உடலில் ஒவ்வாமைகள் ஏற்படுவது, கொப்பளங்கள், கண்கள் சிவப்பாதல் மற்றும் தொடர் சோர்வு பற்றி புகார் செய்கிறார்கள் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லா குழந்தைகளுக்கும் MIS-C இன் ஒரே அறிகுறிகள் இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 2020 ஜூன் முதல் இந்த நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.

'சிறிய அறிகுறிகளுடன் தொடங்குகிறது'

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Reuters

"இந்த நோய்க்குப் மருத்துவமனையில் தங்குவதற்கான சராசரி காலம் 7 முதல் 8 நாட்கள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எல்லா குழந்தைகளுக்கும் காய்ச்சல் இருந்தது. சுமார் 73 சதவிகித குழந்தைகளுக்கு வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தது. 68 சதவிகித குழந்தைகளு வாந்தி இருந்தது, "என உலகின் புகழ்பெற்ற மருத்துவ இதழான தி லேன்செட் தனது அறிக்கையில் எழுதியது.

மேலும், பிரிட்டனின் புகழ்பெற்ற மற்றும் உலகின் பழமையான மருத்துவ சஞ்சிகைகளில் ஒன்றான 'தி பி.எம்.ஜே', கண்களின் தொற்றுநோயான கன்ஜங்டிவைட்டிஸையும் MIS-C இன் முக்கிய அறிகுறியாகக் கருதுகிறது.

சில நேரங்களில் எம்ஐஎஸ்-சி அறிகுறிகள் கவாசாகி நோயைப் போலவே இருக்கின்றன. மேலும் இந்த இரண்டு நோய்களும் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் எம்ஐஎஸ்-சி வேறு வகையான நோய். எம்.ஐ.எஸ்-சி நோயாளிகளுக்கு இதயம் மற்றும் குடல் பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவை கவாசாகி நோயின் அறிகுறிகளிலிருந்து வேறுபடுகின்றன என்று அதன் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

எம்ஐஎஸ்-சி என்பது ஒரு மெதுவாக அதிகரிக்கும் நோயாகும். இது சிறிய அறிகுறிகளுடன் தொடங்குகிறது. ஆனால் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் மிக விரைவாக அதிகரிக்கிறது. சில நாட்களில் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவை ஒருங்கே இணைந்து வேலை செய்வதை நிறுத்திவிடக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் மீது இந்த நோயின் தாக்கம் என்ன?

குழந்தை மாதிரிப் படம்

பட மூலாதாரம், EPA

எந்தக் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது, ஏன் இந்த நோய் வருகிறது என்பது பற்றிய தகவல்களை அமெரிக்க அமைப்பான சி.டி.சி.யின் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும், எம்ஐஎஸ்-சி அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் , கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டிருந்தனர் அல்லது கோவிட் -19 உடைய ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது தெளிவாகியுள்ளது.

"எந்த நோய் உள்ள குழந்தைகள் இதன் காரணமாக அதிக ஆபத்தில் உள்ளனர், எந்த விதமான உடல் அமைப்புள்ள குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர், எம்ஐஎஸ்-சி இருக்கும்போது முதலில் யாருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் அல்லது யார் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பது இன்னும் தெரியவில்லை." என்று சி.டி.சி யின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், எம்ஐஎஸ்-சி நோயால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளை ஆய்வுசெய்த லான்செட் ஆராய்ச்சியாளர்கள் , இந்த நோய் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிய முயன்றனர்.

நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிஆர்பி மற்றும் இஎஸ்ஆர் போன்ற சில அடிப்படை ரத்த பரிசோதனைகளின் முடிவுகள் மோசமாக இருப்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இவை தவிர, பல குழந்தைகளின் டி-டைமர் (இரத்த உறைவு சோதனை) மற்றும் இருதயம் தொடர்பான சோதனைகளின் முடிவுகளும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வின் போது, ​​சுமார் 54 சதவிகித குழந்தைகளின் ஈ.சி.ஜி (இருதய பரிசோதனை) அறிக்கையும் சரியாக இல்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

எம்ஐஎஸ்-சி உள்ள குழந்தைகளில் 22 சதவீவி குழந்தைகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்பட்டன, எம்ஐஎஸ்-சி உறுதி செய்யப்பட்ட குழந்தைகளில் 71 சதவீத பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. அதே நேரத்தில், எம்ஐஎஸ்-சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 1.7 சதவிகிதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என லேன்செட் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஒரு ஆபத்தான நோய். ஆனால் சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சையுடன், பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்ற முடியும். இருப்பினும், இந்த நோயின் நீண்டகால விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எம்ஐஎஸ்-சி ஆபத்தை குறைப்பது எப்படி?

குழந்தைகள் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் எம்ஐஎஸ்-சி அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக் இன்டென்சிவ் கேர், கூறுகிறது.

எம்.ஐ.எஸ்-சி நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு 'இன்ட்ராவீனஸ் இம்யூனோகுளோபுலின்' மற்றும் ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த சிகிச்சையானது குழந்தைகளுக்கு எவ்வளவு சாதகமான விளைவைக் கொடுக்கும் என்பது குறித்து இன்னும் முழுதகவல்கள் கிடைக்கவில்லை என. 'தி பி.எம்.ஜே' என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கிறது.

அறிகுறிகளை சரியாக அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சைக்கான இந்திய அகாடமி, பெற்றோர்கள், குறிப்பாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் குழந்தைகளிடம் எம்ஐஎஸ்-சி போன்ற அறிகுறிகளைக்கண்டால் உடனே மருத்துவரிடம் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சி.வி.சி, ஈ.எஸ்.ஆர் மற்றும் சி.ஆர்.பி போன்ற குறைந்த கட்டண ரத்த பரிசோதனைகள் மூலமாகவும் இதைக் கண்டறிய முடியும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. சிஆர்பி போன்ற ஒப்பீட்டளவில் மலிவான சோதனையின் உதவியுடன் ஏழைக் குடும்பங்கள்கூட இதை கண்டறிய முடியும்.

இப்போது அமன் ஆபத்தான கட்டத்தை தாண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் சிறிது காலம் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என குழந்தை மருத்துவர் டாக்டர் அஜித் குமார் குறிப்பிட்டார். அமன் விஷயத்தில் மருத்துவர்களின் பெரிய கவலை இப்போது முடிந்துவிட்டது.

"அமன் சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்தது அவருக்கு நன்மை அளித்தது. இல்லையெனில் பின்னர் உடல் உறுப்புகளில் இரத்த உறைவு ஏற்படக்கூடிய ஒரு கட்டத்தில் அதை எதிர்த்து போராடுவது கடினமாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நாம் 100 குழந்தைகளில் ஒருவரை இழக்க நேரிடும்," என டாக்டர் அஜீத் குமார் தெரிவித்தார்,

இந்தியாவின் மக்கள் தொகையில் 26 சதவிகிம் பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இவர்களில் பாதி பேர் ஐந்து வயதிற்கு குறைவானவர்கள் என்றும் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக் இன்டென்சிவ் கேர் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கொரானாவின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில நிபுணர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் அறிகுறிகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என குழந்தை மருத்துவர்கள் கருதுகின்றனர்.

(குடும்பத்தின் வேண்டுகோளின் பேரிலும், அவர்களின் ரகசியத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கிலும் அமன் என்கிற பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :