அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது: நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை

அமைச்சர் மணிகண்டன்

பட மூலாதாரம், Twitter

நடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி என்பவர் அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஞாயிற்றுக் கிழமை காலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடோடிகள் என்ற படத்தில் நடித்துள்ள திரைக்கலைஞர் சாந்தினி சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மே 28ஆம் தேதியன்று சென்னை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், மணிகண்டனும் தானும் கணவன் - மனைவியைப் போல ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர் மூலம் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும் ஆனால், அவரது மிரட்டலால் அந்த கருக்களைக் கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையிலேயே இவற்றைச் செய்ததாகவும் ஆனால், மணிகண்டன் தற்போது அதற்கு மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகார் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, இ.பி.கோ. 313 - பெண்ணின் அனுமதியின்றி கருவைக் கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417- நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் மணிகண்டனை இன்று காலையில் காவல்துறையினர் கைது செய்தனர். எங்கு வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார், எங்கே வைத்து வசாரிக்கப்பட்டு வருகிறார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

விசாரணை முடிந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அவருடைய ஓட்டுனர், உதவியாளர், அவர் அமைச்சராக இருந்தபோது பணியிலிருந்த காவலர் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :