கொரோனா மூன்றாம் அலை: 8 பரிந்துரைகளை முன்வைத்த வல்லுநர் குழு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இரண்டாம் அலையின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் நிலையில், மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்காக தற்போதில் இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து 21 பேர் அடங்கிய வல்லுநர்கள் குழு அளித்த பரிந்துரைகள் லேண்சட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உயிர்மருந்தக நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரன் மஜும்தார் ஷா மற்றும் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி ஆகியோரும் இந்த வல்லுநர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் முன், அரசாங்கங்கள் தயாராக வேண்டும் என்று கூறி 8 பரிந்துரைகளை அவர்கள் அளித்துள்ளனர்.
என்னென்ன பரிந்துரைகள்?
- அடிப்படை சுகாதார சேவைகள் பரவலாக்கப்பட வேண்டும். கொரோனா பரவல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடும் என்பதால், ஒரே மாதிரியான நடவடிக்கைகள் அனைவருக்கும் சரியாக இருக்காது.
- ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை கட்டணங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வெளிப்படையான தேசிய கட்டண நிர்ணய கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்கள் மருத்துவத்திற்கு செய்யும் செலவு அவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது, மேலும் தற்போது இருக்கும் அனைத்து விதமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு கீழும் கொரோனா சிகிச்சை பெறும் வசதி கொண்டுவரப்பட வேண்டும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் அனைவருக்கும் தெளிவாக கொண்டு சேர்க்கும் படி செய்ய வேண்டும். சர்வதேச நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்கள், அதாவது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் மற்றும் அவர்களுக்கான சிகிச்சை, ஆரம்ப சுகாதாரம் குறித்து உள்ளூர் மொழியில் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் கூட இடம் பெற்றிருக்க வேண்டும்.
- கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட, தனியார் உள்ளிட்ட அனைத்து சுகாதாரத்துறை பிரிவுகளிலும் ஆட்களை நிர்ணயிக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு கவசங்கள், வழிமுறைகள், காப்பீடு மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
- கையில் இருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை பார்த்து, அனைத்து தரப்பினரும் பயன்படும் படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் பொதுமக்கள் நலனிற்கானது.
- பொதுமக்களுடன் ஒன்றிணைந்து, கொரோனாவுக்கு எதிராக போராட அவர்களின் பங்கேற்பை பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
- வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயார்படுத்தி, தரவுகளை சேகரிப்பதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டோர் வயது, பாலினம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதம், இறப்பு விகிதம், அதோடு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, சமூக ரீதியில் கொரோனா பரவல் கண்காணிப்பு, சிகிச்சை வழிமுறைகள் என அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.
- பல பணிகள் முடங்கி, பலரும் வேலையிழந்துள்ளதால், மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகமாகி இருக்கிறது. தொழில் சாரந்த வேலைகளில் பணியாளர்களின் வேலை நீக்கம் இருக்கக்கூடாது. மேலும் பொருளாதரம் சீரானதும், அந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








