தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சி: புதிய முயற்சிகளுடன் தடையின்றி தொடரும் வகுப்புகள்

கல்வி தொலைக்காட்சி

பட மூலாதாரம், KalviTVOfficial, Youtube

    • எழுதியவர், ஆ விஜயனாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`வீட்டுப் பள்ளி' என்ற பெயரில் வகுப்பறைகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளது, தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி. ஐந்தாயிரம் ஆசிரியர்கள், 60 லட்சம் மாணவர்கள், 9 தனியார் தொலைக்காட்சிகள் என தினசரி ஒளிபரப்பிலும் அசத்தி வருகிறது. எப்படி இயங்குகிறது அரசின் கல்வித் தொலைக்காட்சி?

`எங்க வீட்டுல ஆண்ட்ராய்டு போன் இல்ல. டி.வியில தினமும் வகுப்பெடுக்கறதால என் மகன் ஆர்வத்தோட படிக்கிறான். தேர்வு வருதோ இல்லையோ, பாடங்களை மறக்காம இருக்க ரொம்பவே உதவியா இருக்கு..!"

` நான் எழுத்தாளரா இருக்கேன். பள்ளி இல்லாததால பசங்க என்ன பண்ணப் போறாங்கன்னு கவலையா இருந்துச்சு. உங்க ஆசிரியர்கள் சொல்லித் தரும் விதம் மிக அருமை.. இதனால் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற என் பொண்ணு ஆர்வத்தோட படிச்சுட்டு வர்றா!'

` மதிய நேரத்துல மாணவர்களுக்கு நீங்க நடத்துகிற உளவியல் வகுப்பும் திருக்குறள் பாடல்களும் சிறப்பாக உள்ளது.. மாணவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும் இருக்கு!'

- தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சிக்குக் கடிதம் மூலம் கிடைத்த வரவேற்புகள் இவை. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தொலைக்காட்சி வாயிலாக கல்விச் சேவையை அரசு முன்னெடுத்து வருகிறது. அதிலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளை சிறப்புப் பள்ளியில் பயிலும் 6,000 மாணவர்களுக்காக சைகை மொழியிலும் வகுப்புகள் நடத்தப்படுவது இதன் கூடுதல் சிறப்பு. ` சைகை மொழி வகுப்புகளை ஆறாம் வகுப்பில் இருந்தே தொடங்குங்கள்' என ஊக்கம் கொடுத்திருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

எப்படி இயங்குகிறது கல்வித் தொலைக்காட்சி?

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாம் தளத்தில் கல்வித் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஊழியர்களுடன் தனியார் சேனல்களுக்கு இணையாக இங்கு படப்பிடிப்புத் தளம் இயங்கி வருகிறது. படப்பிடிப்பு, வீடியோ எடிட்டிங், தரக்கட்டுப்பாடு எனப் பல்வேறு பிரிவுகளும் உள்ளன. 2019 ஆகஸ்ட் மாதம் கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டாலும் 2020 ஜுலை முதல் ஒளிபரப்புகளை நடத்தி வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் தேவையை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது இதன் சிறப்பம்சம்.

இந்நிலையில், `அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வித் தொலைக்காட்சியை தி.மு.க அரசு தொடர்ந்து முன்னெடுக்குமா?' என்ற கேள்வி எழுந்தபோது,`கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கல்வித் தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வித் தொலைக்காட்சியாக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்' என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அதற்கேற்ப, புதுமையான நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் பணிகளில் அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்வி தொலைக்காட்சியை யூட்டியூப்பில் சப்ஸ்கிரைப் செய்து பார்ப்பவர்கள் 2 லட்சம் பேர் என்றாலும், தொலைக்காட்சிகளில் 60 முதல் 70 லட்சம் மாணவர்கள் பாடங்களை கவனிப்பதாகத் தெரிவிக்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

அதேநேரம், கல்வித் தொலைக்காட்சி சர்ச்சையில் சிக்கிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கடந்தாண்டு ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது, வள்ளுவருக்கு காவி உடை தரித்த காட்சி ஒன்று வெளியானது. இந்தச் சம்பவம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ` தமிழ்ப் பற்றும் மான உணர்வும் உள்ள எவராலும் இதனை ஏற்க முடியாது' என தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக, வீடியோக்களின் உள்ளடக்கத்தை பரிசோதிக்க தனிக் குழு ஒன்றும் கல்வித் தொலைக்காட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

பாடமெடுக்கும் ஆசிரியர்

பட மூலாதாரம், Getty Images

`` ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்புக்கு தமிழாசிரியர் இருந்தால் அவர்தான் ஆண்டு முழுவதும் வகுப்பெடுப்பார். கல்வித் தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் வகுப்பில் ஒரு பாடத்தை ஓர் ஆசிரியர் எடுத்தால், அடுத்த பாடத்தை இன்னொரு ஆசிரியர் எடுப்பார். ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனியாக வகுப்பெடுப்பதால் மாணவர்களால் சோர்வின்றி படிக்க முடிகிறது. அதுவும் ஒரு பாடப்பகுதிக்கு அரை மணிநேரம்தான். வகுப்பறைகள் இல்லாத குறையைப் போக்கும் வகையில் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றனர். பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் விடியலுக்கான தொலைக்காட்சியாக அரசின் கல்வி தொலைக்காட்சி சேவை இருக்கிறது" என்கிறார் பி.ஏ.நரேஷ். இவர் பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநராகவும் கல்வித் தொலைக்காட்சியின் சிறப்பு அலுவலராகவும் இருக்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில விவரங்களைப் பட்டியலிட்டார். ``11 ஆம் வகுப்பு மாணவருக்கு காலை 5.30 மணிக்குத் தொடங்கி 8 மணிக்குள் வகுப்புகள் முடிந்துவிடும். இதன்பிறகு பிளஸ் 1 மாணவர்களுக்கு மாலை 7 மணி முதல் 10.30 மணி வரையில் வகுப்புகள் இருக்கும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 1 மணி வரையில் வகுப்புகள் மாறி மாறி வரும். அனைத்துமே அரை மணிநேர வகுப்புகள்தான். அதன்பிறகு 1 முதல் 1.30 மணி வரையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள், ஆவணப்படங்கள் என ஒளிபரப்புவோம். மதியம் 1.30 முதல் இரவு 7 மணி வரையில் 2ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கப்படும்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் முழுமையான வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதால், இணைப்புப் பாடப் (Bridge courses) பயிற்சிகளும் படித்ததை நினைவுகூர்வதை பரிசோதிக்கும் வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கல்வி தொலைக்காட்சியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடக்கும்போது 2 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை பிற தனியார் தொலைக்காட்சிகளில் காணலாம். தனியார் தொலைக்காட்சிகளை கவனிக்க தவறுகிறவர்கள், கல்வித் தொலைக்காட்சியை பார்க்கலாம். அதற்கேற்ப வகுப்புகளை அட்டவணைப்படுத்தியுள்ளோம்" என்கிறார்.

`கொரோனா காலத்தில் ஆசிரியர்களை எப்படி ஒருங்கிணைக்க முடிகிறது?' என்றோம். ``தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET) பாடம் எடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒத்துழைப்புடன் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை டயட்டுக்கு வரச் சொல்வோம். அங்கு வகுப்பெடுப்பது படம் பிடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு டயட்டிலும் கேமராமேன், எடிட்டிங் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள். ஆசிரியர்களுக்குப் பாடம் எடுப்பதற்காக தலா 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படுவதால் 12 ஆம் வகுப்புக்கு அவர்கள் வரும்போது பாடங்களை எல்லாம் லேப்டாப்பில் அப்லோடு செய்து கொடுத்துவிடுவோம். இதனால் அவர்கள் கல்வி தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. முன்பெல்லாம் பாடங்களை டவுன்லோடு செய்து கொடுத்தனர். தற்போது வீடியோ வடிவில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கின்றனர். இது அவர்களுக்கு மிகவும் கை கொடுக்கிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் பாடங்களை ஒளிபரப்பிய பிறகு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு `தடையும் விடையும்' என்ற வினா விடை பகுதியை ஏற்பாடு செய்துள்ளோம்.

வினாக்களை எழுப்பி அதற்கு விடைகளைத் தரக் கூடிய நிகழ்ச்சியாக இது இருக்கிறது. பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பகுதி ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் நடனம், ஓவியங்கள் வரைவது போன்ற பொதுவான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அதனை அனைத்து மாணவர்களும் கண்டுகளிக்கலாம். அதேநேரம், கல்வித் தொலைக்காட்சியையும் தனியார் தொலைக்காட்சிகளையும் மாணவர்கள் பார்க்கத் தவறிவிட்டால், நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் 34 பாடங்களையும் யூட்யூப்பில் (kalvitvofficial) அடுத்தநாள் காலையில் பார்த்துக் கொள்ளலாம். அதில் வகுப்பு வாரியாக வீடியோக்கள் இருக்கும். இதனால் எந்த இடத்தில் இருந்தாலும் மாணவர்களால் வகுப்புகளை கவனிக்க முடியும்" என்கிறார்.

`கல்வி தொலைக்காட்சிக்கு அமைச்சர் கொடுத்த அறிவுரை என்ன?' என்றோம். `` நேரலையாக மாணவர்களோடு உரையாடும் வகையிலும் கல்வியை போதிக்கும் வகையிலும் அதேநேரம் பொழுதுபோக்கும் வகையிலும் செயல்படுத்துங்கள் எனக் கூறியுள்ளார். பாடங்களை எடுத்துக் கொண்டேயிருந்தால் வகுப்புகள் போரடிக்கும் என்பதால் ஜனரஞ்சகமான முறையில் எளிமையான எடுத்துக்காட்டுகளோடு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்" என்கிறார்.

மேலும், ``கொரோனா காலத்தில் அரசுக்கு உதவும் வகையில் ஒன்பது தனியார் சேனல்களில் கல்வித் தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. டி.டி.ஹெச்சில் 24 மணிநேரமும் வகுப்புகளைக் கவனிக்கலாம். தனியார் சேனல்கள் தங்களால் இயன்ற அளவுக்கு நேரத்தை ஒதுக்கித் தருகின்றனர். சிலர் 2 மணிநேரங்களைக் கூட கொடுத்துள்ளனர். இதற்கென எந்தவித கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. கல்வித் தொலைக்காட்சியின் வளர்ச்சிக்காக பள்ளிக்கல்வித் துறை செயலர், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி சிறப்பாகக் கொண்டு செல்வதை ஊக்குவிக்கின்றனர். விரைவில் புதுமையான முறையில் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :