அதார் பூனாவாலா: சீரம் தடுப்பூசி சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?

அதார் பூனாவாலா
    • எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
    • பதவி, பிபிசி மராத்தி நிருபர்

2020 செப்டம்பரில் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாகத் தயாரித்த போது, நாங்கள் அந்நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டோம். இது தவிர, உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதர்கள் மீது பல்வேறு தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நேரமது.

இந்தியாவிற்கும் உலகிற்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை விநியோகிப்பதில் சீரம் நிறுவனம் முக்கிய மையமாக இருக்கும் என உலகம் அறிந்திருந்தது.

பெருமளவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்கும் நாளில் நாங்கள் சீரம் ஆலையில் இருந்தோம். அப்போது மனிதர்கள் மீதான இந்த தடுப்பூசியின் சோதனைகள் உலகில் எங்கும் நிறைவடைந்து இருக்கவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் எந்த அரசாங்கமும் இந்தத் தடுப்பூசிக்கு அதுவரை ஒப்புதலும் அளித்திருக்கவில்லை.

இருப்பினும், அவசரநிலையைக் கருத்தில் கொண்டு, ஒப்புதல் பெறுவதற்கு முன்பே சீரம் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்க துணிந்து முடிவு செய்தது. ஒரு வேளை சோதனைகள் தோல்வியடைந்திருந்தால், இந்த உற்பத்தி அனைத்தும் வீணாகியிருக்கும். ஆனால் உலகத்துக்கு அப்போது ரிஸ்க் எடுப்பதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை.

கோவிஷீல்ட்டை உற்பத்தி செய்யும் ஆலையை நாங்கள் பார்த்தோம். இந்த ஆலை பல ஆண்டுகளாகவே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது, ஆனால் அந்த இக்கட்டான சூழலில் அது செய்த சாதனை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எங்களுடன் வந்த நிறுவன அதிகாரி எங்களை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த ஆலை சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ஹடப்சர் வளாகத்தில் உள்ளது. ஒரு உள் சாலை இந்த வளாகத்தை மஞ்சரியில் உள்ள மற்றொரு வளாகத்துடன் இணைக்கிறது.. இது பண்ணைகளுக்கு மேலே இயங்கும் மேம்பாலம் ஆகும். அந்த மேம்பாலம் சீரம் நிறுவனத்துக்குச் சொந்தமான தனி சாலையாகும். இது நேரடியாக மஞ்சரி வளாகத்துடன் இணைகிறது.

அதார் பூனாவாலா

பட மூலாதாரம், ADAR POONAWALLA/INSTAGRAM

ஒரு காரில் நாங்கள் அங்கு சென்றபோது, ஒரு பெரிய ஹெலிபேட்-ல் ஒரு ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டோம். ஹெலிபேட்டின் மறுமுனையில் ஒரு பெரிய பயணிகள் விமானமும் இருந்தது. இது ஒரு சிறிய சார்டர்ட் விமானம் அல்ல அது. ஏர்பஸ் 320 பயணிகள் விமானமது.

நாங்கள் சீரம் நிறுவனத்துக்குச் சொந்தமான தடுப்பூசிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்தோம், பிறகு ஒரு 'விமான நிலையத்துக்கு' சென்றடைந்தோம். என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுடன் வந்த அதிகாரி, "இது அதார் பூனாவாலாவின் அலுவலகம். இந்த விமானம் இங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது, அதுவே அதார் பூனாவாலாவின் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

இந்த ஹெலிபேடிற்கு அருகிலுள்ள கட்டடம் அப்படியே ஒரு விமான நிலைய முனையம் போல் காட்சியளித்தது. ஒரு விமானம் தரையிறங்கி முனையத்தில் நிறுத்தப்பட்டதைப் போல இருந்தது. அலுவலகமும் அதே ரீதியில் 'டெர்மினல் ஒன்' என்று பெயரிடப்பட்டிருந்தது. அதார் பூனாவாலா அன்று புனேவில் இல்லை, எனவே நாங்கள் அவர் அலுவலகத்தைக் காண முடியவில்லை.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து பூனாவாலாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் பரவலான பேசுபொருளானது. தங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளுக்காகக் காத்திருந்த கிராமவாசிகள் முதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் வரை அனைவரும் இதைப் பற்றி பேசினர். தடுப்பூசிகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் இந்தியாவில் இருக்கிறார் என்பதை விட, புனேவில் இருக்கிறார் என பலரும் அறிந்திருக்கவில்லை.

கொரோனா தடுப்பூசிக்கு ஏங்கிக்கொண்டிருந்த உலகின் தேவையை பூர்த்தி செய்ய சீரம் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது. இந்தத் தடுப்பூசி நவீன மருத்துவ வரலாற்றில் இதுவரை கண்டிராத வேகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகள், கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்காகத் தங்கள் ஆற்றல்களை முதலீடு செய்து வந்தன. பெரும்பாலான மக்கள் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனீகா மீதே அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

இந்த ஆரம்ப கட்டத்திலேயே சீரம் நிறுவனம் அஸ்ட்ராசெனீகாவுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்தியா நிம்மதி பெருமூச்சு விட்டது. கோவிஷீல்டுடன் சீரம் நிறுவனம் நின்று விடவில்லை. அந்நிறுவனம் நோவாவேக்ஸ் தடுப்பூசியைத் தயாரிக்க ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. மேலும் சொந்தமாக இரண்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது.

பிரதமருடன் அதார் பூனாவாலா

பட மூலாதாரம், ADAR POONAWALLA/INSTAGRAM

2021 ஜனவரியில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. சீரம் ஆலையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் தடுப்பூசி மருந்துகள் அடங்கிய பெட்டிகளை கொண்டு செல்ல வேண்டிய ஒரு வாகனத்தில் அதார் பூனாவாலா உடன் அமர்ந்திருப்பதைப் போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாயின.

இந்தியாவில், கோவாக்சினுடன் சேர்ந்து, கோவிஷீல்டும் பயன்படுத்தப்பட்டது. இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி கோவிஷீல்ட். சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான கோவிஷீல்ட் டோஸ்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கோவேக்ஸ் நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி விநியோகமும் தொடங்கியது. பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இந்தியாவில் தடுப்பூசிகளின் தேவை கணிசமாக உயர்ந்தது, மாநிலங்களின் அழுத்தம் அதிகரித்தது, தேவை மற்றும் விநியோக விகிதம் தலைகீழாக மாறியது, கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

மே 1ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டதால் நிலைமை ஈனும் மோசமடைந்தது.

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வரத்து சீராகவோ, போதுமானதாகவோ இல்லை. மாநில அரசுகள், தடுப்பூசிகளும் பணம் கொடுக்க தயாராக உள்ளன, ஆனால் தடுப்பூசிகளின் உற்பத்தி இன்னும் தேவைக்கு நிகராக அதிகரிக்கவில்லை. சீரம் நிறுவனம் இப்போது தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.

தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகள் இப்போது இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி இயக்கமோ நத்தை வேகத்தில் நகர்கிறது. கடும் விமர்சனம் மற்றும் நம்பிக்கையின் மையமாக சீரம் நிறுவனமும், அதன் தலைவர் அதார் பூனாவாலாவும் இருக்கின்றன.

அதார், அவரது தந்தை சைரஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து சென்றுள்ளனர். அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததால் அவர்கள் இங்கிலாந்து சென்றதாக வதந்தி பரப்பப்படுகிறது. அவர்கள் பிரிட்டனில் ஒரு பெரிய முதலீட்டை அறிவித்துள்ளனர். ஆனால், பூனாவாலா மற்றும் சீரம் நிறுவன சாம்ராஜ்ஜியம், எப்போது, எப்படி தன் சிறகுகளைப் பரப்பத் தொடங்கியது?

குதிரைப் பண்ணையிலிருந்து தடுப்பூசி வர்த்தகத்துக்கு விரிவாக்கம்

அதார் பூனாவாலா

பட மூலாதாரம், ADAR POONAWALLA/INSTAGRAM

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் பூனாவாலா குடும்பம் பூனாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பல பார்சி குடும்பங்கள் பல்வேறு பிரிட்டிஷ் காலனிகளில் குடியேறி நிர்வாகம் மற்றும் வியாபார நிர்வாகிகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்தன. இந்தக் குடும்பங்கள் அவர்கள் குடியேறிய இடங்களின் பெயர்களைத் தங்கள் பெயர்களுடன் இணைத்துக் கொண்டதையும் கவனித்தோம்.

பூனாவாலா ஆங்கிலேயர் காலத்தில் புனே நகரவாசிகளானார்கள். இந்தத் தொழில்முனைவோர் குடும்பம் சுதந்தரத்திற்கு முன்பு ரியல் எஸ்டேட் துறையில் கால் ஊன்றியிருந்தது. ஆனால், அவர்களின் முக்கிய அடையாளமாக இன்றும் அறியப்படுவது குதிரை வளர்ப்பு தான்.அதாரின் தாத்தா சோலி பூனாவாலா குதிரை வளர்ப்புத் தொழிலில் இறங்கினார்.

அவர் பூனாவாலா ஸ்டட் ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பந்தயத்திற்காகச் சிறந்த தரமான குதிரைகளை வளர்க்கத் தொடங்கினார். பூனாவாலாக்களின் பெயர் குதிரைப் பண்ணையுடன் இணைத்தே பார்க்கப்பட்டது. மன்னர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தின் பிற உயரடுக்கு உறுப்பினர்கள் குதிரைப் பந்தயத்தில் பங்கெடுத்தனர். பூனாவாலா குடும்பத்தினர் இந்த வியாபாரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டனர். இப்படியாகத் தங்களது வியாபார சாம்ராஜ்யத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

பூனாவாலா குடும்பத்தின் அடுத்த தலைமுறை, தம் வணிகத்தைப் பன்முகப்படுத்தியது. 1960 களில் சீரம் நிறுவனம் நிறுவப்பட்டது. சைரஸ் குதிரை வளர்ப்பு வணிகத்தை கைப்பற்றியபோது, அவர் பலராலும் கவனிக்கப்படாத ஒரு புதிய வணிக வாய்ப்பைக் கண்டார். தடுப்பூசி உற்பத்தியின் இந்த வணிகத்தின் எதிர்காலத்தை யாராலும் அப்போது அறுதியிட்டுக் கூறியிருக்க முடியாது. அந்தக் காலகட்டத்திலேயே துணிந்து இறங்கினார் சைரஸ். அந்த நேரத்தில் தடுப்பூசி உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. தவிர, அது பொதுத்துறையின் கீழ் இருந்தது.

மும்பையில் உள்ள ஹாஃப்கைன் நிறுவனம் தடுப்பூசிகளை தயாரித்தது. பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்ற பூனாவாலாவின் ஸ்டட் ஃபார்ம்ஸ் குதிரைகள் பாம்பு கடி மற்றும் டெட்டனஸுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தடுப்பூசிகளுக்குத் தேவையான ஆன்டிபாடிகள் குதிரைகளின் ரத்தத்தில் உள்ள சீரம்-ல் இருந்து தயாரிக்கப்பட்டு அவை தடுப்பூசிகளின் பெருமளவிலான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன. குதிரைகளின் இந்த பயன்பாட்டின் சாத்தியக் கூற்றை சைரஸ் உணர்ந்தார். சீரம் நிறுவனத்தைத் தொடங்கினார்.

"நாங்கள் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்ற குதிரைகளை மும்பையில் உள்ள ஹாஃப்கைன் நிறுவனத்திற்கு வழங்கிவந்தோம். அங்கு பணிபுரியும் ஒரு மருத்துவர் என்னிடம், 'உங்களிடம் குதிரைகள் உள்ளன, நிலமும் உள்ளது. எனவே நீங்கள் தடுப்பூசி உற்பத்தித் தொழிலில் நுழைய விரும்பினால் உற்பத்தி ஆலையை மட்டுமே அமைக்க வேண்டும்' என்று அறிவுரை கூறினார் என இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சைரஸ் பூனாவாலா கூறினார்.

அதார் பூனாவாலா

பட மூலாதாரம், REUTERS/FRANCIS MASCARENHAS

அந்த மருத்துவரின் ஆலோசனையில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அவர் கண்டார். 1966 இல், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இந்தியா உட்பட உலகம் முழுவதும், தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தி, பெரிய அரசாங்க தடுப்பூசி இயக்கங்கள் ஆகியவற்றின் ஆரம்ப காலம் அது. சீரம் இதுபோன்ற பல நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்கியது.

ஹாஃப்கைனிலிருந்து பல ஆராய்ச்சியாளர்களும் சீரம் நிறுவனத்தில் வந்து சேர்ந்தனர். 1971 ஆம் ஆண்டில் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களுக்கான எதிரான தடுப்பூசிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சின்னம்மை மற்றும் போலியோ ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரமும் அதே நேரத்தில் தான் தொடங்கியது.

இந்த பிரசாரங்கள் பொதுவாக அரசாங்க நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட உற்பத்தியையே பெருமளவில் நம்பி இருந்தது. ஆனால் சீரம் இந்தத் தளத்துக்குள் நுழைவதற்கான வாய்ப்பை ஆராய்ந்தது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து, உற்பத்தியை அதிகரித்தது, இதனால் விலை குறைந்தது.

(இந்த கட்டுரையை பின்வரும் மொழியில் அவற்றின் மீது கிளிக் செய்து படிக்கலாம்: இந்தி)

இன்றைப் போலவே, அந்த நாட்களிலும், தடுப்பூசி இயக்கங்கள் உட்பட, பொது சுகாதாரத்திற்கான திட்டங்களை அரசாங்கமே கட்டுப்படுத்தி வந்தது. எனவே, சீரம் நிறுவனம், இந்த நிர்வாகக் குழப்பங்களுக்கு இடையில், தனது பாதையை உருவாக்க வேண்டியிருந்தது.

"பல்வேறு வகையான அனுமதிகளைப் பெற மாதங்கள், ஆண்டுகள் கூட ஆகும். முதல் இருபத்தைந்து ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தன. பின்னர் எங்கள் நிதி நிலைமை மேம்பட்டது, சில சரியான நபர்கள் எங்களுடன் சேர்ந்து அரசாங்க அனுமதி பத்திரங்கள் போன்ற ஆவணங்களை சரியாக கையாளும் பணிகளை திறம்பட செயல்படுத்தினர், மேலும் டெல்லியில் உள்ள அரசாங்க அதிகாரிகளிடம் கூட தேவையான விஷயங்களை முறையிட்டு, ஆவணங்களைப் பெற்றனர். இதை நான் வேண்டுமென்றே அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன், ஏனென்றால் இன்றும் அதே நிலைமை தான் நிலவுகிறது. இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், அது அனுமதி பெறுவதற்கான செயல்முறையை தாமதப்படுத்தும். இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகும், சீரம் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் சந்தேகிக்கப்படவில்லை" என சைரஸ் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

சைரஸின் நிர்வாகத்தின் கீழ், சீரம் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியில் தனது முற்றொருமையை நிலைநாட்டியதுடன், சைரஸ் பூனாவாலா மதிப்பிற்குரிய பணக்கார ஆளுமைகளில் ஒருவரானார். சீரம் நிறுவனத்தின் ஆரம்ப கால மூலதன முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே, இன்று ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் பட்டியலில் சைரஸ் பூனாவாலா 165 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பட்டியலின் படி அவர் இந்தியாவில் ஆறாவது பணக்காரர்.

அதாரின் வருகைக்குப் பிறகு 35-ல் இருந்து 165 நாடுகளுக்கு வர்த்தக கிளை பரவல்

அதார் பூனாவாலா

பட மூலாதாரம், ADAR POONAWALLA/INSTAGRAM

அதார் பூனாவாலா இங்கிலாந்தில் தனது கல்வியை முடித்து, 2001 ஆம் ஆண்டில் சீரம் இன்ஸ்டிட்யூட் என்கிற குடும்பத் தொழிலில் நுழைந்தார். அவர் அந்நிறுவனத்தின் விற்பனைத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். சீரம் நிறுவனத்தின் புதிய, விரிவாக்கப்பட்ட செயல்பாட்டில் அதாரின் பங்கு முத்திரை பதித்தது. சீரம் நிறுவனத்தின் செயல்பாட்டை இந்தியா மற்றும் அதன் கடினமான செயல்முறை அமைப்புக்குள் மட்டுமே கட்டுப்படுத்த அவர் விரும்பவில்லை.

"அது அவமானகரமானது மட்டுமல்ல, புதிதாக எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை. முட்டாள்தனமான அமைப்பாகத் தோன்றியது எனக்கு." என ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் அதார் கூறினார். அதார் பூனாவாலா 2011 இல் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். உற்பத்தித் திறனை அதிகரித்தல், சீரம் தடுப்பூசிகளை நிறைய வெளிநாடுகளுக்கு விநியோகிப்பது என அவர் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினார்.

விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சீரம் நிறுவனம், 2012 இல் ஹாலண்டில் ஒரு அரசு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை வாங்கியது. இந்நிறுவனம். கொரொனா தாக்கிய போது, இதை எதிர்கொள்ள, தடுப்பூசி ஒன்றே வழி என்றான நிலையில், உலகம் முழுவதும் சீரம் நிறுவனத்தையே அண்ணாந்து பார்த்தது. காரணம், இது ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது, மேலும் 2011 வரை 35 நாடுகளுக்குத் தடுப்பூசி விநியோகித்து வந்த இந்த நிறுவனம், இப்போது 165 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. சீரம் நிறுவனத்தை ஒரு உலகத் தடுப்பூசி வங்கியாக மாற்ற அதார் பூனாவாலா விரும்பினார்.

இந்த விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப்படுவதற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது. இது ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான வணிகம் என்று பூனாவாலா அடிக்கடி குறிப்பிடுகிறார். அவர்களது குடும்பத்தினர் மட்டுமே அதில் முதலீடு செய்கிறார்கள். எனவே, இது குடும்ப பணம் மட்டுமேயன்றி, வேறு யாரிடமிருந்தும் பணம் பெறுவதில்லை. தனியார் முதலீட்டாளர்களின் மூலம், தனியார் ஈக்விட்டியிலிருந்து நிதி திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அது விரும்பினாலும், அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால், ஒரு கட்டத்தில் பங்குச் சந்தைப் பொதுப் பட்டியலில் இணைய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அப்படி நடந்திருந்தால், கொரோனா தடுப்பூசிக்கான இறுதி ஒப்புதல் பெறுவதற்கு முன்பு பூனாவாலா இவ்வளவு முதலீடு செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவரால் துணிந்து இதில் இறங்க முடியாமலே கூடப் போயிருக்கலாம்.

அதார் பூனாவாலா

"நாங்கள் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்ல என்பதால் நாங்கள் துணிந்து இந்த முடிவை எடுக்க முடிந்தது. நாங்கள் பகிரங்கமாக பட்டியலிடப்பட்டிருந்தால், முதலீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்களுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும்," என ஃபோர்ப்ஸ் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அதார் பூனாவாலா கூறினார்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பூனாவாலாவின் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டு மையக் கருப்பொருள்களாகத் துணிவு மற்றும் பிரம்மாண்டம் ஆகியவை இருந்துள்ளன. கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கும் இது பொருந்தும். மருத்துவப் பயன்பாடு நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த போதே, தடுப்பூசிக்கு அதிக முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அவர்கள் மே 2020 இல் ஆஸ்ட்ராசெனீகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் சீரம் நிறுவனம் ஒரு ஆண்டில் 100 டோஸ் தடுப்பூசியைத் தயாரிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இடம், தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் மூலப்பொருள் ஆகியவற்றில் பெரும் முதலீடு தேவைப்பட்டது. ஏழை நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசியை விநியோகம் செய்ய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைவதற்கும் சீரம் முடிவு செய்தது.

இந்தியாவுக்கான தடுப்பூசி விநியோகப் பொறுப்பையும் இந்நிறுவனம் தன் தோலில் சுமந்தது. ஆஸ்ட்ராசெனீகாவுடன் கோவிஷீல்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, மேலும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கு வேறு சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது. மேலும், சீரம் நிறுவனம், தனது சொந்த சுயாதீன ஆராய்ச்சியில் முதலீடு செய்தது. சீரம் நான்கு முதல் ஐந்து கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. எனவே, சீரம் நிறுவனம் இந்தியாவில் இருப்பதைப் பார்த்து, இந்தியா மீது பொறாமை ஏற்படுவதாக மற்ற நாடுகளின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூறினர்.

தடுப்பூசி வழங்கல் தொடங்கப்பட்ட பின்…

அதார் பூனாவாலா

பட மூலாதாரம், ANI

பூனாவாலா மற்றும் சீரம் நிறுவனம், நிறுவப்பட்ட காலத்திலும், அதன் வளர்ச்சியிலும், கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலும் தனது தொலைநோக்குப் பார்வையை நிரூபித்தனர். ஆனால், தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியவுடன் பாராட்டுகளுடன் அவர்கள் விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்ததே இதற்குக் காரணம்.

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. இது தடுப்பூசி இயக்கத்துக்கும் அதிக அழுத்தம் கொடுத்தது. ஆனால், உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமான கொரோனா தடுப்புசி மருந்துகள் கிடைக்கவில்லை. இந்தியாவின் செயல் திறனற்ற மற்றும் தவறான தடுப்பூசி கொள்கையே இந்த நிலைக்குக் காரணம்.

ஆரம்ப கட்டத்தில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் வழங்கப்படும்போது, ஏற்கனவே பல்வேறு நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. முறையான திட்டமிடலுடன் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படவில்லை. தடுப்பூசி வழங்கல் பல்வேறு வயதினருக்கும் அனுமதிக்கப்பட்டது. தேவையான உற்பத்தி இல்லாத நிலையில், மாநில அரசுகள் தடுப்பூசிகளைத் தாமே வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. பிற நாடுகளில் கிடைக்கும் தடுப்பூசிகளுக்கான முன்கூட்டிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவில்லை. இந்தக் காரணங்கள் அனைத்தும் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டன. இந்தப் பின்னணியில், சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டிருந்த போதும் இந்த நிலைமை ஏன் வந்தது என அரசாங்கத்திடமும் சீரம் நிறுவனத்திடமும் கேள்விகள் எழுப்பப்படுவது மிகவும் இயல்பானது.

தடுப்பூசி இயக்கம் தொடங்குவதற்கு முன்னரே, அதார் பூனாவாலா, இதற்கு என்னென்ன முன் நடவடிக்கைகள் தேவை என்பது குறித்து ஆலோசனை வழங்கியிருந்தார். அனைவருக்கும் இரண்டு டோஸ்கள் போட இந்தியா விரும்பினால், அதற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என அவர் ட்வீட் செய்திருந்தார். ஆர்டர் கிடைத்த பிறகு தடுப்பூசிகள் தயாரிக்க சிறிது கால அவகாசம் பிடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கவும் அனைத்து மருந்துகளையும் மத்திய அரசுக்கே வழங்கவும் அவர் ஒரு கொள்கையை செயல்படுத்தினார். ஒப்பந்தங்களின் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டிய பிற ஏழை நாடுகள் குறித்தும் அவர் பேசினார். உற்பத்தி செலவுகளுக்கும், தடுப்பூசி அரசுக்கு வழங்கப்படும் விலைக்கும் வித்தியாசம் உள்ளது. இதற்கிடையில், தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான சில மூலப்பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தபோது, அதார் பூனாவாலா அது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை டேக் செய்து ட்வீட் செய்தார்.

இருப்பினும், தடுப்பூசிக் கொள்கை மற்றும் தடுப்பூசி திட்டத்துக்குஎதிரான விமர்சனங்கள் தொடர்கின்றன. சீரம் மற்றும் அதார் பூனாவாலா ஆகியோர் தங்கள் நிலையை மீண்டும் தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. மாநிலங்களே நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு அனுமதித்த பின்னரும், தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கான சாத்தியமான காலம் இன்னும் அறியப்படவில்லை.

ஒரே தடுப்பூசி ஏன் மத்திய அரசுக்கு ரூ .150 க்கும், மாநிலங்களுக்கு ரூ .400 க்கும் விற்கப்படுகிறது என்பது குறித்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளின் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். சீரம் நிறுவனம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சீரம் மற்ற நாடுகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின.

சில நாட்களுக்கு முன்பு அதார் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஒன்று, இந்தியாவின் வரி செலுத்துவோரின் பணத்துடன் தயாரிக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதில்லை, இரண்டாவதாக, இந்த ஆண்டு இறுதி வரை தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படாது. ஆனால், தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக வேறு சில நாடுகளுக்கு நாம் வாக்கு கொடுத்துள்ளதையும் பூனாவாலா நினைவுபடுத்தியுள்ளார். கொரோனாவின் முதல் அலையின் போது நாம் மற்ற நாடுகளுக்கு உதவினோம், எனவே அவை இப்போது நமக்கு உதவுகின்றன என்று அதார் பூனாவாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது சீரம் எதிர்கொள்ளும் சிக்கலான சூழ்நிலையை சுட்டிக்காட்டியது.

இந்தச் சர்ச்சைகள் தீவிரமடைந்து வந்த நேரத்தில், அதார் பூனாவாலா லண்டனுக்குச் சென்றார். அங்குள்ள ஒரு உள்ளூர்ச் செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்த அவர், சில விஷயங்களைப் பற்றிப் பேசினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்குப் பாதுகாப்பு அளித்திருந்தது. அதார் லண்டன் சென்றார். மேஃபேர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டை பெரிய தொகைக்குக் குத்தகைக்கு எடுத்தது உள்ளூர் ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்தப் பின்னணியில், சீரம் நிறுவனம், தன் உற்பத்தியை இந்தியாவுக்கு வெளியிலும் தொடங்கும் என அவர் பேட்டியில் கூறினார். பின்னர் லண்டனில் பெரிய முதலீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் சீர் கெட்டுப் போயுள்ளதாலேயே அவர் வெளிநாடு சென்றாரோ என்ற சந்தேகம் எழுந்தது.

பூனாவாலா குடும்பமும் சீரம் நிறுவனமும் அத்தகைய சந்தேகங்களை மறுத்துள்ளன. இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து, அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பூனாவாலா குடும்பம் லண்டனில் இருந்து புனேவுக்கு எப்போது திரும்பும் என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை எதுவும் இல்லை.

பூனாவாலாவின் கண்ணியமான வாழ்க்கை

கொரோனா தடுப்பூசி அதார் பூனாவாலாவைப் பேசு பொருளாக மாற்றியிருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தினரும் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சமூக வாழ்க்கைக்காக எப்போதும் விவாதப் பொருளாக இருந்து வந்துள்ளனர். புனேவில் உள்ள குதிரைப் பண்ணை மற்றும் பூனாவாலா குடும்பத்துக்குச் சொந்தமான பிற பண்ணை வீடுகள் பிரம்மாண்டமானவையே. ஆனால் அவர்கள் லண்டனின் மேஃபேர் பகுதியில் குத்தகைக்கு எடுத்துள்ள பகட்டான வீடு மற்றும் அதற்காக அவர்கள் செலுத்திய தொகை ஆகியவை விவாதப் பொருளாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில், மும்பையின் கடலோரத்திற்கு அருகிலுள்ள முந்தைய அமெரிக்க தூதரக வளாகத்தில் இருந்த ஒரு பெரிய அரண்மனையை வாங்க அவர் கிட்டத்தட்ட 11 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டார். அது அப்போது மும்பையில் மிகவும் விலையுயர்ந்த வீடாக இருந்தது.

ஒரு விமானத்தை ஒரு அலுவலகமாக மாற்றுவதற்கான அவரது முடிவிலும், புனேவில் உள்ள அவரது வீடான 'அதார் அபோட்'- மேற்கூரையின் வனப்பையும் பார்த்தால் பிரம்மாண்டத்தின் மீது அவருக்கிருக்கும் ஈர்ப்பைப் புரிந்து கொள்ளலாம்.

அதார் பூனாவாலாவின் வாழ்க்கை முறை குறித்து ஃபோர்ப்ஸ் இந்தியாவில் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, அவரது புனே வீட்டின் மேற்கூரையில், மைக்கேலேஞ்சலோவின் ஓவியங்களின் பிரதிகள் வரையப்பட்டுள்ளன. இந்த வீட்டில் வேறு பல பிரபலமான ஐரோப்பிய ஓவியர்களின் ஓவியங்களின் பிரதிகளும் உள்ளன. முந்தைய மன்னர்களிடமிருந்து வாங்கப்பட்ட தொன்மையான தொங்கு விளக்குகளின் தொகுப்பு தன்னிடம் உள்ளது என்றும் அதார் குறிப்பிடுகிறார்.

அவரது தந்தை சைரஸைப் போலவே, அதாருக்கும் உலகெங்கிலும் உள்ள விலையுயர்ந்த கார்களின் மீது ஆர்வமுண்டு. ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி மற்றும் லம்போர்கினி போன்ற பிராண்டுகளை உள்ளடக்கிய 20 கார்கள் அவரிடம் உள்ளன.

அவர் தனது மகனுக்கு மெர்சிடிஸ் இ-கிளாஸ் கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இது சீனாவிலிருந்து பேட்மொபைலாக மாற்றப்பட்டது. அதார் பூனாவாலா வேகத்தின் சாம்பியன் ஆவார், மேலும் அவர் போயிங் 737, ஃபார்முலா-ஒன் மற்றும் ஃபைட்டர் ஜெட் ஆகியவற்றின் சிமுலேட்டர்களைத் தனது வீட்டில் வைத்துள்ளார். பாலிவுட் விருந்துகளில் அதார் மற்றும் அவரது மனைவி நடாஷா இருப்பதும் அதிக கவனத்தை ஈர்க்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :